போலி சாமியார்களை பெண்கள் சுலபமாக நம்பி ஏமாறுவது ஏன்?

போலி சாமியார்களை பெண்கள் சுலபமாக நம்பி ஏமாறுவது ஏன்?

கடவுள் இருக்கிறாரா… இல்லையா?’ என்கிற தத்துவார்த்தச் சண்டைகளும் தர்க்கங்களும் ஒருபுறம் இருக்கட்டும். ‘இருக்கிறார்’ என்று நம்புகிறவர்களுக்குள் மண்ணைப் பிடித்து கடவுள் என்பதற்கும் ‘சாதாரண மனிதனையும்’ அதே இடத்தில் நிறுத்தி, அவனையும் கடவுள் என்று நம்புவதற்குமானப் புரிதலின் சிக்கல்தான் பெண்களின் மீதான போலி (ஆ)சாமிகளின் பாலியல் பிரச்னைகளைத் தொடரச் செய்கிறது.

உளவியல்

மதப் பாகுபாடுகள் எல்லாம் இல்லாமல், பெரும்பான்மையான மதங்களில் குரு ஸ்தானத்தில் இருந்துகொண்டு, கடவுளின் அவதாரமாகத் தங்களை புரொமோட் செய்தபடி, லெவிடேட் (Levitate) செய்வதாக ஏமாற்றி, பலர் எலிவேட் (Elevate) ஆகிவிடுகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் தவறாமல், குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் தலைப்புச் செய்திகளாக இவை வந்தாலும், நின்றபாடாக இல்லை.

இதில் ஆண்கள், தொழிலதிபர்கள், நம்பிக்கை மிகுந்த பக்தர்கள், அரசியல்வாதிகள், முதலீட்டாளர்கள்… என எத்தனையோ பேர் பலி ஆடுகளாக ஏமாற்றப்பட்டு இருப்பார்கள். ஆனால், இதில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் மட்டுமே ஊடகங்களுக்குப் பிரதானம். பெண்மையைப் பிரதானப்படுத்தினால் மட்டுமே பல நிகழ்வுகளைச் சுடச்சுடவோ, சுவாரஸ்யமாகவோ கொண்டு செல்ல முடிவதாகப் பெரும்பான்மையான ஊடகங்கள் நம்புகின்றன. பல நேரங்களில் அது அப்படியே நிரூபணமும் ஆகிறது. காரணம், இன்றும் என்றும் பெண்தான் இவ்வுலகின் கவனயீர்ப்பு விசை.

நிதமும் எங்கோ ஒரு மூலையில் வன்முறைக்குள்ளாகும் பெண் குழந்தைகள், விஷ்ணுப் பிரியா, நந்தினி போன்ற பெண்கள் மீதான பாலியல் வெறித்தனங்கள் அரங்கேறியதை அறியும்போது நமக்கு ஏற்படும் இன்ஸ்டன்ட் கொந்தளிப்பும் பதற்றமும் ஒருபுறமிருக்க, இதுபோன்ற போலி ஆசாமிகளை நம்பிச் செல்லும் பெண்களைப் பார்க்கும்போது, அது வேறு மாதிரியான மன உணர்வையே பொதுப்புத்தியாக வெளிப்படுத்துகிறது.

உளவியல்ரீதியிலான பகுப்பாய்வில், `இதுபோன்ற போலி ஆசாமிகளின் சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் அல்லது அப்படிப்பட்ட ஆசாமிகளின் வளர்ச்சிக்கும், அவர்கள் முன்வைக்கும் இளைப்பாறுதலுக்கான கருத்துக்கும் இதுவரை ‘ஆம்’ போட்டவர்களில், பெண்களுக்கென என்ன ஒரு தனி உளவியல் இருந்துவிடப் போகிறது?’ எனத் தோன்றினாலும், அது வெகுஜனத்துக்குப் புரியவேண்டும். அந்தப் புரிதல் இருந்தால் மட்டுமே உண்மையான பிரச்னை எதுவென கவனம் மாறும். இல்லையேல், வெறும் பக்தைகளான பெண்களை டீஸ் செய்யும் இன்னொரு நிகழ்வாகவும் இது நீர்த்துப்போகும். அது நீர்த்துப்போகும்போது செய்திக்கான வேறொரு காரணம் மற்றும் வேறு சில பெண்கள் என அப்போது அடுத்தகட்ட செய்தியாக மட்டுமே உணர்வுகள் ட்யூன் செய்யப்படும். எனவே, செய்திகளைவிட அதற்குப் பின்னான தேடல் `தனி ஒருவன்’போல உளவியலை உள்நோக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்பது இன்றைய பிரச்னைகளின் தேவையடுக்கில் பதுங்கியுள்ளது.

அடிக்கடி போலி `ஆசாமி’யை நம்பி பாலியல் பிரச்னைக்குள்ளாகும் பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் தொடர்ந்து அப்படியான இடங்களில் சிக்கிக்கொள்ளும் இப்பெண்கள் என்ன தனித் தீவில் வளர்க்கப்பட்டவர்களா அல்லது இதற்கு முன்னான இப்படியான நிகழ்வு பற்றி கேள்வியுறாதவர்களா எனப் பார்த்தால், இல்லை. ஆக, இவர்கள் வெகு சகஜமாக எங்கும் பரவியிருக்கும் ஒருமித்த மனநிலை உடைய பெண்கள் கூட்டம் மட்டுமே. மீண்டும் மீண்டும் இந்தச் சமூகத்தில் ஒவ்வொரு பிரச்னையையும் காமன் சைக்காலஜி (Common psychology) கொண்டு பார்க்கவேண்டிய அவசியம் இருப்பதை அழுத்தமாக உணர முடிகிறது.

தன் சுயத்தை அறியாமல், எதையும் ஆராய்ந்து பார்க்காமல், பகுத்தறிவையும் உள்ளுணர்வையும்கூட கவனிக்காமல், எப்போதும் பிறரைச் சார்ந்து வாழும் தன்மைகொண்ட எந்தப் பெண்ணுக்கும் இந்தக் கதி நிகழலாம் என்ற உளவியல்தான் இவற்றைத் தைரியமாகச் செய்யும் ஆசாமிகளுக்குச் சாதகமாக நகர்த்திச் செல்கிறது என்பேன். அவர்கள் தொடர்ந்து சிரித்தபடி, நிழற்படங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டே நகர்ந்தும் செல்கிறார்கள்.

யோசிக்கக் கடினம்தான். ஆனாலும், வாழ்வதற்கான தேவைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண பெண்ணுக்கும், உலக வாழ்வைத் தாண்டி எங்கேயோ சிந்திப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த ஆசாமிகளுக்குமான Bridging factor எது எனப் பார்த்தால், அது பெண்கள் மனதில் பதிந்திருந்தும் Dependency எனும் சார்பின் ஒரு தீவிரம் எனலாம்.

ஆதிச் சமூகத்திலிருந்து பரிணமித்து (??!!), ஆண் தலைமை ஏற்ற காலத்திலிருந்து, பெண் ஏதோ ஒன்றைச் சார்ந்து வாழ்பவளாகவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாள். அந்த Dependency! ஒரு காலகட்டம் வரை பெற்றோர், பின்னர் கணவன், அதன் பின்னர் பிள்ளைகள்… எனத் தன் வாழ்வை ஓர் ஒட்டுண்ணியாகவே சார்புநிலையில் வாழப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாள். ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு வர்க்கக் குடும்பத்திலும் வெவ்வேறுவிதமான Dependency-ஐ மையப்படுத்தி இது நகர்கிறது எனலாம்.

`ஆண் அப்படியில்லையா?’ எனக் கேட்டால், ஆண் என்பவன் பொருளீட்டவும், நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் ஆரம்பம் முதலே தனக்கான தேவைகளை நோக்கித் தன்னையும், தன் சூழலையும் பழக்கப்படுத்திப் பழகியவன். இன்றைய ஆண், பெண் என்பவர்கள் நேரடியான ஆதாம், ஏவாள் அல்ல! வழி வழியாக வரும் ஆண், பெண் பதிவுகளின் தொடர்கதைகள்.

மாறிவரும் காலகட்டத்தில் குடும்ப அமைப்புகள் எல்லாம் சிதறிக்கொண்டிருந்தாலும், பெண் என்பவளுக்குக் குடும்பம் என்ற சார்புநிலை (Dependency) இல்லாமல் போனாலும்கூட, வேறு ஏதோ ஒரு சார்பை உருவாக்கியபடியே அவள் வாழ்ந்துகொண்டிருப்பாள். அது அவளுக்கான தொழிலோ, சேவையோ… ஏதோ ஒரு வகையில் வாழ்வதற்கானத் தேவைகளை உருவாக்கி அந்தத் தேவைகளைச் சார்ந்து வாழப் பழக்கப்பட்டிருக்கிறாள். அதை வாழ்க்கைக்கான பிடிப்பு என்றும் அவள் நம்பிக்கொண்டிருக்கிறாள்.

சாமியார்

குடும்பமோ, தொழிலோ… பெண் எப்போதுமே வாழ்க்கையின் அடுத்த அடுத்த கட்டங்களை யோசித்தே வாழ்ந்துவருவதை உணரலாம். அதனால்தான் ஆண் என்பவன் பொருள் ஈட்டுபவனாகவும், பெண் என்பவள் குடும்பத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தின் காரணியாகவும் உருவாக்கம் பெற்றிருந்தார்கள். காலப்போக்கில் எல்லா வித்தியாசங்களும் உடைகின்றன என்று சொல்லிக்கொண்டாலும், பெரும்பாலும் பெண்கள் வேலைக்குச் செல்வது என்பதிலும், கூடுதல் சுமையுடன் அதே Dependancy-ல் வாழ்பவர்கள்தான் அவர்களில் ஏராளம்.

கணவனோ, பிள்ளையோ அவர்களின் ஒவ்வொரு கட்டத்திலும் தன் இருப்பையும் சார்பையும் உறுதிப்படுத்தியபடியே பெண் வாழ்க்கை கட்டமைத்துக்கொள்ளப்படுகிறது. தெளிவான எண்ண ஓட்டம் இருக்கும் வரை இது சரியாகவே அமைகிறது. ஆனால், சார்புநிலையின் பிடியில், தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் அடையாளப்படுத்திக்கொள்ள சமுதாயத்தின் முன் அவள் எடுக்கும் முனைப்பும் ஆர்வமும் அவர்களின் தேவைகளைத் தாண்டி சிந்திக்கவும், பல நேரங்களில் அதை நம்மை மீறிய இறை சக்தியிடம் மண்டியிட்டுப் பெறவும் உந்தித் தள்கிறது.

இன்றளவும் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது, தீ மிதிப்பது, பிற மதங்களின் நோன்பு முறைகள்… என அனைத்திலும் பெண் என்பவள் தன் தேவைகளைச் சார்ந்து முன்னேற்றிக்கொள்ளும் இன்னொரு சக்தியை துணைக்கு அழைக்கிறாள். மற்றொரு பக்கம் நவீன யோகப் பயிற்சி, வாழ்வியல் பயிற்சி, முக்தி பெற பயிற்சி… என்று ஒரு கம்யூனுக்குள் அவளுக்கு இடம் கிடைக்கிறது.

தன் குடும்பத்தில் Dependency-யால் மனஅழுத்தம் கொண்ட பெண் மட்டுமே இந்த இரண்டிலும் மிக எளிமையாக வீழ்த்தப்படுகிறாள்.

போலி ஆசாமிகளுக்கு Testinmonials தரும் நம்மவர்களாலும், சில மேலைநாட்டு பக்தர்களாலும் மனபலம் கிடைப்பதாக நம்பிச் சேரும் பலரும், இயல்பாக நிகழும் பல மாற்றங்களைக்கூட பெரும்பாலும் இதனுடன் தொடர்புபடுத்தி, `தன் செயலுக்குத்தான் மட்டுமே காரணம்’ என்பதைப் பல இடங்களில் மறக்கத் தொடங்குகிறார்கள். பின்னர் மறைக்கத் தொடங்கவேண்டியிருக்கிறது. இப்போதும் இந்த நிலையில் பெண்ணின் சார்புத்தன்மை குறையவில்லை. மாறாக, இடம் மாறுகிறது. இங்கே கடவுளெனக் காத்திருப்பவர்கள் மூர்க்கமானவர்களாக இருக்கிறார்கள். பெண்ணோ, Dependency எனும் தீவிரத்தில் சுயசிந்தனையை இழந்திருக்கிறாள்.

ஆரம்பத்தில் இந்த Dependency என்பது மன நிம்மதிக்கான விஷயமாக அமைந்தாலும், ஒவ்வொரு கட்டத்திலும் தன் பலம் பற்றிய எல்லாச் சிந்தனைகளையும் தவிர்த்துவிட்டு, முற்றிலும் தன்னை மீறிய ஏதோ ஒன்றால் மட்டுமே எல்லாம் நிகழ்ந்துவிடும் என நம்பத் தொடங்குகிறாள். இந்தத் தொடக்கம்தான் சுயத்துக்கான முடிவாகவும் மாறிப்போகிறது.

கடவுளின் தூதர்கள் என்பவர்களுக்குச் சாதாரண மனிதனைவிடத் தேவைகள் அதிகமாக இருப்பதைக்கூட ஆராய முடியாத அளவுக்கு இருக்கிறாள் பெண். அதனால், கடவுள் மீதான அவளின் நம்பிக்கைகளை ஆசாமிகள் மீதும் வைக்கத் தொடங்கும் மூட நம்பிக்கை அவளைக் கவ்விக்கொள்கிறது. இப்போது Dependency Law-படி, Dependency-க்கும் மூட நம்பிக்கைக்கும் இடையேயான பாலம் மிக உறுதியாகவே இருக்கிறது.

இந்த அலசல் எதற்காக என்றால், நம் வீட்டில் இப்படி எங்கேயோ முழுவதுமாக ஏதோ ஒரு மதத்தில், வழிபாட்டில், குரு சன்னிதானங்களைத் தொழுதபடி இருக்கும் பெண்களைக் கேலிக்குள்ளாக்காமல் அவர்களோடு பேசுவதையும், புரியவைப்பதையும் தாண்டி, சார்பின்மையைச் சரி செய்வதற்கான பகுத்தறிவைப் புகுத்துவதும், தாமும் ஏற்றுக்கொள்வதும் இன்றைய தனிமனிதக் கடமையாக இருக்கிறது.

Leave a Reply