பெண்கள் அறியவேண்டிய ஆறு அறிகுறிகள்!
பெண்கள் சந்திக்கும் உடல்சார்ந்த பிரச்னைகளில் ஒன்று, யூரினரி இன்ஃபெக்ஷன். ஆனால், அதுகுறித்த சரியான தெளிவு பெரும்பாலான பெண்களிடம் இல்லை. மாதவிடாய் போலவே இதையும் சாதாரணமாக நினைத்துவிடுகிறார்கள். அது தவறு. அதை எப்படித் தவிர்க்கலாம் என்பது பற்றி ஆலோசனை வழங்குகிறார் யூரோகைனகாலஜி மருத்துவர் மீரா ராகவன்.
யூரினரி இன்ஃபெக்ஷன் அதாவது, சிறுநீர்ப்பாதைத் தொற்றானது ஆண்களைவிடப் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. ஆண்கள் தங்கள் சிறுநீரகத்தில் ஏதாவது அறுவைசிகிச்சை செய்திருந்தால் மட்டுமே இந்தத் தொற்று ஏற்படும். ஆனால், பெண்களுக்கு உடல் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களின்போதும், கர்ப்பக்காலம் மற்றும் மாதவிடாய் காலத்தின் போதும் அடிக்கடி ஏற்படும். கிருமிகளால் ஏற்படக்கூடிய இந்தத் தொற்றை, பெண்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டு கவனிக்காமல் விடும்போது பெரிய பிரச்னையாக மாறுகிறது.
யூரினரி இன்ஃபெக் ஷனுக்கான அறிகுறிகள் என்னென்ன?
குத்துவலி மற்றும் நீர்க்கடுப்பு: தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் உடலில் தங்க ஆரம்பிக்கும்போது, இடுப்புக்குக் கீழே வலி எடுக்கும். தொண்டை எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவையும் அதிகமாக இருக்கும். சிறுநீர் கழிக்கும் இடத்தில் அதிகமாக எரிச்சல் உண்டாகும்.
கட்டுப்படாத வலி: அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் உண்டாகும். இதனால், மற்ற வேலைகளில் கவனம் சிதறி, மன அழுத்தத்தோடு இருப்பார்கள்.
சொட்டுச் சொட்டாக வெளியேறுதல்: மீண்டும் மீண்டும் சிறுநீர் கழித்தாலும் நிவாரணம் கிடைக்காது. சொட்டுச் சொட்டாக நீர் வெளியேறும். அப்போது, கடுமையான வலியை உணர்வார்கள்.
சிறுநீரின் நிறம் மாறுதல்: மஞ்சள் நிறமாகவோ, கலங்கலாகவோ சிறுநீர் வெளியேறினால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்போது வலி அதிகமாக இருக்காது. ஆனால், நிறத்தை வைத்துத் தெரிந்துகொள்ளலாம். சில சமயம், நீர் திட்டுத்திட்டாக வெளியேறும். அப்போது மட்டும் நீர்க்கடுப்பு இருக்கும்.
துர்நாற்றம் வீசுதல்: சிறுநீர் கழிக்கும்போது வெளிப்படும் துர்நாற்றத்தை வைத்தே தொற்றைக் கண்டறிய முடியும். சிறுநீர் முழுவதுமாக வெளியேறாமல், உள்ளேயே தேங்கிக் கிடப்பதால் துர்நாற்றம் உண்டாகலாம். புகைப்பழக்கமுள்ள ஆண்களுக்குச் சிறுநீர் கழிக்கும்போது துர்நாற்றம் வெளிப்படும். அதிகமாக மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்துவதாலும் இப்படி நாற்றம் வீசுவது உண்டு. ஆனால், நாற்றத்தோடு வலியும் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
சோர்வாக உணர்தல்: பெண்களில் ஒரு குறிப்பிட்ட வயதுடையவர்கள் மற்றும் முதியவர்களுக்கு முதுகுவலியும் மன அழுத்தமும் இருக்கும். மாதவிடாய் சமயத்தில் எப்படிச் சோர்வாக இருப்பார்களோ, அதேபோல உணர்வார்கள்.
இந்த ஆறு அறிகுறிகள், பெண்களுக்கு அடிக்கடி வரக்கூடியவை. இவற்றில் ஏதாவது ஒன்று வருடத்துக்கு மூன்று முறை வந்தாலே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். முதலில் யூரின் டெஸ்ட் எடுப்பார்கள். தேவைப்பட்டால் ஸ்கேன் செய்வார்கள். எந்தக் கிருமியால் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்குத் தகுந்த சிகிச்சையை அளிப்பார்கள்.
எப்படி விரட்டலாம்?
வெளியூர்ப் பயணம் செய்யும்போது இரவில் சிறுநீர் கழிக்க நேரிடுமே என்று பல பெண்கள் தண்ணீரே குடிக்க மாட்டார்கள். வழியில் கழிவறைகள் இருக்காது; இருந்தாலும் அவை சுகாதாரமாக இருக்காது என்று இப்படிச் செய்வார்கள். கழிவறைகளால் மட்டுமே தொற்று ஏற்படுவதில்லை; தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் தொற்று ஏற்படும்.
வெளியூர்ப் பயணங்களின்போது நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் அருந்த வேண்டும். அது தீங்கு செய்யும் கிருமிகளை வெளியேற்ற உதவியாக இருக்கும்.
* நான்கு மணி நேரத்துக்கு மேல் ஒரு நாப்கினைப் பயன்படுத்தக் கூடாது. மாற்றிவிட வேண்டும்.
* காட்டன் உள்ளாடைகளைப் பயன்படுத்துவது நல்லது.
* ஆன்டிசெப்டிக் தயாரிப்புகளை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. சுத்தமாக இருக்க நினைத்து நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடக் கூடாது. ஆன்டிசெப்டிக்குக்குப் பதில், இளஞ்சூடான நீராலேயே சுத்தப்படுத்தலாம்.
* கோடைக்காலங்களில் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்கவும்.
* செயற்கை பானங்களைத் தவிர்த்து, இயற்கையாகக் கிடைக்கும் மோர், இளநீர் போன்றவற்றை அருந்த வேண்டும்.
* காபி, சோடா, ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுயமருத்துவம் கூடாது.
* ஆரம்பத்தில் வலி குறைந்ததும் மாத்திரைகளை நிறுத்திவிடாமல், மருத்துவர் சொன்ன தேதி வரை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்