பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் – மன்னிப்பு கேட்டார் ஆளுநர்

பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் – மன்னிப்பு கேட்டார் ஆளுநர்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், நேற்று கவர்னர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பு முடிந்தபிறகு, அவர் அருகே ஒரு வார பத்திரிகையின் மூத்த நிருபர் உள்பட சில பெண் நிருபர்கள் அவரிடம் சில கேள்விகளை கேட்க முயன்றனர். அப்போது, கவர்னர் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், அங்கு நின்றிருந்த பெண் நிருபரின் கன்னத்தை சிரித்தபடி, கையால் தட்டிவிட்டு சென்றார்.

இதை கண்டிக்கும் வகையில் அந்த பெண் நிருபர் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டார். அதில், ‘கவர்னர் தன்னை தாத்தாவாக நினைத்து என் கன்னத்தை தட்டி இருக்கலாம். ஆனால் நான் இதை ஏற்கவில்லை. என் முகத்தை நான் பலமுறை கழுவினால் கூட இந்த தாக்கத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. அவர் செய்தது தவறு’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக ஆளுநருக்கும் இமெயில் மூலம் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட சிலர் கவர்னரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெண் நிருபரின் கன்னத்தில் தட்டியதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘40 ஆண்டுகளாக நான் பத்திரிகை துறையில் இருந்துள்ளேன். செய்தியாளர் சந்திப்பில் நல்ல கேள்வி கேட்டதற்காக பாராட்டி பெண் நிருபரின் கன்னத்தை தட்டினேன். என் பேத்தி போல் நினைத்து அவரது கன்னத்தில் தட்டினேன். அதன்மூலம் அவரது மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply