பெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.
தமிழகத்தில் சார்பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 1199 பணியிடங்களுக்காக குரூப்-2 தேர்வு நேற்று நடந்தது. 2268 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் வழங்கப்பட்ட வினாத்தாளில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு தரப்பட்ட 4 விடைகளில் தந்தை பெரியாரின் பெயர் தவறாகவும், நாயக்கர் என சாதி பெயரையும் சேர்த்து அச்சிடப்பட்டிருந்தது.
காந்திஜி, ராஜாஜி மற்றும் அண்ணா ஆகிய தலைவர்களின் பெயர்கள் சரியான முறையில் அச்சிடபட்டுள்ள நிலையில், பெரியார் பெயர் மட்டும் சாதியுடன் அச்சிடப்பட்டது ஏன்? என கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் தந்தை பெரியார் பெயர் அவமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளிடம் கேட்டபோது குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளனர். “குரூப்-2 வினாத் தாளில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பது பற்றி தெரியாது. நிபுணர்கள் குழுதான் வினாத்தாளை தயார் செய்து சீலிட்டு அனுப்புகிறது. குரூப்-2 தேர்வு வினாத்தாள் பிரச்னை குறித்து தேர்வர்கள் நவம்பர் 13 முதல் முறையிடலாம். வினாத்தாள் பிரச்னை பற்றி நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பெரியார் பெயருடன் சாதி இடம்பெற்றதற்கு டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்துள்ளது. இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.