பொறுத்திருந்து பார்ப்போம்: ரூ.700 கோடி நிதியுதவி குறித்து கேரள முதல்வர்
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் கனமழையால் அம்மாநிலமே உருக்குலைந்து லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் பலியாகியும், ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தும் உள்ளதால் அவர்களுக்கு இந்தியாவின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிதியுதவி குவிந்து வருகிறது.
இந்த நிலையில் கேரளாவின் பெரும்பாலான மக்கள் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் பணிபுரிவதால் அந்நாடு சமீபத்தில் கேரளாவுக்கு ரூ.700 கோடி நிவாரண நிதி தருவதாக அறிவித்தது. ஆனால் உள்நாட்டில் ஏற்படும் பேரிடர் போன்ற இழப்புகளுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில்லை என கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து இந்தியா கொள்கையை பின்பற்றி வருவதால் இந்த நிதியை மத்திய அரசு ஏற்கவில்லை என்று கூறப்பட்டது
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ‘2016ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை கொள்கையின் படி, பேரிடர் காலங்களில் வெளிநாடுகள் அளிக்கும் உதவியை மத்திய அரசு ஏற்கலாம் என்றும், ஐக்கிய அரபு அமீரக நிதியுதவி விவகாரத்தில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இறுதி முடிவை அறிந்து கொள்ளும் வரை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் கூறியுள்ளார்.