பெண்ணின் உடையைத் தீர்மானிப்பது யார்?

பெண்ணின் உடையைத் தீர்மானிப்பது யார்?

பெண் தனக்கானவற்றைத் தானே தீர்மானிக்க வேண்டும். கல்வி, வாழ்க்கைத் துணை, உடை என்று அவளே அவளுக்கானவற்றைத் தீர்மானித்துப் பழக வேண்டும். ஒரு காலகட்டத் தில் அனைத்துக்கும் பெண்கள் பிறரைச் சார்ந்திருந்தார்கள். குறிப்பாக ஆண்களைச் சார்ந்திருந்தார்கள். தனக்கான வற்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு மறுக்கப் பட்டிருந்தது. உடை என்பது அணிகிறவரின் விருப்பு வெறுப்பைப் பொறுத்தே அமைய வேண்டும். ஆனால், பெரும்பாலான பெண்கள் பெற்றோர், கணவர், சமூகம் ஆகியோரின் விருப்பு, வெறுப்பு, எதிர்ப்பைப் பொறுத்தே உடை அணிய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இன்றும் சில கல்லூரிகளில் ‘dress code’ என்ற பெயரில் நிர்வாகத்தினரின் எதிர்பார்ப்பு மாணவிகளின் மீது திணிக்கப்படுகிறது.

உடை ஒரு காலத்தில் கலாச்சாரத்தின் அடிப் படையில் பார்க்கப்பட்டது. இன்றும் அந்தப் பார்வையை ஆண்கள் முன்னிறுத்தினாலும், இன்றைய பெண்கள் வசதிக்கேற்ப உடை உடுத்தும் கலாசாரத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர். அந்தக் காலத்தில் பாவடை தாவணியிலும் சேலைகளிலும் வளையவந்த பெண்கள், இன்று சுடிதாரை அணிகிறார்கள். சல்வார், சுடிதார் போன்றவை தமிழ்நாட்டு உடைகள் இல்லை என்றாலும், அவை பெண்கள் வேகமாக நடப்பதற்கும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கும் வசதியாக இருக்கின்றன.

இத்தகைய உடைகள் இன்றைய அவசர யுகத்துக்கு ஏற்ப விரைவில் மாற்றிக்கொள்ளத்தக்கவை; நேரத்தை மிச்சப்படுத்துபவை என்பதையும் மறுக்க இயலாது. சுதந்திரத்தை விரும்பும் இன்றைய பெண்கள் ஒரே மாதிரியான உடை அணியும் பாணியில் இருந்து விலகி வந்துவிட்டனர்.

உடை என்பது கருத்துப் பரிமாற்றக் கருவியும்கூட. அது உடுத்துபவரின் எண்ண ஓட்டத்தைப் பார்ப்பவருக்கு உணர்த்த வல்லது. திரைப்படங்களைப் பொருத்தவரை, ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ற பெயரில் கதாநாயகிகளின் உடைகள் வடிவமைக்கப்படுகின்றன. பனி பொழியும் மலையில் கதாநாயகன் உடல் முழுக்க மூடியிருக்கும் பாதுகாப்பான உடையுடன் ஆடிப் பாடுவார். ஆனால், கதாநாயகியோ அரைகுறை உடையுடன் கால்களில் செருப்பு இல்லாமல் காட்சியளிப்பார். இந்தக் கொடுமை இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.

இன்றைய இளம் பெண்கள் அணிந்திருக்கும் சில உடைகள் பார்க்கும் ஆணின் ஆசையைத் தூண்டுவதாக இருக்கின்றன என்று பலர் எதிர்ப்புக்குரல் எழுப்படியபடி இருக்கின்றனர். பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் நிகழும்போது, சம்பந்தப்பட்ட பெண் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அவள் அணிந்திருக்கும் உடையைக் குறி வைத்ததாகவே இருக்கும்.

இவை பொதுவாக ஆண் சமூகம் தப்பித்துக் கொள்வதற்காகக் கூறப்படும் வார்த்தைகளே. பெண்களின் உடைகளை வடிவமைப்பவர்களும் அவற்றைச் சந்தைப்படுத்துபவர்களும் பெரும்பான்மை ஆண்களே என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஆடை குறித்த சுதந்திரம் ஒருவரது தனிப்பட்ட உரிமை. அதில் பிறர் தலையிடக் கூடாது. அதிகார ஆண் வர்க்கம் இதனை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply