பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி!

பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி!

சாலைகளில் சட்டவிரோதமாக அரசியல் கட்சிகள் பேனர் வைக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தும், அந்த உத்தரவு காற்றில் பறக்கவிட்டு அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக பேனர்களை சாலைகளில் வைத்து வருகின்றனர்

இதில் எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கு இல்லை என்பதால் ஒரு கட்சி பேனர் வைத்ததை இன்னொரு கட்சி குறை சொல்வதில் அர்த்தம் இல்லை என்பதுதான் உண்மையான நடைமுறை. இந்த நிலையில் நேற்று அதிமுக கட்சியினர் வைத்த பேனர் ஒன்றால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக பலியானார். இந்த மரணத்தை ஒரு ஒரே ஒருநாள் மட்டும் தலைப்பு செய்தியாக படித்துவிட்டு நாமும் கடந்து விடுவோம். மீண்டும் அரசியல் கட்சியினர் பேனர் வைப்பார்கள். மீண்டும் உயிர்கள் பலியாகும்

இதற்கு ஒரு முடிவே இல்லையா? இதே சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை ஹெல்மெட் போடுங்கள் என்று உத்தரவிட்டும், அந்த உத்தரவை மதிக்காமல், ஹெல்மெட் போடாமல் வாகனங்கள் ஓட்டி வந்தனர். இதனை அடுத்து சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தால் அபராதத்திற்கு பயந்து தற்போது அனைவரும் ஹெல்மெட் போடுகின்றனர். இதில் ஒரு பெரிய அதிசயம் என்னவெனில் இருசக்கர வாகனங்களில் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் கூட ஹெல்மெட் போட்டு பயணம் செய்கின்றனர். அதாவது அபராதம் ஒன்றுதான் ஒரு குற்றத்தை தடுக்க சரியான வழி என்று மக்களை உறுதி செய்துள்ளனர்

இதனை அடுத்து பேனர் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவர பேனர் வைக்கும் அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கிலும், பேனர் வைக்கும் தனியார் அமைப்புகளுக்கு லட்சக்கணக்கிலும் அபராதம் விதித்தால் இந்த பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வந்துவிடும் என்றும் இது ஒன்றுதான் பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் என்றும் சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்

 

Leave a Reply