பெண்களே கவர்ச்சி வேண்டாம்… கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை
மற்றவர்கள் நம் உடை அலங்காரத்தைப் பார்த்து ரசிக்கலாம்; ஆனால், ருசிக்கவும் வேண்டும் என்ற எண்ணம், ஆண்கள் மனதில் ஏற்படா வண்ணம் நடப்பது, நம் கடமை.
பெண்களே கவர்ச்சி வேண்டாம்… கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை
ஒரு பெண் செய்யும் சின்ன தவறான காரியம் கூட, ஒரு வரலாறாக, ஒரு தலைமுறையின் பதிவாக பார்க்கும் சூழ்நிலை இன்றைய சமுதாயத்தில் உள்ளது.
ஒரு பெண், தான் தனித்திறமை உள்ளவள், பல சாதனைகளை செய்ய முடிந்தவள், பல இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறன் படைத்தவள், தன் இலக்கை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க தெரிந்தவள் என்பதை வெளிக்காட்ட, மற்றவர்கள் பாராட்டும்படி நடக்க, தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால், பெண்களின் தற்போதைய நிலையை, சமூக முன்னேற்றத்தில் அவர்களின் பங்கை ஆராய்ந்து பார்த்தால், திருப்திகரமானதாக இல்லை என்று தான் கூறத் தோன்றுகிறது.
எல்லா துறைகளிலும் பெண்கள் ஜெயித்து வரும் வேளையில், இது என்ன புதுக்கதை என்று கோபப்படக் கூடாது. நன்கு கூர்ந்து ஆராய்ந்தால், பெண்களின் மாறிய மனநிலையை புரிந்து கொள்ளலாம். பெரும்பாலான பெண்கள், தங்களை முன்னிறுத்த, நான்கு பேர் பாராட்ட, கிரீடம் சூட்டிக் கொள்ள என, தங்களின் வெளிப்புற தோற்றத்திற்கே முக்கியத்துவம் தர முயல்கின்றனர்.
உடுத்தும் உடை, தற்போதைய பெண்களின் மூச்சாகவே மாறி விட்டது எனலாம். உடலை மறைக்கத்தான் உடை என்பதெல்லாம் பழங்கதை. உடலை வெளிச்சம் போட்டு காட்டத்தான், புதுப்புது நவ நாகரிக உடைகள் என்ற கட்டத்திற்கு வந்து விட்டோம்.
ஓர் உடை அழகாக இருக்கிறது என்பதே, அதை நாம் தேர்ந்தெடுப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது. அது, நம் உயரம், உடல் அமைப்பு, வயது, சமுதாயத்தில் நம் நிலை இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அமைய வேண்டும். ஆனால், இப்படியெல்லாம் யாரும் கவனம் கொண்டுள்ளதாய் தெரியவில்லை.
உடை என்பது, நம் சவுகரியத்திற்கு ஏற்ப, கண்ணியமாகத்தான் இருக்கணுமே தவிர, உடையை வைத்து நம்மை விமர்சிக்கும்படி இருக்கக் கூடாது. கண்ணியமான உடை, மற்றவர்களை கவர்ந்து, சுண்டி இழுக்காத உடை, நாகரிகமான முறையில் அணிந்தாலே, கம்பீரம் தானாகவே வந்துவிடும்.
படிக்கும் பருவ வயதில், தன் எதிர்காலம் பற்றிய லட்சியத்தோடு நடைபோடும் இளம் பெண்கள் எத்தனை பேர், இதை கவனத்தில் கொண்டுள்ளனர்?
உடை, சிகை, முக அலங்காரம் அனைத்தும், ஆண்களின் பார்வைக்காக என்பதில் கவனம் செலுத்துவதால், பெண்கள், தங்களின் இலக்கு என்ன என்பதையே தீர்மானிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். பின் எங்கிருந்து பெண்கள் சமுதாயம் முன்னேற்றம் காணும்?
பெண்கள், தங்களுக்கான வழியை விரிவுபடுத்திக் கொண்டு போகும்போது, பாலியல் தொந்தரவு போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
தனியாக ‘டூவீலர்’ ஓட்டும் பெண்ணை, சமூகம் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த நிலை, இன்று இல்லை. கடைகளில் தொங்கும், அரை அம்மணப் படங்களை பார்ப்பதில் அதிர்ச்சியில்லை. பெண் என்பவளை, வெறும் பிள்ளைப் பெறும் இயந்திரமாக கருதி நடத்திய காலம் மாறியிருக்கிறது. எனவே, ஆண்கள் அங்கீகரிக்க வேண்டும் என்ற மனநிலை, இதுவரை – தனக்கே, தன் எண்ணம் பற்றிப் புரியவில்லை என்ற நிலை இருந்தால் கூட – அது மாற வேண்டும்.