ப்ளீஸ்… இதையெல்லாம் ஃபேஸ்புக்ல பண்ணாதீங்க..!
கார் ஓட்ட கத்துக்கொண்ட போது முதல்நாள் என் ஆசான் சொன்னது இன்னமும் நினைவில் இருக்கு. “எப்படி ஓட்டணும்னு கொஞ்ச நாள்ல சொல்லித்தறேன். அதுக்கு முன்னாடி, எப்படியெல்லாம் ஓட்டக்கூடாதுன்னு சொல்லிடறேன்”. அந்த மகான் சொன்னத நான் காருக்கு மட்டுமில்ல… எல்லாத்துக்குமே அப்ளை செஞ்சிடுவேன். அதுல ஒண்ணுதான் ஃபேஸ்புக்.
ஆஃபிஸ்ல ஹைக்குக்காக வேலை செய்றவன விட, லைக்குக்காக வேலை செய்றவன் தான் அதிகம். இந்த ஃபேஸ்புக் மோகத்தால வேலையை விட்டு போனவன்லாம் இருக்கான். இந்தப் பாழா போன ஃபேஸ்புக் நம்மள ஓவரா டாமிநேட் செய்ய விடாம, நம்ம கட்டுப்பாட்டுல வச்சுக்கிறது ரொம்ப முக்கியம். ஆனா எப்படி? இப்ப அந்த டிரைவிங் ஸ்கூல் மகான் சொன்னத கவனிங்க. என்னலாம் பண்ணக்கூடாது?
வாட்ஸ் அப் ஒண்ணும் வாடகை கேட்கிற ஐட்டம் இல்ல. எல்லோர்கிட்டயும் மொபைல் இருக்கு. அதுல வாட்ஸ் அப் இருக்கு. காலைல பத்து மணிக்கு நமக்கு வந்த ஃபார்வர்ட் கொஞ்ச டிலே ஆகி நைட்டு 10 மணிக்கு மத்தவங்களுக்கு வரலாம். அந்த கேப்ல அதை ஒரு போஸ்ட்டா போட்டு லைக் வாங்கவே கூடாது. எனவே, ஃபார்வர்டு விஷயங்களை காப்பி அடிக்கிறத முதல்ல நிறுத்துங்க.
வாசிப்புன்றது…. எழுதுனவருக்கும் படிக்கிறவருக்கும் இடையே நடக்கிற கள்ளக்காதல்னு ஒரு தமிழ் இலக்கியவாதி சொல்லியிருக்காரு. அது அவங்கவங்க அந்தரங்கம். அதை பொதுவுல எழுதி “இப்ப நான் என்ன படிக்கிறேன் தெரியுமா”ந்னு புக் ஃபோட்டோ போடுறது, நடுவுல ஒரு பத்தியை உருவி எழுதுறதெல்லாம் ரொம்ப தப்பு. “எனக்கு அவரு எழுதினது புரிஞ்சிடுச்சு”ன்ற மமதை, திமிர்லாம் எந்த விதத்திலும் நமக்கு உதவாது. அதனால், நீங்க என்ன படிக்கிறீங்கன்றத இன்னொருத்தரு படிக்கிற மாதிரி நடந்துக்காதீங்க.
ஃப்ரெண்ட்ஸ பாத்தா பேசுங்க… உங்க போஸ்டுக்கு தேவையான சுவாரஸ்ய கண்டெண்ட் எதுவும் பேச மாட்றானேன்னு கடுப்பாகாதீங்க. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் செம காமெடின்னு சொல்றானேன்னு எகத்தாளமா நினைக்கதீங்க. ஏன்னா, அவங்கதான் இங்க மெஜாரிட்டி. அந்த மெஜாரிட்டி கிடைக்கணும்னுதான் எல்லா தலைவரும் சமாதில போய் ஜபம் பண்றாங்க.
கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதேன்னு எதிர் வீட்டு ஆட்டோ டிரைவர் எங்கிட்ட சொல்லல. எழுதிக் காட்டியிருக்காரு. அதனால போஸ்ட் போட்டதும் அதுக்கு எத்தனை லைக்ஸ், எத்தனை கமெண்ட்ஸ்ன்னு எண்ணுற வேலையை விட்டுடுங்க.. பின்நவீன பிச்சாண்டி என்ன சொல்றாருன்னா, போஸ்ட் பட்டன அமுக்கிறவரைக்கும் தான் அது எழுதுனவனுக்கு சொந்தம். பப்ளிஷ் ஆயிட்டா அது எல்லோருக்கும்னு சொல்றாரு. அப்படி பார்த்தா அதுல விழுற லைக்ஸ் எல்லாம் உங்களுக்கு இல்லைன்றத…ப்ளீஸ் புரிஞ்சிக்குங்க.
கமெண்ட் வந்தா படிக்கலாம். தேவைப்பட்டா பதில் போடலாம். அதை விட்டு, அதுக்கு லைக் போட்டு “உன் கமெண்ட்ட படிச்சிட்டண்டா வெண்ணை”ந்னு ஓலை அனுப்பணுமா?
எப்படி இருக்கன்னு கேட்டா நல்லாருக்கன்னு சொல்லணும். எங்க இருக்கன்னு கேட்டா வேளச்சேரின்னு சொல்லணும். ரெண்டுக்கும் மணி 10ந்னு சொல்வோமா? அப்புறம் ஏன் யார் என்ன எழுதினாலும் ஆஹான் வடிவேலுவையோ, ஒரு பக்கம் கண் அடிக்கிற எமோஜியையோ மட்டும் போடுறீங்க? ப்ளீஸ். இந்தப் பழக்கத்த உடனே மாத்திக்குங்க.
மத்த எதை வேணும்னாலும் பண்ணுங்க… பண்ணாம போங்க… ஃபேக் ஐடின்னு தெரிஞ்சே வாழுற பொண்ணு, திடீர்ன்னு பொங்குன்னா “சாட்டையடி தோழி”னு தயவு செஞ்சு கமெண்ட் பண்ணாதீங்க. என்னைக்காவது ஒருநாள் அந்த தோழியோட நிஜ ஐடி கூட நாம சண்டை போட்டா, இன்பாக்ஸ் ஸ்க்ரீன்ஷாட் வெளியாகலாம். எல்லோருக்குள்ளயும் ஒரு சுசி இருக்காங்கன்றத மறந்துடாதீங்க.
அப்ப ஃபேஸ்புக்ல என்னதான் பண்ணனும்னு கேட்கறீங்களா? நல்லதா ஒரு போஸ்ட் படிச்சா ஷேர் பண்ணிட்டு வேலையை பார்க்க போங்க. ஏன்னா, Work while you work like when you like னு வெள்ளைக்காரனே சொல்லியிருக்கான்…