பொன் நகரம்… காஞ்சிபுரம்!
தமிழகத்தின் மிகவும் தொன்மையான நகரம் காஞ்சி. 2000 வருடங் களுக்கு முன்பு காஞ்சி, ‘கச்சிப்பேடு’ என்று அழைக்கப்பெற்றதாக இலக்கியங் கள் கூறுகின்றன. காஞ்சி என்றால் பொன் என்று பொருள். பொன்னாலான நகரம் என்னும்படி செல்வச் செழிப்புடன் திகழ்ந்த நகரம் காஞ்சி.
* வட இந்தியாவில் இருந்த நாலந்தா பல்கலைக் கழகத்துக்கு இணையாக காஞ்சி நகரம் பல கலைகளின் இருப்பிடமாகத் திகழ்ந்தது. அதனால், காஞ்சிக்கு ‘கடிகாஸ்தானம்’ என்ற பெயரும் உண்டு. சீன தேசத்தைச் சேர்ந்த யுவான் சுவாங் காஞ்சியைப் பற்றிக் குறிப்பிடுகையில், காஞ்சி மாநகரம் 6 மைல் சுற்றளவுக்கு பரந்து இருந்தது என்றும், மக்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதாகவும் சிறப்பித்துக் கூறி இருக்கிறார்.
* பல்லவர்கள் ஆட்சியில் காஞ்சி நகரம் விஷ்ணு காஞ்சி, சிவ காஞ்சி, ஜைன காஞ்சி என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. தற்போது விஷ்ணு காஞ்சி- சின்ன காஞ்சிபுரம் என்றும், சிவ காஞ்சி- பெரிய காஞ்சிபுரம் என்றும், ஜைன காஞ்சி- திருப்பருத்திக்குன்றம் என்றும் அழைக்கப்படுகிறது.
* மாதவியின் மகளான மணிமேகலை துறவு பூண்டு, பௌத்த நெறிகளைக் கற்றறிந்தாள். அவள் காஞ்சியில் புத்தபீடிகை அமைத்து, அமுதசுரபி மூலம் பசிப் பிணி போக்கிய நிகழ்ச்சி மணிமேகலை காப்பியத்தில் சித்திரிக்கப்பட்டு இருக்கிறது.
* விசைத் தறிகள் வந்துவிட்ட இந்தக் காலத்திலும்கூட கைத்தறியில் நெசவு செய்யப்படும் ‘காஞ்சிப் பட்டு’ உலகத்தரம் வாய்ந்தது.
* பேரறிஞர் அண்ணா பிறந்து வளர்ந்த நகரம் – காஞ்சிபுரம். அவர் வசித்த வீடு இன்று நினைவிடமாகப் போற்றப்படுகிறது.
* காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. இம்மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல், அந்நோய்க்குச் சிகிச்சை அளித்தல், நோய் குறித்த ஆராய்ச்சி உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த மருத்துவமனையில்தான் எம்.எஸ்ஸி மருத்துவ இயற்பியல் கல்வி வழங்கப்படுகிறது.
* பஞ்சபூத தலங்களில் மண்ணுக்கு உரிய தலம் கச்சி ஏகம்பம். அம்பிகை பூஜை செய்து தழுவப் பெற்ற சிவலிங்கம், ‘தழுவக் குழைந்த கம்பன்’ எனப் பெயர் பெற்றார். மாவடியின் கீழ் அமர்ந்த இறைவனாதலால், ஏகம்பன் ஆனார். திருவொற்றியூரில் பார்வை இழந்த சுந்தரர், இங்கு இடக்கண்ணில் பார்வை வரப் பெற்றார்.
* கச்சிப்பேட்டு இளந்தச்சனார், பெருந்தச்சனார், காஞ்சிக் கொற்றனார், நன்னாகையார் போன்றோர் இங்கு வாழ்ந்த சங்ககாலப் புலவர்கள் ஆவர்.
* இங்குள்ள நான்கு ராஜவீதிகளும் கரிகால் சோழனால் அமைக்கப் பெற்றவை.
* பஞ்சுப்பேட்டை அருகில் உள்ளது ஓணகாந்தன் தளி. இங்குதான் சுந்தரர் தேவாரம் பாடி, சிவபெருமான் அருளால் புளிய மரத்தில் இருந்து பொன் காய்கள் கிடைக்கப் பெற்றார்.
யானை வடிவுடைய விநாயகர், சிவபூஜை செய்த திருக்கோயிலான திருக்கச்சி அனேகதங்காவதம் சுந்தரரால் பாடப்பெற்ற தலம் ஆகும்.
* காஞ்சிபுரத்தில் மட்டுமே திருக்கச்சி அத்திகிரி, அட்டபுயகரம், திருத்தண்கா(தூப்புல்), திருவேளுக்கை, திருநீரகம், திருப்பாடகம், திருநிலாத்திங்கள்துண்டம், திருஊரகம், திருவெஃகா, திருக்காரகம், திருக்கார்வனம், திருக்கள்வனூர், திருப்பவளவண்ணம், திருப்பரமேஸ்வர விண்ணகரம் என 14 வைஷ்ணவ திவ்வியதேசங்கள் அமைந்துள்ளன.
* ‘அத்திகிரி’ எனப்படும் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில், அத்திவரதர் என்று அழைக்கப்படும் அத்திமரத்தில் செய்யப்பட்டுள்ள பெருமாள், கோயில் திருக்குளத்தில் மூழ்கி இருப்பார். இவரை 40 வருஷங்களுக்கு ஒருமுறை வெளியில் எடுத்து பூஜைகள் செய்வார்கள். பின்னர் 10 தினங்கள் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படுவார்.
* ‘சித்ரா பெளர்ணமி’ அன்று இரவு 12 மணிக்கு மேல் பிரம்மனே நேரில் வந்து வரதராஜப் பெருமாளை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம்! இந்நாளில் எம்பெருமானுக்குப் பிரசாதத்தைக் கருவறையில் வைத்துவிட்டு பட்டர்கள் வெளியேறிவிடுவர். ஒரு நாழிகை கழித்துக் கருவறையைத் திறந்தால், அங்குத் தூய நறுமணம் கமழ்வதாகச் சொல்லப்படுகிறது.
* ஸ்ரீவரதருக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்தவர் திருக்கச்சி நம்பிகள்!
* ஸ்ரீராமாநுஜரைத் திருவரங்கத்துக்குச் செல்லுமாறு பணித்தது காஞ்சி வரதராஜ பெருமாள்தான்.
* வரதராஜ பெருமாளின் உற்ஸவ மூர்த்தி, அந்நியர்களின் படையெடுப்பின் காரணமாக கி.பி.1688-ல் திருச்சி உடையான் பாளையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டார். பின்னர், ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் தம்முடைய சீடரான தோடர்மாலின் உதவியுடன் கி.பி.1710-ல் மீண்டும் காஞ்சிக்குக் கொண்டு வந்தார். இதுபற்றிய விவரம் ஆலயத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.
* திருஅட்டபுயகரத்தில் பெருமாள் எட்டு திருக்கரங்களோடு காட்சி தருகிறார். வலப்புறம் உள்ள நான்கு கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும், இடப்புறம் உள்ள நான்கு கரங்களில் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் ஆகியவற்றையும் ஏந்தி உள்ளார்.
* சிவாசார்யர்களால் பூஜிக்கப்படும் திவ்ய தேசம் திருநிலாத்திங்கள் துண்டம் ஆகும். இது ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ளது.
* ஓங்கி உலகளந்த பெருமாள் காட்சி தரும் திருக்கோயில் திருவூரகம். இங்குள்ள ஆதிசேடனாகிய நாகமூர்த்திக்குத் திருமஞ்சனம் செய்து, பாயசம் நைவேத்தியம் செய்தால் புத்திரப் பேறு கிடைக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். இந்தக் கோயிலிலேயே திருநீரகம், திருக்காரகம், திருக்கார்வனம் என்னும் மூன்று திவ்விய தேசங்களும் உள்ளன.
*‘தொண்டைநாட்டின் கண்’ என்று போற்றப்படும் காஞ்சி, தேவியின் நாபிப் பகுதி விழுந்த தலம் என்பதால், அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
* காஞ்சி ‘நகரேஷு காஞ்சி’ என்றும், ‘சத்திய வ்ரத க்ஷேத்திரம்’ என்றும் போற்றப்படுகிறது. முக்தி தரும் ஏழு தலங்களில் தென்னகத்தில் உள்ள ஒரே தலம் காஞ்சி.
* ஒரு பக்கம் சிவன் கோயிலும், நடுவில் முருகன் கோயிலும், மறுபுறத்தில் அம்பாள் ஆலயமும் உள்ள தலம் சோமாஸ்கந்த தலம் எனப்படுகிறது. காஞ்சியின் வடக்கே ‘ஏகாம்பரநாதர்’ ஆலய மும், நடுவில் ‘குமரக்கோட்டம்’ முருகன் கோயிலும், தெற்கே ‘காமாட்சி அம்மன்’ ஆலயமும் உள்ளதால், காஞ்சி சோமாஸ்கந்த தலமாகும்.
* காஞ்சியில் சைவத்துக்கு எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் ஏகாம்பரநாதர் ஆலயம், காமாட்சி அம்மன் ஆலயம், குமரக்கோட்டம், திருக்கச்சி மேற்றளி, திருஓணகாந்தன்தளி ஆகியவை முக்கியமானவை.
* காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் மூலவர் மணலால் ஆனவர். இந்த லிங்க பாணத்தின் மீது தண்ணீர் படக்கூடாது. எனவே, புனுகு மட்டும் சார்த்தப்படுகிறது. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும்.
*காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் ‘திருக்காமகோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. காஞ்சி எல்லையில் இருக்கும் பெரும்பாலான சிவன் கோயில்களில் அம்பாளுக்கென்று தனிச் சந்நிதி இல்லை. காமாட்சி அம்மனையே அம்பாளாக வழிபடுகின்றனர். அம்பாள் சித்தாசனத்தில் வீற்றிருந்து அருளாட்சி புரிவது சிறப்பானது. ஆதிசங்கரர் இங்கு ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்துள்ளார்.
* நாலந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக விளங்கிய தருமபாலரும், பேராசிரியரான தினகரரும், புத்த சமயத்தின் தத்துவ நூல்களை இயற்றிய போதிதர்மரும் காஞ்சியைச் சேர்ந்தவர்கள்.
* இரண்டாம் மைசூர் போர் நடைபெற்றபோது, ஆங்கிலேயர்களால் ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஒரு படைத் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.
* ஆதிசங்கரர் இங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலில் ஸ்ரீசக்கரத்தைப் பிரதிஷ்டை செய்ததுடன், ‘அத்வைத’ தத்துவத் தைப் பரப்புவதற்கு காமகோடி பீடத்தை ஸ்தாபித்தார்.
* கி.பி.700 முதல் 726-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன் ஸ்ரீகயிலாசநாதர் கோயிலை, காஞ்சியில் எழுப்பினான். தமிழகத்தின் சிற்பக் களஞ்சியம் என்று சொல்லப்படும் இந்தக் கோயிலில், ஒரு தூணில் செதுக்கப்பட்டுள்ள சிம்மம் மிகவும் உயிர்ப்புடன் காணப்படுகிறது.
* காஞ்சி கச்சபேசத்தில் சரஸ்வதிக்கென தனிச் சந்நிதி உள்ளது. சரஸ்வதியின் திருவடிவம் கூத்தனூர் சரஸ்வதி போலவே அமைந்துள்ளது.
*காஞ்சி வரதராஜ பெருமாளின் ஆடி கருட சேவை உற்ஸவத்தின்போது, பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து, கோயிலுக்குள் உள்ள அனந்த சரஸ் புஷ்கரிணிக்கு எழுந்தருள்வார். அப்போது கருட வாகனதில் வீற்றிருக்கும் பெருமாளையும், அனந்த சரஸையும் தரிசித்தால் கண் திருஷ்டி விலகும் என்பது ஐதீகம்.
* காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவின் மேற்குப் புறத்தில் பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது சித்திர குப்தர் ஆலயம். கேது கிரகத்தின் பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது.
* தன்னை மிஞ்சிய ஸ்ரீமத் ராமாநுஜரை காசிக்கு அழைத்துச் செல்லும் வழியில் கொலை செய்யத் திட்டமிட்டார் குரு யாதவப் பிரகாசர். இதைத் தெரிந்துகொண்ட ஸ்ரீமத் ராமாநுஜர் விந்திய மலையிலிருந்து காஞ்சிபுரம் திரும்ப ஆயத்தமானார். அத்தருணம், திசை தெரியாமல் காட்டில் தவித்துக்கொண்டிருந்த ஸ்ரீமத் ராமாநுஜருக்கு வரதராஜ பெருமாளும், பெருந்தேவி தாயாரும் வேடர் கோலத்தில் தோன்றி வழிகாட்டி அழைத்து வந்துள்ளனர். அவ்வாறு அவர் வந்து ஆட்கொண்ட இடம்தான், காஞ்சிபுரம் – சாலைக் கிணறு சந்நிதி. இன்னமும் காஞ்சி- வந்தவாசி சாலையில், செவிலிமேடு என்னும் இடத்தில் இருக்கும் அந்த சாலைக் கிணற்றிலிருந்துதான் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது.
* காஞ்சிக்கு அருகில் உள்ள பிள்ளையார்பாளையத்தில் அஷ்ட பைரவர் ஆலயம் அமைந்துள்ளது.