பெண்ணும் ஆணும் ஒண்ணு. வேறுபாடுகள் இருந்தாலும் சமமானவர்கள்
உலகில் பல்வேறு தலைவர்கள் பல்வேறு இயக்கங்களைத் தொடங்கி, சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள். காலத்தாலும் சூழலாலும் ஒவ்வொருவருடைய பயணமும் வேறுபட்டது.
ஆனால், இவர்களை ஒரு கோட்டால் இணைத்தால், அந்தக் கோட்டை இணைக்கும் புள்ளி, ‘மானுட சமத்துவத்துக்கான தேடல்’என்பதுதான். ‘மனிதர்களுக்குள் பேதம் அகற்றுவதே எனது பணி’ என்றார் பெரியார். ‘உலகில் எந்தப் பகுதியிலும் இன்னும் எட்டப்படாவிட்டாலும்கூடச் சமத்துவம் மனித சமூகத்தின் உன்னதமான கனவாக மட்டுமே இருக்க முடியும்’ என்றார் அம்பேத்கர். மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு எவ்வளவு கொடுமையானது என்ற புரிதல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்ற அறிஞர்களை அது எவ்வாறு பொருளாதார அமைப்பால் தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது என்ற ஆராய்ச்சிக்குள் செலுத்தியது.
‘மனிதரின் தோல் நிறம் இயற்கையின் ஓர் அம்சம். அது எப்படி மனிதர்களைப் பிரித்துப் பாகுபடுத்த முடியும்?’ என்ற கேள்வியில் உருவான தலைவர்களே ஆபிரகாம் லிங்கன், மண்டேலா போன்றோர். ‘மனிதர்களுக்குள் பிரிவுகள் இருப்பதில் சில நியாயங்கள் இருக்கலாம். ஆனால், அதில் உயர்வு தாழ்வு இருக்கக் கூடாது’ என்பதையே தனது வாழ்நாள் செய்தியாகச் சொல்ல விரும்பினார் காந்தி. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று நீதி வகுத்து உலக மறை படைத்தார் வள்ளுவர்.
அனைத்து உயிர்களும் ஒன்றென்று எண்ணியே அந்தக் காலத்தில் துறவியர் துறவு மேற்கொண்டனர். கடவுளின் படைப்பில் அனைவரும் சமம் என்று சொல்லித்தான் கடவுளுக்கான நியாயத்தை நிலைநிறுத்த முயல்கிறார்கள் ஆன்மிக வாதிகள். தங்களுடைய மதத்தில் ஏற்றத் தாழ்வு சொல்லப்படவில்லை என்று வாதிட்டுதான் ஆதரவு தேடுகிறார்கள் மதவாதிகள். ஏற்றத் தாழ்வுகள் வேண்டும் என்று வாதிட்ட நீட்சே, ஹிட்லர் போன்றவர்கள் வரலாற்றில் எதிர்மறைக்
கதாபாத்திரங்களாக மாறிப்போனார்கள்.
இப்படி இந்த மனித சமுதாயத்தின் பயணத்தில் உன்னதக் கனவாகவும் லட்சியமாகவும் நட்சத்திர அந்தஸ்தோடு ‘சமத்துவம்’ என்ற சொல் விளங்கினாலும்கூட நடைமுறையில் பெரும்பான்மை மக்களுக்கு அது இன்னும் எட்டாக் கனியாகவே இருந்துவருகிறது. இதற்கு முக்கியமான காரணம் சமமின்மைக்கான சில தர்க்க நியாயங்கள், தார்மிக நியாயங்கள் என்றே காலங்காலமாகக் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.
‘மனதுள்ளே பேதாபேதம் தவிர்ப்பாயாகில் செய் தவம் வேறொன்றுண்டோ’ என்ற பழந்தமிழ் பாடலுக்கிணங்க நம் மனதுக்குள் பொதிந்து கிடக்கும் ஏற்றத்தாழ்வுக்கான வேர்கள் குறித்தே நாம் பேசப் போகிறோம். ‘மானுட சமத்துவம்’ என்ற பொதுநிலை நோக்கிய பயணத்தில் ‘பாலினச் சமத்துவம்’ அதாவது ஆண்-பெண் சமத்துவம் என்ற அடிப்படைப் பிரச்சினை குறித்தும் அதன் சிக்கல்கள் தீர்வுகள் பற்றியும் ஓர் உரையாடலை நிகழ்த்துவதே இந்தத் தொடரின் நோக்கம்.
பெண்ணுக்காகப் பரிந்து பேசுகிற குரல்கள் எல்லாம் பெண் விடுதலைக் குரல்களாகி விடுவதில்லை. மாறாகப் பெண்ணின் தாழ்வு நிலையைக் காப்பாற்றுபவையாக அவை இருப்பதையும் நாம் பார்க்க முடியும். பெண்ணும் ஆணும் சமம் என்று சொல்லும் போது, ‘ஆனால்’ சேர்க்காமல் அதை ஏற்றுக்கொள்ளப் பெரும் பகுதி மக்களால் முடியவில்லை என்பதே உண்மை.
‘ஆண் முதன்மையானவன். பெண் இரண்டாவது. இது படைப்பு சார்ந்த உண்மை. திருநங்கையர் அல்லது திருநம்பியர் பாலின இயல்பு நிலை திரிந்தவர்கள்’ – இதுதான் ஒவ்வொரு குழந்தைக்கும் நினைவு அரும்பத் தொடங்கும் போதே பதியத் தொடங்கிவிடுகிற பாலினப் பார்வையாக இருக்கிறது. இந்தப் பாலினப் பார்வையிலிருந்து நம் மனங்களை விடுவித்து, அறிவியல்பூர்வமாகவும் சமூக நீதி அடிப்படையிலும் பார்வையை வளர்த்தெடுப்பதே மானுட விடுதலைப் பயணம்.
ஏன் இந்த இடத்தில் ‘சமம்’ என்ற சொல்லை விடுத்து, ‘சமூக நீதி’ என்ற சொல்லை நாம் பயன்படுத்த ஆரம்பிக்கிறோம்? காரணம் சமம் என்ற சொல்லை நம்மில் பலரும் ஒரே மாதிரியான அர்த்தத்தில் புரிந்துகொள்கிறோம். நாம் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்றால் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று நம்மையறியாமலேயே நிபந்தனை விதித்துக்கொள்கிறோம். இங்கிருந்துதான் தவறு ஆரம்பமாகிறது.
சமமாக இருப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் வேறுபாடுகள் உள்ளவர்களாக, வேறுபட்ட சிந்தனை கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால், சமமானவர்கள். இந்தச் சமுதாயம் ஒரே மாதிரியாக உள்ள மனிதர்களாலானது அல்ல. ஆனால், அனைத்துப் பிரிவினருக்கும் சம உரிமை உள்ள சமுதாயமாக இருக்க வேண்டும். அனைத்து சமுதாயப் பிரிவுகளுக்கும் உள்ள சம உரிமையையே நாம் ‘சமூக நீதி’என்று குறிப்பிடுகிறோம். பாலினச் சமத்துவத்தை நோக்கிய பயணம் இது.