பொருள் புதுசு: ஸ்மார்ட் குடை
பல தொழில்நுட்பங்களுடன் இந்த குடை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் இந்தக் குடையின் செயலியை இணைத்துக் கொண்டால் வெப்பநிலை, ஈரப்பதம் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
ஸ்மார்ட் லென்ஸ்
ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படும் சக்தி வாய்ந்த மிகச்சிறிய லென்ஸ் இது. 400 மெகாபிக்சல் திறன் கொண்டது. தொலைவில் உள்ளவற்றையும் நமது செல்போன் மூலம் ஜூம் செய்து படம் எடுக்கலாம். எடை குறைவு என்பது கூடுதல் சிறப்பம்சம்.
பைக் கண்காணிப்பு கருவி
இரு சக்கர வாகனத்தின் திறன் மற்றும் செயல்பாட்டினை அறிந்து கொள்வதற்காக இந்த கருவி வடிவமைக்கபட்டுள்ளது. பைக்கில் பொருத்தப்படும் இந்த கருவி ஸ்மார்ட்போன் செயலி மூலம் தகவல்களை அளிக்கும். வாகனத்தின் வேகம், பெட்ரோல் இருப்பு அளவு, பிரேக்கிங் சிஸ்டம், இன்ஜின் செயல்பாடு என பல்வேறு தகவல்களை ஸ்மார்ட்போனுக்கு அனுப்பிவிடும். இந்த தகவல்களை அளிப்பதற்காக பல சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மைக்ரோபோன், வை-பை வசதிகள் இருக்குமாறு வடிவமைத்துள்ளனர்.
ஒயர் இல்லாத கேமரா
இன்றைய நிலையில் ஒயர்கள் இல்லாத கேமராக்கள்தான் எல்லா இடத்திலும் உள்ளன என்பது நமக்கு தெரியும். அப்படியான கேமராக்களில் சற்று வித்தியாசமாக இந்த கேமராவை வடிவமைத்துள்ளனர். நாணய வடிவில் இந்த கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கேமராவை எங்கு வேண்டுமானாலும் எளிதாக பொருத்திக் கொள்ள முடியும். 2 மெகாபிக்சல் திறன் கொண்டது என்றாலும் 120 டிகிரி அளவிற்கு உள்ள இடத்தை முழுவதுமாக படம் பிடித்துக் காட்டுகிறது.