போராட்டக் களத்தை மாற்றும் ஷர்மிளா!

போராட்டக் களத்தை மாற்றும் ஷர்மிளா!

6உலகிலேயே நீண்ட நெடிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி, வரலாற்றில் அழுத்தமாக இடம்பெற்றிருக்கிறார் இரோம் ஷர்மிளா. நீதிக்காகவும் அமைதிக்காகவும் அகிம்சை வழியில் போராடியவரை, பதினாறு ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தது காந்திய தேசம். தன்னுடைய அறப் போராட்டத்தை அரசியல் போராட்டமாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கும் ஷர்மிளா, ஆகஸ்ட் 9 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு, போராட்டங்களின் மூலம் அரசியலுக்கு வரும் ஓர் அரசியல்வாதியாகவும் தனித்துவம் பெறுகிறார் ஷர்மிளா.

போராட்டத்தின் பின்னணி

1958-ம் ஆண்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி கலவரங்கள் நிகழக்கூடிய பொது இடங்களில் ஐந்து பேர் கூடி நின்றால் விசாரணையின்றி சுட்டு வீழ்த்தலாம். எந்த நேரத்திலும் யாரையும் வாரண்ட் இன்றிக் கைது செய்யலாம். இந்தச் செயல்களைச் செய்யும் ராணுவத்தினர் மீது வழக்குத் தொடர முடியாது. அவர்களுக்குத் தண்டனையும் கிடையாது. இந்தச் சட்டம் இன்றுவரை தவறாகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் வடகிழக்கு மாநிலங்களில் 5,500 அப்பாவி மக்கள் அரசியல் வன்முறைகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குப் பலியாகி இருக்கிறார்கள்.

யார் இந்த ஷர்மிளா?

மணிப்பூரில் பிறந்து வளர்ந்த ஷர்மிளா, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி, ராணுவத்தினர் நடத்திவந்த கொடுமைகளைக் கவனித்துவந்தார். அமைதிக்காகப் போராடும் இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டார். 2000, நவம்பர். மாலோம் கிராமப் பேருந்து நிறுத்தத்தில் பத்துப் பேர் நின்றிருந்தனர். அந்த வழியே வந்த சிறப்பு ஆயுதப்படை, இவர்களைக் கண்டதும் சுட்டுத் தள்ளியது. மாலோம் படுகொலை நாட்டையே உலுக்கியது. அமைதிப் பேரணிகள் மூலம் இந்தக் கொடுமையை ஒழிக்க முடியாது என்று நினைத்தார் ஷர்மிளா.

நவம்பர் 4. ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை விலக்கிக்கொள்ளும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்வதாக அறிவித்தார். உணவும் நீரும் இன்றி இருந்த ஷர்மிளாவை மூன்றாவது நாள் தற்கொலை செய்ய முயன்றதாகக் கூறி, கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கும் தன் போராட்டத்தைத் தொடர்ந்தார் ஷர்மிளா. போராட்டத்தில் அவர் உயிர் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக அவரது விருப்பமின்றி, மூக்கில் குழாய் பொருத்தப்பட்டு, திரவ உணவும் வைட்டமின்களும் செலுத்தப்பட்டுவருகின்றன.

கடினமான போராட்டம்

பல் தேய்க்கும்போது தண்ணீர் உபயோகித்தால், தன் உறுதி குலைந்து விடுமோ என்று பஞ்சை வைத்துப் பற்களைச் சுத்தம் செய்துகொள்கிறார். வறண்ட உதடுகளை ஸ்பிரிட் வைத்து துடைத்துக்கொள்கிறார். தலைக்கு எண்ணெய் வைப்பதில்லை, வாரிக்கொள்வதுமில்லை. கண்ணாடி பார்ப்பதில்லை. செருப்பு அணிவதில்லை. தன் அன்பு அம்மாவையும் சந்திப்ப தில்லை என்று உறுதியோடு இருக்கிறார்.

மருத்துவமனை அறையே சிறைக் கூடமாக மாற்றப்பட்டிருக்கிறது. பகல் நேரத்தில் அறையை விட்டு வெளியேவர அனுமதி இல்லை. அவரை யாரும் சந்தித்துவிடவும் முடியாது.

உடலையும் மனதையும் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு யோகா செய்கிறார். நிறைய படிக்கிறார். எழுத்து, கவிதை என்று ஷர்மிளாவின் நேரம் கரைகிறது.

விடுதலையும் கைதும்

ஓராண்டு வரையே தற்கொலை முயற்சிக்காகச் சிறையில் அடைக்க முடியும் என்பதால், மீண்டும் மீண்டும் விடுதலை செய்து, கைது செய்துவருகிறது அரசாங்கம். 2006-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டபோது, இம்பாலில் இருந்து தப்பித்து, டெல்லி வந்தார் ஷர்மிளா. காந்தி சமாதியில் வணங்கிவிட்டு, ஜந்தர் மந்தரில் போராட்டத்தை ஆரம்பித்தார். ஷர்மிளாவின் போராட்டம் இந்திய அளவில் தெரியவந்தது. மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் இறங்கினர். அச்சமடைந்த அரசாங்கம் மீண்டும் ஷர்மிளாவைக் கைது செய்து, காவலில் வைத்தது.

ஒருபக்கம் ஷர்மிளாவின் போராட்டம் உலகத்தின் கவனத்தைப் பெற ஆரம்பித்தது. பல்வேறு அமைப்புகள் ஷர்மிளாவை விடுதலை செய்யும்படி கோரிக்கை வைத்தன. பல்வேறு விருதுகளை வழங்கின. இன்னொரு பக்கம் கடுமையான எதிர்ப்புகள், மிரட்டல்கள், துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வந்தார் ஷர்மிளா. அவரது உடல்நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. ஆனால் அவரது உள்ளமோ உறுதியாகிக் கொண்டே இருந்தது.

16 ஆண்டு காலம் உண்ணாவிரதம் இருப்பது ‘மெடிக்கல் மிராகிள்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஷர்மிளாவின் உடல் பாகங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மாதவிடாய் சுழற்சி நின்றுவிட்டது. எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து வரலாம் என்பதால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர்.

“நீதி, உண்மை, அன்பு, அமைதிக்காகத்தான் போராடிவருகிறேன். இது எனக்கான போராட்டம் இல்லை. மக்களுக்கான போராட்டம். இந்தப் போராட்டத்தால் என்னை நானே தண்டித்துக்கொள்வதாக நினைக்கவில்லை. போராடுவது என் கடமை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் விரைவில் நீக்கப்படும் என்று நம்புகிறேன்’’ என்றார் ஷர்மிளா.

ஷர்மிளாவின் அம்மாவோ, “எந்தத் தாயும் தன் குழந்தை பட்டினி கிடக்க விரும்ப மாட்டாள். ஒரு தாயாக அவள் போராட்டத்தைக் கைவிடுமாறு பொறுப்பற்றவளாகக் கூற மாட்டேன். நான் அவளைப் பார்த்துப் பலவீனப்படுத்திக் கொள்ள மாட்டேன். அவளும் என்னைப் பார்த்துப் பலவீனப்பட்டுக்கொள்ள அனுமதிக்க மாட்டேன். மக்களுக்காகப் போராடுகிறாள். ஷர்மிளா என் குழந்தை மட்டுமல்ல, இந்தத் தேசத்தின் குழந்தை. அவள் மரணமடைவதற்குள் ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்’’ என்கிறார்.

இன்றைய நிலை என்ன?

அரசுகள் மாறினாலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் விலக்கிக் கொள்ளப்படப்போவதில்லை என்ற உண்மையைத் தன்னுடைய 16 ஆண்டுகாலப் போராட்டத்தின் மூலம் அறிந்துகொண்டார் ஷர்மிளா. வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமின்றி, சமீபத்தில் காஷ்மீரிலும் இந்தச் சட்டத்தை அமல்படுத்தியிருப்பது அரசாங்கத்தின் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டிவிட்டது.

அரசியல் போராட்டம்

காந்திய தேசத்தில் காந்தியப் போராட்டத்துக்கு அர்த்தம் இல்லை என்பதை உணர்ந்த ஷர்மிளா, அரசியல் போராட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகக் களம் இறங்க இருக்கிறார். தாமதமான முடிவு என்றாலும் மிகச் சிறந்த முடிவு. மணிப்பூர் மக்கள் தங்கள் அருமை மகளின் பின் அணிவகுத்து நிற்பார்கள். 16 ஆண்டு காலப் போராட்டம் பெற்றுத் தராத நீதியை, ஷர்மிளாவின் அரசியல் போராட்டம் பெற்றுத் தரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

எளிய பின்னணியில் இருந்து வந்த ஒரு பெண்ணால் கடுமையான போராட்டக்காரராக மாறி, மக்களை வழிநடத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஷர்மிளா!

Leave a Reply