பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் 10% வரை உயரக்கூடும்: ரிசர்வ் வங்கி தகவல்
பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு 10 சதவீதத்தைத் தொடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
2015-16-ம் நிதி ஆண்டில் வாராக் கடன் அளவு 80 சதவீத அளவுக்கு அதிகரித்து மொத்த வாராக் கடனை அதிகபட்சமாக (பொதுத்துறை வங்கியில்) 9.6 சதவீத அளவுக்கு உயர்த்தின.
இது இன்னும் மோசமான நிலைக்கு செல்லும் என்று ரிசர்வ் வங்கியின் அடிப்படை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இது 8.5 சதவீத அளவுக்கு இருக்கும் என்று தெரிகிறது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட சமீபத் திய புள்ளி விவர அறிக்கையின்படி பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு 7.6 சதவீதமாக உள் ளது. இது கடந்த 12 வருடங்களில் இல்லாத அளவு அதிகமாகும். 2004-ம் ஆண்டு வங்கிகளின் வாராக் கடன் அளவு 7.8 சதவீத அளவுக்கு இருந்தது. வாராக் கடன் அளவு அதிகரிப்புக்கு சொத்து தர ஆய்வு (ஏக்யூஆர்) முக்கிய காரணம் என்று ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றி அமைக்கப்பட்ட பல கடன்கள் இன்னும் வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட பெரும்பாலான கடன்கள், வாராக்கடன் பட்டியலில் சேரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வங்கிகளின் நெருக்கடியான சொத்துகள் விகிதம் 11.5 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வரும் மார்ச் மாதத்தில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் 8.5 சதவீதமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை இந்தியாவின் பேரியல் பொருளாதாரத்தில் மந்த நிலை இருந்தாலும் மொத்த வாராக்கடன் 9.3 சதவீதம் அளவுக்கு கூட அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் நிகர வாராக்கடன் 6.4 சதவீதமாக இருக்கிறது. அதேபோல கடன் மற்றும் டெபாசிட் வளர்ச்சி விகிதம் ஒற்றை இலக்கத்தில் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் கடன் வளர்ச்சி விகிதம் 8.8 சதவீதமாகவும், டெபாசிட் வளர்ச்சி விகிதம் 8.1 சதவீதமாகவும் இருக்கிறது.
பொதுத்துறை வங்கிகளுக்கும் தனியார் வங்கிகளுக்கும் இந்த வளர்ச்சி விகிதத்தில் பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் 4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஆனால் தனியார் வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் 24.6 சதவீதமாக உள்ளது. அதேபோல பொதுத்துறை வங்கிகளின் டெபாசிட் 5.2 சதவீத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. மாறாக தனியார் வங்கிகளின் டெபாசிட் வளர்ச்சி 17.3 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
வீட்டுக்கடன் பிரிவில் பிரச்சினை ஏதும் இல்லை. இந்த துறையில் மொத்த வாராக்கடன் 1.3 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது.