பெருநகரத்தில் கிராமத்தை உண்டாக்குவது எப்படி?

பெருநகரத்தில் கிராமத்தை உண்டாக்குவது எப்படி?

village
பெருநகரங்களில் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் பலருக்கும் கிராமங்கள் மீது ஒரு காதல் வந்திருக்கிறது. நாம் நம் கிராமங்களுக்கு சென்று விட மாட்டோமா… அந்த செம்மண் புழுதி வாசனையை நாம் நுகர மாட்டோமா என்று கிராமங்களை ஒரு ஏக்க பார்வையுடன் பார்க்க துவங்கி இருக்கிறார்கள். சிலர் தைரியமாக முடிவெடுத்து கிராமங்களுக்கு சென்றும் வருகிறார்கள். ம. செந்தமிழனும் அவரது குழுவும் செம்மை என்ற அமைப்பை ஏற்படுத்தி கிராமங்களுக்கு திரும்புவதை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்து வருகிறார்கள். சூழலியல் செயற்பட்டாளர் பியுஷுடம் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் சொல்வார், “உண்மையில் வளமான நீடித்த பொருளாதாரம் கிராமங்களில் தான் உள்ளது. பணமாக பேசினாலும் கிராமங்களில் தான் அதிகம் ஈட்ட முடியும்” என்பார். அதற்கான 12 பசுமை வணிகத்தையும் முன்மொழிவார். சென்ற நூற்றாண்டின் இறுதியில் தன் முக்கியத்துவத்தை இழக்க ஆரம்பித்த கிராமங்கள், இப்போது பலரின் கனவாக இருக்கிறது. ஆனால், கிராமங்கள் முக்கியத்துவம் பெறுவது வரலாற்றில் இது முதல் முறை அல்ல. எப்போதெல்லாம் உலகெங்கும் மக்கள் வேலை அழுத்தத்தில் திணறி இருக்கிறார்களோ… அப்போதெல்லாம் மக்கள் இயற்கைக்கு திரும்புவது பற்றி பேசி இருக்கிறார்கள்.

இங்கிலாந்தும் தொழிற்புரட்சியும்:

பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டது. நகரமெங்கும் ஆலைகள், பெரும் தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இருப்பு பாதைகள் போடப்பட்டன. தொழிற்புரட்சியின் காரணமாக 1801 முதல் 1911 காலக்கட்டத்தில் மட்டும் 80 சதவீத மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஒரு பக்கம் இங்கிலாந்தில் இந்த தொழிற்புரட்சியை ஒரு சாரார் கொண்டாடிய போதே, இன்னொரு பக்கம் மக்கள் அதை கடுமையாக எதிர்த்துள்ளனர். குறிப்பாக கவிஞர்களும், கலைஞர்களும்.

எழில் கொஞ்சும் இங்கிலாந்தின் நில அமைப்பை தொழிற்புரட்சி கடித்து குதறிக் கொண்டு இருக்கிறது என்று கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் கவலை அடைந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல், பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்து இயற்கையுடன் எப்படி இயைந்து வாழ வேண்டும் என்று மக்களுக்கு பாடமும் எடுத்து இருக்கிறார்.

அவர் இப்படி சொல்கிறார், “என் பயணத்தில் தொழிற் புரட்சியின் எந்த நன்மையையும் காணமுடியவில்லை. அது இயற்கையை முற்றும் முழுவதுமாக சிதைத்துவிட்டது. இனி வரும் காலத்தில் மனிதர்களுக்கு சுவாசிக்க நல்ல காற்று கூட இருக்காது. எங்கும் பச்சையம் இருக்காது… இயற்கையை மட்டும் சிதைக்கவில்லை. இந்த தொழிற்புரட்சி மனித பண்புகளையும் சிதைத்துவிட்டது. பணம் அறமதிப்புகளை இல்லாமல் செய்துவிட்டது… இந்த தொழிற்புரட்சி குறித்து எதுவுமே தெரியாமல் கிராமத்தில் வாழும் ஒரு எளிய மனிதன், இன்னும் இயற்கையுடன் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டு இருக்கிறான்”

இயற்கை வளம் மிகுந்த லேக் மாவட்டத்தில் அரசு இருப்பு பாதை போட திட்டமிடும் போது அதை வில்லியம் கடுமையாக எதிர்க்கிறார். அவரை தொடர்ந்து அவரது சீடர் கவிஞர் ருஸ்கினும் இந்த திட்டத்தை எதிர்த்து ஒரு இயக்கமே நடத்துகிறார்.

“தொழிற்புரட்சி முன்னேற்றம் என்கிறார்கள். ஆனால், காற்று, கடல் என அனைத்தையும் மாசடைய செய்துவிட்டார்கள். மனிதர்களின் உடலும் சீர்கெட்டு விட்டது. இதை பற்றி அவர்கள் எப்போதுமே பேசுவதில்லை,” என்றார் ருஸ்கின்.

தொழிற்புரட்சியின் ஒரு கூறாக இருக்கும் கல்வி முறையையும் ருஸ்கின் கடுமையாக சாடியுள்ளார். “நீங்கள் நிலத்தை, பறவையை, மலரை காதலிக்க கற்றுக் கொடுக்காத வரை, இந்த கல்வியால் எந்த நல் பயனும் இல்லை…”

இயற்கைக்கு திரும்புதல்:

ருஸ்கின் எழுத, பேச மட்டும் செய்யவில்லை. தமக்கு தேவையான உணவை தானே உற்பத்தி செய்து கொள்ள, உடைகளை நெய்து கொள்வதை வலியுறுத்தி ஒரு இயக்கத்தையே கட்டமைத்தார். தோட்டங்களை ஏற்படுத்தினார். அவருக்கு பின் அவரது சீடர் வில்லியம் மோரீஸ் அதனை முன்னெடுத்தார். வில்லியம், “நான் 19-ம் நூற்றாண்டில் வாழ்வதை விட 14-ம் நூற்றாண்டில் வாழ்வதையே அதிகம் விரும்புகிறேன்” மோரீஸின் நண்பர் எட்வர்ட், “இயற்கைக்கு திரும்புவோம்’’ என்பதை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்தார்.

காந்தி முன் மொழிந்த கிராம பொருளாதாரம்:

இதையெல்லாம் படித்த,[பார்த்த காந்தியும், இந்திய பொருளாதாரத்திற்கு தொழிற்புரட்சி உகந்தது அல்ல என்று நம்பினார். வளம் குன்றா வாழ்விற்கு கிராம பொருளாதாரம் மட்டுமே தீர்வென்றார். அதற்காக அவர் ஒரு மாதிரி கிராமம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு வரையறையும் முன் மொழிந்தார்.

அந்த கிராமத்தில் உள்ள வீடுகள், தங்கள் பகுதியிலிருந்து ஐந்து மைல் சுற்றளவில் என்ன கிடைக்கிறதோ, அதைக் கொண்டு கட்டப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வீடும் தனக்கு தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். கால்நடைகளுக்கு என்று அனைத்து வீடுகளிலும் தனி இடம் இருக்க வேண்டும். கூட்டு பிரார்த்தனை செய்ய இடம் இருக்க வேண்டும், மேய்ச்சலுக்கான பொது இடம் இருக்க வேண்டும், பள்ளிகள் இருக்க வேண்டும். உள்ளூர் தொழிலுக்கு முக்கியத்துவம் தரும் பாடத்திட்டங்கள் கற்பிக்கப்பட வேண்டும். அந்த கிராமத்திற்கான துணி அந்த கிராமத்திலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும். பஞ்சாயத்து அமைப்புகள் இருக்க வேண்டும். பிரச்னைகள் அனைத்தும் உள்ளூர் அளவிலேயே பேசி தீர்க்கப்பட வேண்டும்.

கிராமம் சமைப்போம்:

ஆனால், நாம் பல தூரம் பயணித்து வந்துவிட்டோம். அனைவருக்கும் கிராமங்களுக்கு திரும்புவது உடனே சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால், நகரத்தில் கிராமத்தை உண்டாக்க முடியும். அதாவது, தேவையற்ற நம் நுகர்வை குறைத்து கொள்வது மூலமாகவும், நம் தேவையையே மாற்றி கொள்வது மூலமாகவும் நாம் நகரத்தில் கிராம சூழலை உண்டாக்க முடியும். நகரத்தில் இருபது குடும்பங்கள் ஒன்று சேர்ந்த குழுவை உண்டாக்கி, கிராம விவசாயிகளிடம் நேரடி தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அந்த இருபது குடும்பத்திற்கு தேவையான அரிசி, தானியம், மளிகை பொருட்கள் என அனைத்தையும் எந்த இடைதரகரும் இல்லாமல் நேரடியாக விவசாயிடமிருந்து பெறுவது. ஆடைகளை கூடுமான வரையில் துணிகளாக எடுத்து தையற்காரரிடம் தைக்க கொடுப்பது என்பது போன்ற சிறு சிறு விஷயங்கள் மூலம், நாம் நகரத்தில் கிராம சூழலை உணடாக்க முடியும். இது நகரத்தில் மட்டும் கிராம சூழலை உண்டாக்காது. இன்னும் மிச்சமிருக்கும் கிராமங்களையும் உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

இதை உடனடியாக செய்யாமல் கிராமத்தை ஏக்கப் பார்வை பார்ப்பது எந்த பயனையும் தராது.

Leave a Reply