பெண்ணே வா! – தலைமை ஏற்க வா!
இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பெண்கள் தலைமைப் பதவிகளை வகிப்பது அரிதாகவே இருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியான ஷெரில் சேண்ட்பெர்க், ‘லீன் இன்’(Lean In – Women, Work and the Will to Lead) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் புத்தகத்தில், பெரும்பாலான பெண்கள் பணி வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகள் பற்றிய ஆழமான பார்வையைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
ஷெரில் தன்னுடைய பணி வாழ்க்கை அனுபவங்களைப் பின்னணியாக வைத்தே பெண்கள் அலுவலத்தில் சந்திக்கும் சவால்களையும், பிரச்சினைகளையும், பாகுபாடுகளையும் விளக்கியிருக்கிறார். பெண்கள் எப்படித் தங்களுடைய தயக்கங்களை உடைத்து, தலைமைப் பதவிகளை ஏற்க முன்வர வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளையும் தெளிவாக முன்வைக்கிறார். பொதுவாக, அலுவலகத்தில் பெண்கள் தங்கள் திறமைகளைச் சரியாக முன்னிறுத்தத் தவறுவதால் சந்திக்கும் இழப்புகளையும் விமர்சனப் பார்வையுடன் அணுகியிருக்கிறார். பெண்களைத் தலைமையேற்க அழைக்கும் இந்தப் புத்தகம், பதினோரு தலைப்புகளில் அதற்கான வழிமுறைகளை எளிமையாக விளக்குகிறது.
பயம் என்னும் பேயை ஒழிப்போம்
ஆண்கள் லட்சியத்துடன் இருப்பதை அங்கீகரிக்கும் சமூகம், பெண்களின் லட்சியங்களை அங்கீகரிப்பதில்லை. லட்சியங்களுடன் இயங்கும் பெண்களைக் குற்றவுணர்வுக்குத் தள்ளுவதே இந்தச் சமூகத்தின் முக்கிய வேலையாக இருக்கிறது. அவர்களைக் குடும்ப வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்கச் சொல்லித் தொடர்ந்து அறிவுறுத்துகிறது. இதனால், பெண்கள் தலைமைப் பதவி வகிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்போதும் பயத்தால் அதைத் தட்டிக்கழித்துவிடுகிறார்கள். எங்கே நம்மை மற்றவர்கள் விரும்பாமல் போய்விடுவார்களோ என்ற பயம். நம்மைப் பற்றி எதிர்மறை கருத்துகளைப் பேசிவிடுவார்களோ என்ற பயம். அளவுக்கு மீறிய உயரத்தை அடைந்துவிட்டோமோ என்ற பயம். தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம். மோசமான தாய் / மனைவி / மகள் என்ற பெயரை எடுத்துவிடுவோமா என்ற பயம். பெண்களின் மனதில் இயல்பாகவே இருக்கும் இந்தப் பயங்கள் அவசியமற்றவை என்பதை இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது. இந்தப் பயங்களையெல்லாம் கைவிடும்போதுதான் பெண்கள் தலைமையேற்று நடத்தும் அலுவலகங்கள் உலகில் சாத்தியமாகும்.
முன்வரிசையைப் பிடியுங்கள்
அலுவலகக் கூட்டமாக இருந்தாலும், நிகழ்ச்சியாக இருந்தாலும் பெண்கள் முன்வரிசையில் அமர்வதைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். யாரால் இந்தப் பணியைச் செய்து முடிக்க முடியும் என்ற கேள்வி வரும்போது, பெரும்பான்மையான பெண்கள் கையைத் தூக்க மாட்டார்கள். ஆனால், கைதூக்குவதற்குப் பெண்கள் கற்றுக்கொள்ளும்போதுதான் வாய்ப்புகள் சமமாகப் பிரித்தளிக்கப்படுவதை உறுதி செய்கிறோம். அதேமாதிரி, அலுவலகக் கூட்டங்களில், ஆண்களைவிடப் பெண்கள் குறைவாகவே பேசுகிறார்கள். தங்கள் கருத்துகளை ஆணித்தரமாக முன்வைக்கத் தயங்குகிறார்கள். இதை ஆண்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் பெண்களுக்கென்று தனியாகக் கருத்துகள் எதுவும் இருக்காது என்ற முன்முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இந்த நிலையை மாற்ற, தயக்கத்தை உடைத்து பெண்கள் முன்வரிசையில் அமர்ந்து, தங்களுடைய கைகளை உயர்த்தி, கேள்விகள் கேட்டுப் பழக வேண்டும்.
சமரசம் தேவையில்லை
வெற்றி என்பது கடின உழைப்பாலும், திறமைகளைத் தயக்கமின்றி வெளிக்காட்டுவதாலும், மற்றவர்களின் உதவியைத் தேவைப்படும்போது கேட்டுப் பெறுவதாலும், சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருப்பதாலும் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், ஓர் ஆண் பணி வாழ்க்கையில் அதிகாரமிக்க தலைமைப் பதவியில் இருப்பதை ரசிக்கும் சமூகம், பெண் அந்தப் பதவியில் இருக்கும்போது ரசிப்பதில்லை. எங்கே தன்னுடைய குடும்ப உறுப்பினர்களே தன்னை வெறுத்துவிடுவார்களோ என்ற சந்தேகத்தில் பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டாமல் மட்டுப்படுத்திக்கொள்கிறார்கள். மற்றவர்கள் நம்மைப் பற்றிக் குறைவாக மதிப்பீடு செய்வதற்கு முன், நம்மை நாமே குறைவாக மதிப்பீடு செய்துகொள்கிறோம் என்பதுதான் உண்மை. ஆண்கள் போட்டிபோட்டுப் பணியாற்றுவதை விரும்பும் சமூகம், பெண்கள் போட்டிபோடுவதை விரும்புவதில்லை.
இன்றளவும் பெண்கள் ஒரு பணி வாய்ப்பை ஏற்றுக்கொள்ளும்போது, ஊதியப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளத் தயங்குகிறார்கள். நிர்வாகம் என்ன ஊதியத்தைத் தீர்மானிக்கிறதோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், எந்த ஆணும் நிர்வாகம் நிர்ணயிக்கும் ஊதியத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. விரும்பப்படாமல் போய்விடுவோமோ என்ற பயத்தில், பெண்கள் தங்களுடைய ஊதியத்தைக்கூடச் சமரசம் செய்துகொள்கிறார்கள். இது அவசியமில்லை. இது பதவி உயர்வுக்கும் பொருந்தும். ஆண்கள் பதவி உயர்வு பற்றிப் பேசுவதற்குத் தயக்கமின்றித் தங்களுடைய மேலதிகாரிகளை அணுகுவார்கள். ஆனால், பெண்கள் அப்படி அணுகுவதில்லை. அவர்கள் பணியாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். என்றாவது ஒருநாள் தங்களுடைய திறமையை யாராவது கவனித்து, தங்களுக்குப் பதவி உயர்வு வழங்குவார்கள் என்றுதான் பெரும்பாலான பெண்கள் நம்புகிறார்கள். இது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது.
எல்லாவற்றையும் நாமே செய்ய வேண்டுமென்று அடம்பிடிக்காமல் வாழ்க்கைத் துணையுடன் வீட்டு வேலைகளையும் குழந்தை வளர்ப்பையும் பகிர்ந்துகொள்வது, குற்றவுணர்வின்றிப் பணி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை இரண்டையும் சமநிலையுடன் கையாளுவதற்கு உதவும். அத்துடன், அலுவலகச் சூழலில் சந்திக்கும் பிரச்சினைகளைச் சக பெண்களிடம் பகிர்ந்துகொள்வதின் முக்கியத்துவம், வழிகாட்டிகளைத் தேர்ந்தெடுப்பது, மகப்பேறு காலத்தில் பணி வாழ்க்கையை நிர்வகிப்பது, சமத்துவமான சமூகத்தை உருவாக்குவது போன்ற விஷயங்களையும் இந்தப் புத்தகம் விரிவாக விளக்குகிறது.
அமெரிக்க அலுவலகச் சூழலைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருந்தாலும் இந்தியாவின் அலுவலகச் சூழலுக்கும் அது பொருந்துகிறது. பணி வாழ்க்கையில் வெற்றிபெற நினைக்கும் பெண்களும், சமத்துவச் சமூகத்தில் நம்பிக்கையிருக்கும் ஆண்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.