பெண்கள் போற்ற வேண்டிய பருப்பு- வெள்ளைக் கொண்டைக்கடலை

பெண்கள் போற்ற வேண்டிய பருப்பு- வெள்ளைக் கொண்டைக்கடலை

5ரோமானியர்களுக்கும் வெள்ளைக் கொண்டைக்கடலைக்கும் தொடர்பு உண்டு. இதன் தாவரவியல் பெயரின் முன்பகுதியான ‘Cicer’ என்ற பெயரைப் பரிந்துரைத்தவர் ரோமானிய இயற்கையியலாளர் பிளினி. கறுப்புக் கொண்டைக் கடலையைவிட இது அளவில் சற்றுப் பெரிது, சற்று நெகிழ்வானதும்கூட.

இது முதன்முதலில் மத்தியகிழக்கு நாடுகளில் பயிரிடப்பட்டதாகக் கருதப்படுகிறது. இப்போதும் காட்டுப் பயிராக உள்ளது. இது கறுப்புக் கொண்டைக்கடலையின் வழித்தோன்றல்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்ட பிறகு, பயிரிடும் முறைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மேல் தோலின் நிறம் வெளுத்தது மட்டுமில்லாமல், கடலையின் அளவும் பெரிதாக மாறிவிட்டது. ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வந்ததால், ‘காபூலி கொண்டைக்கடலை’ எனப்படுகிறது. சென்னா என்று பொதுவாக அறியப்படுகிறது. தமிழில் வெள்ளை கொண்டைக்கடலை.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தெற்கு ஐரோப்பா, வட அமெரிக்கப் பகுதிகளில் இது பயிரிடப்படுகிறது. மத்தியகிழக்கு நாடுகளில் ஃபிளாஃபெல், ஹம்மூஸ் எனப்படும் ரொட்டிக்கான தொடுகறி போன்ற கொண்டைக்கடலை உணவு வகைகள் பிரபலம்.

பயன்பாடு

கறுப்புக் கொண்டைக் கடலையைப் போல் பல வகைகளில் இது பயன்படுத்தப்படா விட்டாலும் சுண்டலாகவும் குருமாவிலும் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. ‘சோளா பட்டூரா’ என்ற மெகா சைஸ் பூரியுடன் தொடுகறியாக வருவது வெள்ளைக் கொண்டைக்கடலை மசாலாதான். சில நேரம் குழம்பிலும் சேர்க்கப்படுவது உண்டு. புரதம் நிறைந்த இந்தப் பருப்பை, சில மணி நேரம் ஊற வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

ஊட்டச்சத்து

கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்தைக் கொண்டிருப்பதால், செரிமானக் கோளாறுகளைச் சீர்செய்ய உதவியாக இருக்கிறது.

எலும்பு, தசை, குருத்தெலும்பு, தோல், ரத்தம் போன்றவற்றை வளர்த்தெடுக்கும் புரதத்தை இது அதிகம் தருகிறது.

நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்க அடிப்படைத் தேவையாக இருக்கும் மாங்கனீசு இதில் அதிகமாக இருக்கிறது.

ஒரு கப் கொண்டைக்கடலையை உட்கொண்டால் அன்றாட தேவையில் 84.5% மாங்கனீசு கிடைக்கும்.

இரும்புச்சத்தைக் கொண்டிருப்பதால், பெண்களுக்கு மிகவும் நல்லது.

சாப்போனின் என்ற ஆன்டி ஆக்சிடண்ட்டை அதிக அளவு கொண்டிருப்பதால் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

பைட்டோ நியூட்ரியன்ட்ஸ், பைட்டோ ஆஸ்டிரோஜன்ஸ் எனப்படும் தாவர ஹார்மோன்களைக் கொண்டிருப்பதால் பெண்களின் ஹார்மோன் அளவை சீராகப் பராமரிக்க உதவுகிறது.

குறைந்த சர்க்கரை அளவை கொண்டிருப்பதால், மெதுவாகச் செரிமானம் அடையும், எடைகுறைப்புக்கும் உதவும்.

கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், உடலின் ரத்தச் சர்க்கரை அளவை நிலைப்படுத்த உதவுகிறது.

உயர் ரத்தஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

தெரியுமா?

கொண்டைக்கடலை, மத்தியக் கிழக்கு நாடுகளில் 7,500 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டது.

Leave a Reply