பெருகி வரும் சங்கிலிப்பறிப்பு: பெண்கள் செய்ய வேண்டியது என்ன?
சங்கலிப் பறிப்பு போன்ற சம்பவங்களில் பெரும்பாலும் நடுத்தர மக்கள்தாம் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் நகைகள் அணியாமல் செல்வதும் அல்லது அணிந்து செல்லும் நகைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவதும் நகை பறிப்புச் சம்பவங்களை ஓரளவு குறைக்கும்.
தற்போது சங்கிலிகளைப் பறிப்பதோடு பெண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் குற்றவாளிகள் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வது அச்சத்தை அதிகரிக்கிறது.
அதிகமான நகைகளை அணிந்தால் மட்டுமல்ல; ஒரே ஒரு செயின் அல்லது விலை உயர்ந்த செல்போன் போன்றவற்றை வைத்திருந்தால்கூட அவற்றைப் பறித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. பெண்கள், முதியவர்கள், தனியாக நடந்து செல்கிறவர்கள் ஆகியோரிடம்தான் அதிக அளவில் இத்தகைய பறிப்புச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் நடந்துவந்த குற்றச் செயல்கள் தற்போது நம் வீடுவரை வந்துவிட்டன.
நகைகள்தாம் தங்கள் குடும்ப கவுரவத்தின் அடையாளம் எனப் பெரும்பாலான பெண்கள் நினைக்கிற நிலையில் அவர்கள் நகை அணியாமல் இருப்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. பெரும்பாலான பெற்றோர் பெண் குழந்தை என்றாலே நகைகளைச் சேமிக்கத் திட்டமிடுவதும் திருமணம் குறித்துமே அதிகக் கவனம் செலுத்துகின்றனர். விலையுயர்ந்த உடை, நகைகளை அணிவதுதான் மதிப்புக்கான அடையாளமாக இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்துள்ளது.
தேவைக்கேற்பவும் காலத்துக்கு ஏற்பவும் நகைகளைப் போட்டுக்கொள்வதைப் போல் இந்தச் சமூகத்தில் நடைபெறும் குற்றச்செயல்களைக் கருத்தில் கொண்டும் செயல்பட வேண்டும்.
ஒரு குற்றத்தைச் செய்தாவது தான் விரும்பியவற்றை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம்தான் குற்றவாளிகளின் மனதில் மேலோங்கியுள்ளது. அதனால்தான் தற்போது குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், அழகு மட்டுமே பெண்களின் அடையாளமல்ல; திறமை, தைரியம், அறிவு ஆகியவற்றில்தான் பெண்களின் உண்மையான தன்மதிப்பு அடங்கியுள்ளது.
பெண்கள் நகை மாட்டும் ஸ்டாண்டாகத் தங்களை ஆக்கிக்கொள்ளக் கூடாது. அதே போல் பெண் என்பவள் மற்றவர் பார்வைக்கு விருந்தளிக்கும் பண்டமாக இருக்கக் கூடாது. பெண்களின் அறிவும் சமூகப் பங்களிப்பும்தான் அவர்களுக்கான அடையாளமாக மாற வேண்டும்.