பொன்மழை பொழிக!
ஏழை தம்பதிக்கு திருமகள் அருள் செய்யும்படி ஆதிசங்கரர் பாடியருளியது கனகதாரா ஸ்தோத்ரம். அவர் அதைப் பாடியதும் பொன் மாரிப் பொழிந்தாள் அலைமகள்.
அற்புதமான அந்தப் பாடலின் கருத்துகள் மிளிர, தமிழில் பாடி அலைமகளைத் துதிப்பது, இன்னும் மகிழ்ச்சி அல்லவா? இதோ, ‘பொன்மழைப் பொழிக’ எனும் பாடல் உங்களுக்காக. வரலட்சுமி விரத நாளில் இப்பாடலைப் பாடி, திருமகளை வழிபட்டு வரம் பெறுவோம்.
தங்கநிற வண்டுமொய்க்கும் முகுளமலர் போலே
மங்கலமாம் திருமகள்நீ மார்பில்உள்ள தாலே
பொங்குகின்ற மகிழ்ச்சியினால் பொலிகின்றார் மாலே
பங்கயமே! அப்பார்வை படவேண்டும் மேலே!
நீலமலர் மேலமரும் தும்பிகளைப் போன்றே
நின்விழிகள் மாதவன்மேல்! நிலவுவதும் சான்றே!
காலமெலாம் பூத்திருக்கும் கண்மலரால் கண்டு
கருணைதந்தால் கடையனுக்கும் வெற்றி இங்கே உண்டு!
தேவருல காளுகின்ற தேவேந்தரப் பதவி
திருமகளே ஒரு நொடிஉன் விழிசெய்யும் உதவி!
மேவுகின்ற கருமணியின் நிழல்பட்டால் போதும்!
மேதினியின் வளமனைத்தும் என்னிடத்தில் மோதும்!
கணவனிடம் பதிந்திருக்கும் கண்மணியைக் கொஞ்சம்
காட்டுகநீ! அடியனிடம் கனகங்கள் கொஞ்சும்!
அனைவருக்கும் சகலசெல்வ அநுபோகம் தருவாய்!
அலைவீசும் பாற்கடலின் அமுதுடனே வருவாய்!
கார்வண்ணன் மேனிதவழ் கெளஸ்துபமே போல
கண்மணிகள் கொண்டவளே! முகுந்தனவன் நீல
மார்பினிலே திகழ்பவளே! மங்கலமே பெருக
மனைவிளங்க வயல்செழிக்க மழைவளமே தருக!
மதுகைட பரை அழித்த மன்னவனின் மேனி
மதுகையுடன் தழுவுகின்ற தேவிஇங்கு வாநீ!
பதுமத்தில் உறைபவளே! பிருகுவம்சச் சேயே!
படவேண்டும் பார்வைமலர்! என்மீது தாயே!
மன்மதனும் உன்னழகைப் பாணமெனக் கொண்டே
மாலவனை வெற்றிகொண்ட கதையுமிங்கு உண்டே!
உன்மோகப் பார்வைக்கே இணை எதுதான் சொல்ல!
உன் செல்வப் படைவேண்டும் இவ்வுலகை வெல்ல!
நீருண்ட மேகமென நிலவுகின்ற நயனம்
நிலைபெற்றால் சுகம்பெறுமே என்வாழ்வுப் பயணம்!
நாரணரின் உயிரமுத நாயகியே வாழ்க!
நாடுகின்ற பக்தன் எனை நலமனைத்தும் சூழ்க!
முக்தியினை எட்டும்என்றன் முயற்சிஎன்ன எளிதா?
முதல்விஉன்றன் அருளிருக்க விதியும்என்ன வலிதா?
சக்தியே! உன் சந்நிதியில் சரணம் சொல்லு கின்றேன்!
தாயே! உன் கருணையினால் மரணம் வெல்லு கின்றேன்!
காப்பதுவும், அழிப்பதுவும், படைப்பதுவும் நீயே!
கலைமகளே! அலைமகளே! மலைமகளே! தாயே!
வாய்ப்புற்றேன் திருமகளே வாக்கெடுத்துப் போற்ற!
வரந்தருவாய்! அடியவனின் ஊழ்வினையை மாற்ற
வேதத்தின் விழுப்பொருளே! வித்திற்கும் வித்தே!
வீற்றிருக்கும் தாமரையே விளங்கவைக்கும் முத்தே!
நாதத்தின் உள்ளிருக்கும் நற்கனலே! தேவி!
நானிலமே செழித்திடுக! உன்னருள்தான் மேவி!
தாமரைமேல் காட்சிதரும் மாமறையே போற்றி!
சந்திரனின் உடன்பிறந்த சகோதரியே போற்றி!
தேன்மலரும் திருவடியில் தேவர்களே தஞ்சம்!
தேவிஉன்றன் ஆசிபெற்றால் திசையனைத்தும் மஞ்சம்!
வேங்கடவன் மார்பினிலே நீங்கிடாது வாழும்
வித்தகியே உன்புகழே விரிஉலகம் ஏழும்!
நாங்களெல்லாம் வாழ அருள் நல்லபடி செய்க!
நற்கரத்தால் நவநிதியம் நாளும்நாளும் பெய்க!
வையத்தைக் காக்கின்ற வரதராஜர் துணையே!
மண்டலத்தில் உன்கருணை மழைக்குஏது இணையே!
செய்யமலர் திருவடியைத் தினமும்பற்று கின்றேன்!
செயலனைத்தும் ஈடேறிச் சிறக்க வெற்றி கண்டேன்!
வேண்டுவார்க்கு வேண்டுவதை அருளுகின்ற தாயே!
மேன்மையளே! உன்பெருமை விளக்கிடுமோ வாயே!
தூண்டுசுடர் போன்ற ஜோதி துலங்குமுகம் கொண்டாய்!
தூய பிருகு வம்சத்தின் தோன்றலென நின்றாய்!
அறுகம்புல் ஆலமரம் ஆக்கும்உன்றன் சக்தி!
அண்டாண்ட கோடிஉயிர் உன்னருளால் முக்தி!
அரியணையாம் கமலத்தில் அரசிருக்கும் திருவே!
அவனிபெறும் வளர்ச்சியெலாம் உன்பார்வை விரிவே!
முகுந்தனுடை இன்னுயிரே! உலகின்மூலப் பொருளே!
முதன்மையாக எதையும் ஆக்கும் புதுமை உன்றன் அருளே!
புகழுகின்றேன் மனம்வாக்கு காயத்தால் உன்னை!
பூவுலகம் பொலிவுபெற பொழிந்திடுக பொன்னை!
பங்கயத்தில் பங்குபெறும் பகவதிஉன் நாமம்
பகர்பவர்க்கு இவ்வுலகில் நிகரிலாத க்ஷேமம்!
மங்கலங்கள் அனைத்திற்கும் நீதானே மூலம்!
மாளிகைகள் மண்டபங்கள் உன்கையின் ஜாலம்!
பொன்மகளே நன்றாய்நீ புனலாட வேண்டி
போதகமாம் யானையெலாம் பொங்குகங்கை ஏந்தி
முன்வந்தே அணிவகுக்கும் காட்சியினைப் பார்த்தே
முன்னவனும் மயங்குகிறான் உன்னழகில் ஆர்த்தே!
கருணைஅலை பெருகும்உன் கடைக்கண்ணைச் சிறிது
காட்டிவிடில் என்வறுமை நிற்பதென்ப தரிது!
வறியவனில் முதல்வன்நான்! அதனால்உன் அருளை
வாங்குவதற்கே உரியவன்நான்! ஓட்டுக என் இருளை!
தேவரென பூமியிலே யாவருமே போற்ற
சிறந்திடலாம் இத்துதியைத் தினந்தோறும் சாற்றா!
மூவுலகும் காக்க மகா லக்ஷ்மியினைத் துதிப்போம்!
முதன்மைபெற முதல்விபதம் இதயமதில் பதிப்போம்!