பெண் சக்தி: நமக்கு சுயசிந்தனை கிடையாதா?
மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்துக் கருத்துகள் வெளிப்படும்போதெல்லாம் அவற்றை ஒடுக்க உடனடியாக ஏவப்படும் சொல், ‘தேச விரோதம்’. வாடிவாசல் முதல் நெடுவாசல் வரை தங்கள் உரிமை பறிக்கப்படுவதை எதிர்க்கும் குரல்கள் மீது இதே அஸ்திரம்தான் மத்தியிலிருந்து வீசப்படுகிறது. இன்றைய தேதியில் அந்தப் பட்டத்தைப் பெற்றிருக்கிறார் புதுடெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியின் முதலாமாண்டு மாணவி குர்மெஹர் கவுர்.
மவுனக் குரல்
டெல்லி ராம்ஜாஸ் கல்லூரியில் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினரின் வன்முறை வெறியாட்டத்தைக் கடந்த வாரம் கண்டித்தார் குர்மெஹர். தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில், “நான் டெல்லி பல்கலைக்கழக மாணவி. ஏ.பி.வி.பி.யைக் கண்டு எனக்குப் பயமில்லை. நான் தனி ஆள் இல்லை. ஒவ்வொரு இந்திய மாணவரும் என்னுடன் இருக்கிறார்” என எழுதப்பட்ட காகிதத்தைத் தன் முன் வைத்து ஒளிப்படம் பிடித்துப் பதிவிட்டிருந்தார்.
மாணவர்களின் கருத்துரிமைக்கு எதிராக ஏ.பி.வி.பி. அமைப்பு செயல்படுவதை இதன் மூலம் அவர் சுட்டிக்காட்டினார். ஒருபக்கம் மாணவர்கள் இதை வரவேற்க, மறுபக்கம் இதற்கான எதிர்வினைகள் அதிர்ச்சிகரமாக வரத் தொடங்கின. வலதுசாரி ஆதரவாளர்கள், யார் இந்தப் பெண் என ஆராய்ந்து யூடியூபில் கடந்த ஆண்டு அவர் வெளியிட்ட ஒரு வீடியோவைக் கண்டெடுத்தனர்.
அதில் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் எழுதப்பட்ட காகிதங்களை அடுத்தடுத்துக் காட்டுவதன் மூலமாகவே தன் கருத்துகளைக் காட்சிப்படுத்தியிருந்தார் குர்மெஹர். 1999 கார்கில் போரில் உயிரிழந்த ராணுவத் தளபதியின் மகளான குர்மெஹர் ‘அமைதியை நிலைநாட்டப் போரைக் கைவிடுவோம்’ எனக் கோரிக்கை விடுக்கும் மவுன வீடியோ பதிவு அது. ஆனால் நாலரை நிமிட வீடியோவிலிருந்து, “என் தந்தையைக் கொன்றது பாகிஸ்தான் அல்ல. போர்தான்” என்கிற ஒரு வாக்கியத்தை மட்டும் தனித்துப் பிரித்து எடுத்து அதற்கான பொருளைத் திரித்துப் பரப்பினர் வலதுசாரிகள்.
வன்முறையை எதிர்ப்பவர் பயங்கரவாதியா?
இதனை அடுத்து குர்மெஹரை பாலியல் அச்சுறுத்தல்கள் துரத்தின. கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அவரைக் கேலிசெய்யும் விதமாக ஒரு பதாகையை ஏந்தி அதனுடைய ஒளிப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டார். சேவாக்கின் பதிவுக்கு டிவிட்டரில் கரகோஷமிடும் எமோஜிகளை அள்ளித் தெளித்து, “பாவப்பட்ட பொண்ணு அரசியல் பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுகிறார்” எனப் பதிவிட்டார் பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா. இணையத்தில் கவனத்தை ஈர்க்க மரணமடைந்த தன் தந்தையைப் பயன்படுத்திக்கொள்கிறார் என்றார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராகேஷ் சின்ஹா. அதற்கும் ஒரு படி மேலேபோய், “யார் இந்தச் சின்னப் பெண்ணின் மனதைக் கெடுப்பது?” என மத்திய அமைச்சர் கேள்வி எழுப்பியது.
உச்சக்கட்டமாக, பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா, மும்பை தொடர் குண்டுவெடிப்பின் சூத்திரதாரியும் உலகை இன்றுவரை அச்சுறுத்தும் பயங்கரவாதியுமான தாவுத் இப்ராஹிமுடன் குர்மெஹரை ஒப்பிட்டார். இன்னும் பல கண்டனங்கள் அவரைத் துரத்துகின்றன. நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் அரவிந்த சுவாமி உள்ளிட்ட சிலர் மட்டுமே குர்மெஹருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்; அதுவும் மறைமுகமாக.
இந்த விமர்சனங்களையெல்லாம் ஆழமாக ஆராய்ந்து வலிந்து புனைந்து கட்டமைக்கப்பட்ட இந்துத்துவத் தேசியச் சித்தாந்தத்தின் பண்பாட்டு அரசியலின் வேரை வெளிக்கொணரலாம். ஆனால் இங்கு அதை மீறியும் வேறொரு சிக்கல் தலைதூக்குவதைக் காண முடிகிறது. ஒரு பெண் அதிகாரத்தை எதிர்த்துக் குரல் எழுப்புவதா என்கிற ஆர்ப்பரிப்பே எதிர்ப்புக் குரல்களில் மேலோங்கியிருக்கிறது.
போருக்கு எதிரான போராளி
இதில் இந்துத்துவ மதவாதிகளையும், ஆணாதிக்க மனம் படைத்தவர்களையும், அதிகார மையங்களையும் பதறவைத்தது குர்மெஹரின் சீரிய சிந்தனையும் கூர்மையான விமர்சனப் பார்வையும்தான். முதலாவதாக, சுயமாகச் சிந்திக்கும் திறன் அற்றவர்கள் பெண்கள் என்கிற கீழ்த்தரமான ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடுதான், ‘சின்னப் பெண்’, ‘பாவப்பட்ட பெண்’ ‘பகடைக்காய்’ போன்ற வார்த்தைகள். இதற்கு முன்பு குர்மெஹர் வெளியிட்ட மவுன வீடியோவில் அவர் தன்னுடைய ஆதங்கத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை, கூர்மையான பல அரசியல் கேள்விகளையும் எழுப்பியிருந்தார். அதை ஜீரணிக்க முடியாமல்தான் ‘தேச விரோதி’, ‘இன்னொரு தாவுத் இப்ராஹிம்’ போன்ற அச்சுறுத்தும் சொற்கள் வீசப்படுகின்றன.
ஆக, இவர்களின் ஒட்டுமொத்தக் கூப்பாட்டிலும் பயம் தெரிகிறது. பயத்தை மறைத்துக்கொள்ள அவரைப் பற்றி அவதூறு பரப்புவது, அவமானப்படுத்த முயல்வது, பெண் என்பதால் பாலியல் மிரட்டல்விடுப்பது போன்ற அருவருப்பான நடவடிக்கைகளில் இறங்குகின்றனர். இவர்களுக்கு இடையில் நம்பிக்கைக் கீற்றாகத் தென்படுவது, “துணிச்சலுடன் செயல்பட்டுள்ள குர்மெஹர், ஒரு இளம் குடிமகளாகத் தனது கடமையை நிறைவேற்றியுள்ளார்” எனத் தன் ஆதரவைத் தன்னுடைய மாணவிக்குத் தெரிவித்திருக்கும் அவருடைய கல்லூரி நிர்வாகமே.