பெண் குரலை ஒளிபரப்பாத வானொலிக்கு ரூ.2 கோடி அபராதம்
பெண்கள் குரல்களை கேட்டால் ஆண்களுக்கு ஆகாது என்ற முட நம்பிக்கையால் பெண்கள் குரல்களை ஒலிபரப்பாத வானொலி ஒன்றுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு மூட நம்பிக்கையை கொண்ட வானொலி இஸ்ரேலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
யூத நாடான இஸ்ரேலில் கோல் பரமா என்ற ரேடியோ இயங்கி வருகிறது. யூத மத பழமைவாத கருத்துக்களை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் இந்த ரேடியோ கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் 2011 வரை பெண்களின் குரலை ஒலிபரப்பவே இல்லை.
பெண்களின் பாடல்களை ஆண்கள் கேட்க கூடாது என்ற பழமைவாத கருத்தின் அடிப்படையில் ரேடியோ நிறுவனம், பெண்களின் குரல்களை கூட ஒலிபரப்பாமல் இருந்துள்ளது. இதனை அடுத்து, 2011-ம் ஆண்டில் பெண்கள் அமைப்புகள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
பெண்களின் குரல்களை கேட்ட வாடிக்கையாளர்கள் விருப்பப்படவில்லை. அவர்களின் விருப்பத்தின் பேரிலே பெண்களின் குரல்கள் ஒலிபரப்பவில்லை என ரேடியோ நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. எனினும், பின்னர் 2013-ம் ஆண்டில் இருந்து பெண் தொகுப்பாளர்களை பணியில் சேர்த்தது. ஆனாலும், பெண்கள் பாடிய பாடல்களை தற்போது வரை ஒலிபரப்பவில்லை.
இந்நிலையில், பெண்கள் அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கோல் பரமா ரேடியோவுக்கு 1 மில்லியன் ஷெகெல்ஸ் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி) அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.