பெண்கள் மணக்கோலத்தில் அழகாக ஜொலிக்க டிப்ஸ்
திருமணத்துக்கு தேதி குறிக்கப்பட்டு நிச்சயம் செய்ததுமே முகத்தில் சந்தோஷ ரேகைகள் படர தொடங்கி விடும். திருமணத்திற்கு நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கையில், தங்களை அழகுப்படுத்திக்கொள்வதற்கு மணமகன்-மணமகள் இருவருமே ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் பெண்கள் ஒப்பனையிலும், ஆடை அலங்காரத்திலும் மிகுந்த அக்கறை கொள்வார்கள். மணக்கோலத்தில் மகிழ்ச்சியுடன் திளைக்க ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்.
* அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக வழக்கத்திற்கு மாறான புதிய அழகுசாதன பொருட்களை பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். அவை ஒவ்வாமை பிரச்சினையை ஏற்படுத்துமா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஒருசில வாரங்களுக்கு முன்பாகவே பரிசோதித்து பார்த்துவிட வேண்டும். இல்லாவிட்டால் மணநாளின்போது முகப்பொலிவுக்கு பங்கம் ஏற்பட்டு விடும். கூடுமானவரை புதிய அழகுசாதன பொருட்களை தவிர்ப்பது நல்லது.
* திருமண தேதி நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் தொலை தூர பயணங்களை தவிர்க்க வேண்டும். அவை சோர்வை ஏற்படுத்தி விடும். தேக நலனுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும். சருமம் வறட்சி பாதிப்புக்கு இலக்காகி பொலிவிழந்து போய்விடக்கூடும்.
* அழகுசாதனங்கள் மட்டுமே முகத்தை அழகுபடுத்துவதில்லை. ஆழ்ந்த தூக்கமும் முக அழகுக்கு வசீகரம் சேர்க்கும். திருமண நாள் நெருங்கும்போது வேலைப்பளுவும் கூடும். அது நிம்மதியான தூக்கத்திற்கு தடையை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடம் வேலைகளை பிரித்து கொடுத்துவிட வேண்டும். எட்டு மணி நேரமாவது ஆழ்ந்து தூங்க வேண்டும்.
நிறைய பேர் திருமணத்துக்கு ஒருசில நாட்களுக்கு முன்னரும், திருமணத்திற்கு முந்தைய நாளும் சரிவர தூங்காமல் திருமண வேலைகளை தடாலடியாக செய்துகொண்டிருப்பார்கள். நன்றாக தூங்கி எழுந்தால்தான் உடல் தோற்றத்தில் புத்துணர்ச்சியும், பிரகாசமும் வெளிப்படும். இல்லையென்றால் உடலும், முகமும், கண்களும், மனமும் சோர்ந்து போய்விடும்.
* திருமணம் நெருங்கும் வேளையில் கடினமான வேலைகள் எதையும் செய்யக் கூடாது. எதிர்பாராதவிதமாக காயங்கள் ஏற்பட்டுவிட்டால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படக்கூடும்.
* திருமண வேலைகளில் மூழ்கிவிடும் மணமகனும், மணமகளும் சரிவர சாப்பிடமாட்டார்கள். ஒருசிலர் தங்களுக்கு பசியே எடுப்பதில்லை என்பார்கள். ஒருபோதும் சாப்பாட்டை தவிர்க்கக்கூடாது. சத்தான காய்கறிகள், பழ வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அவை சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும்.
* முகத்திற்கு பேஷியல் செய்ய விருப்பப்படு பவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்பாகவே செய்துவிட வேண்டும். திருமணத்தின்போது இயற்கை பொருட்களை பயன்படுத்தி பேஷியல் செய்வதே நல்லது. பழங்களை கொண்டும் பேஷியல் செய்து முகத்தை பளபளப்பாக்கலாம்.
* திருமணத்தின்போது அணிவதற்காக வாங்கும் ஷூக்கள் கால்களுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்று முன்கூட்டியே அணிந்து பார்த்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும். திருமணத்தன்று வலிகளை ஏற்படுத்திவிடக்கூடாது. பெண்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே சிகை அலங்காரம் செய்வதற்கான ஒத்திகை பார்த்துவிட வேண்டும். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக தலைமுடிகளை கத்தரித்து அலங்கரிப்பதை தவிர்க்க வேண்டும்.