பேட்டரி வாகனங்களின் கேந்திரமாகிறது குஜராத்!

பேட்டரி வாகனங்களின் கேந்திரமாகிறது குஜராத்!

தொழில்துறை வளர்ச்சியில் மஹாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்த நிலையில் உள்ள குஜராத், ஆட்டோமொபைல் துறையில் அதிக அளவிலான ஆலைகளைக் கொண்டுள்ளது. தற்போது குஜராத் அரசு சூழல் கேடில்லாத பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கும் ஆலைகள் பலவற்றையும் தன் வசம் ஈர்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.

ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி நிறுவனம் குஜராத் மாநிலத்தில் பேட்டரி கார் தயாரிப்பு ஆலையைத் தொடங்கப் போவதாக அறிவித்துவிட்டது.

ஜப்பானின் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன், எஸ்ஏஐசி மோட்டார் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனமும் கூட்டு சேர்ந்து பேட்டரி மற்றும் ஹைபிரிட் வாகனங்களை இம்மாநிலத்தில் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளன.சஜன் ஜிண்டால் குழுமத்தைச் சேர்ந்த ஜேஎஸ்டபிள்யு எனர்ஜி நிறுவனம், குஜராத்தில் ஆலை அமைப்பது தொடர்பாக அம்மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனம் பேட்டரிகள் மற்றும் பேட்டரி வாகனங்களுக்கான தீர்வை அளிக்கும் ஆலையை ரூ.4,000 கோடி முதலீட்டில் அமைக்க உள்ளது. இந்த ஆலை சுரேந்தர் நகரில் அமைப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் தோஷிபா மற்றும் டென்சோ நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ரூ. 1,150 கோடி முதலீட்டில் லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிக்கும் ஆலையை இங்கு தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் ஹன்ஸல்பூர் பகுதியில் அமைந்துள்ள ஆலையில் பேட்டரியில் இயங்கும் கார்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. சுஸுகி நிறுவனம் இங்குள்ள ஆலையில் ஹைபிரிட் கார்களை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

பேட்டரி வாகனங்களின் உற்பத்தி கேந்திரமாக குஜராத் மாறும் என்று அம்மாநில தொழில்துறை முதன்மைச் செயலர் மனோஜ் தாஸ் தெரிவித்துள்ளார்.

சுஸுகி, ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி மற்றும் எஸ்ஏஐசி ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து டாடா நிறுவனம் பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநிலம் சனந்த் நகரில் உள்ள ஆலையில் நானோ காரை பேட்டரியில் இயங்கும் காராக மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் டாடா, ஃபோர்டு நிறுவனங்களோடு ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனமும் ஆலை அமைத்துள்ளது.

பேட்டரி வாகன கேந்திரமாக குஜராத் மாறும்பட்சத்தில் இது சார்ந்த மேலும் பல துணை நிறுவனங்கள் அங்கு உருவாகும் என்பது நிச்சயமே.

Leave a Reply