மகளிர் தினம் உண்மையான வரலாறு
மார்ச் மாதம் தொடங்கியதுமே மகளிர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி அழைப்பிதழ்களை ஏராளம் பார்க்க முடியும். அவற்றில் பல கோலப்போட்டி, ஃபேஷன் ஷோ, பாட்டுப் போட்டி, ரங்கோலி எனப் போட்டிகளின் அணிவகுப்பாகவே இருக்கும். மகளிர் தினம் உருவான வரலாற்றைத் தெரிந்துகொண்டால், இதுபோன்ற போட்டிகளை நடத்த மாட்டார்கள் என்றே நம்பலாம். மகளிர் தினம் பற்றிப் பல வரலாறுகள் சொல்லப்பட்டுவருகின்றன. அவற்றை எல்லாம் அலசி, தெளிவான ஒரு நூலை எழுதியிருக்கிறார் இரா.ஜவஹர். அதனால்தான் நூலின் பெயரையே, ‘மகளிர் தினம் உண்மையான வரலாறு’ என்று வைத்திருக்கிறார்.
அழகிப் போட்டிகளைப் பெரு நிறுவனங்கள் தங்களின் வியாபாரத்துக்கான தளமாக மாற்றிவரும் சூழலில், மகளிர் தினமும் அந்தப் பாதிப்பு வளையத்துக்குள் சென்றுக்கொண்டிருக்கிறது. மகளிர் தினத்தன்று நடத்தப்படும் அழகுப் போட்டிகளுக்கு ஏராளமான பொருள்செலவு செய்யப்படுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள்மூலம் பணம் ஈட்டும் வணிகம் வழியாக மகளிர் தினம் மாறி வருவதை நம் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. இந்த நிலையில் மாற்றம் வரவேண்டுமெனில், மகளிர் தினம் உருவாவதற்குக் காரணமானவர்கள் பற்றியும் அவர்களின் ஈகையைப் பற்றியும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, இந்த நூல் மிகவும் உதவும். பல்வேறு புதிய தகவல்களை அள்ளித்தரும் நூலின் சில விஷயங்கள் இதோ!
சோஷலிஸ்ட் பெண்கள் இயக்கம்
1886 – ம் ஆண்டு மே 1 -ம் தேதி எட்டு மணி, வேலை நேரத்தைக் கோரி அமெரிக்காவில் வேலை நிறுத்தம் தொடங்கியது. குறிப்பாக சிகாகோ நகரில் போராட்டம் மையம்கொண்டது. 4-ம் தேதி போலீஸாரின் துப்பாக்கிக்கு பல தொழிலாளர்கள் பலியானார்கள். பலர் தூக்கிலிடப்பட்டனர். இவற்றிற்கான நீதி வேண்டி, எங்கெல்ஸின் உதவியோடு சோஷலிஸ்ட் அகிலம் உருவானது. இதன் முதல் மாநாடு பிரான்ஸின் பாரிஸ் நகரில் 1889ல் நடந்தது. இந்த மாநாட்டில் பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பலரும் கலந்துகொண்டனர். இதில், பெண் மார்க்சிஸ்ட்டான கிளாரா ஜெட்கினும் மகளிர் தினம்கலந்துகொண்டார். அங்கு, வேலை நேரம், ஆண் பெண் சமத்துவம் உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதை, உலகமெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டவர்களில், கிளாரா ஜெட்கினும் ஒருவர். இதன் வளர்ச்சிப்போக்கில்தான் சோஷலிஸ்ட் பெண்கள் இயக்கம் உதயமானது.
பத்திரிகை:
1907-ல் லண்டனில் நடந்த சோஷலிஸ்ட் பெண்கள் மாநாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேறின. கிளாரா ஜெட்கினை ஆசிரியராகக்கொண்டு நடத்திவந்த ‘தி க்ளைசைட்’ (சமத்துவம்) இதழ், அமைப்பின் இதழாக அங்கீகரிக்கப்பட்டது.
நகரம் மற்றும் தேசிய அளவில் முதல் மகளிர் தினம்!
அமெரிக்காவின் சிகாகோ, நியூயார்க் நகரங்களில் 1908-ம் ஆண்டில் ,பெண்களுக்கான உணர்ச்சிகரமான கூட்டங்களை சோஷலிஸ்ட் கட்சியின் பெண்கள் பிரிவு நடந்தின. இதுவே, நகர அளவில் கொண்டாடப்பட்ட முதல் மகளிர் தினம்.
1909, பிப்ரவரி 28 ஞாயிறு அன்று அமெரிக்காவில் பல இடங்களில் ‘பெண்களின் வாக்குரிமைக்கான ஆர்பாட்டம், மிகச் சிறப்பாக நடந்தது. இவற்றில், பெண்களும் ஆண்களும் திரளாகக் கலந்துகொண்டார்கள். இதுபற்றிச் செய்தி வெளியிட்ட சோஷலிஸ்ட் பத்திரிகைகள், ‘மகளிர் தினம்’ என்றே குறிப்பிட்டன. இதுவே, தேசிய அளவில் கடைபிடிக்கப்பட்ட முதல் மகளிர் தினம்.
உலக மகளிர் தினம் உருவானது எப்படி?
1910 -ம் ஆண்டு டென்மார்க்கில், கிளாரா ஜெட்கின் தலைமையில் சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில், கருவுற்ற பெண்கள், தாய்மார்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களோடு, வரலாற்றுப் புகழ் மிக்க மகளிர் தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின் ஒரு பகுதி
”அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த சோஷலிஸ்ட் பெண்கள், ஒரு தனிச் சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தைக் கடைபிடிக்க வேண்டும். பெண்கள் பிரச்னை முழுவதுடனும் வாக்குரிமைக் கோரிக்கையை இணைத்து, விவாதிக்க வேண்டும். இது தொடர்பான மாநாடு, சர்வதேசத் தன்மையுடன், கவனமாகத் தயாரிக்கப்பட வேண்டும்.”
மகளிர் தினத்தைக் கடைபிடிக்க இதுதான் என்று எந்தத் தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதுவே, மகளிர் தினத்துக்கான மூலகாரணம்.
1910-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம்தான் ‘உலக மகளிர் தினத்தின்’ உண்மையான மூலகாரணம் (Real origin) ஆகும்.
உலக அளவில் முதல் மகளிர் தினம்
டென்மார் மாநாட்டுத் தீர்மானத்தின் செயல்வடிவமாக, 1911 மார்ச் 19 ஞாயிறுக்கிழமையில் ஆஸ்ட்ரியா, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் கொண்டாடப்பட்டது.
பிரஷ்யாவில் (முந்தைய ஜெர்மனி) 1848ம் ஆண்டில் மக்கள் புரட்சிக்குப் பணிந்த அரசர், பெண்களுக்கும் வாக்குரிமை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்த தேதி அது. அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. எனினும் அந்த எழுச்சியை நினைவுகூறும் வகையிலேயே மார்ச் 19 ந் தேதி தேர்வு செய்யப்பட்டது.
ரஷ்யப் பெண் புரட்சியாளரும், உலக சோஷலிஸ்ட் பெண்கள் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான கொலந்தாய் இது பற்றி உணர்ச்சிகரமாக மகளிர் தினம்விவரிக்கிறார்:
மகளிர் தினம் அல்லது உழைக்கும் மகளிர் தினம் என்பது தொழிலாளி வர்க்கப் பெண்களின் உலக ஒற்றுமைக்கான தினம். தங்களது பலத்தையும் அமைப்பையும் பரிசீலித்துப்பார்க்கும் தினம். ஜெர்மனியும், ஆஸ்ட்ரியாவும் உணர்ச்சி வேகத்தால் உடல் சிலிர்த்துக் கொந்தளிக்கும் பெண்கள், கடல் போல காணப்பட்டனர். நகரங்கள், கிராமங்கள், எங்கு பார்த்தாலும் கூட்டங்கள். பல இடங்களில் சாலைகளில் பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 30 ஆயிரம் பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடமிருந்து பேனர்களை அகற்றப் போலீஸார் முயற்சித்தார்கள். பலமான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரத்தக்களரி ஏற்படும் சூழ்நிலை உருவானது. சோஷலிஸ்ட் எம்.பி-க்களின் தலையீட்டால் தவிர்க்கப்பட்டது என்கிற பொருளில் விவரிக்கிறார், கொலந்தாய். இவ்வாறு, முதல்முறையாக நடத்தப்பட்ட உலக மகளிர் தின இயக்கம் வெற்றிகரமாக நடந்தேறியது. அடுத்து, 1912, மே -12 ஞாயிறு அன்று ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் உலக மகளிர் தினம் சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்டது.
ஏன் மார்ச் 8?
டென்மார்க் தீர்மானத்தில், மகளிர் தினம் கொண்டாடுவது என இருந்தாலும் நாள் குறிப்பிடப்படவில்லை. அதனால், உலகின் பல நாடுகளில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டாலும் இதுதான் அந்த நாள் என வரையறுக்கவில்லை. ஒவ்வொரு நாடுகளில், அந்த நாட்டுக்கு ஏற்ற தினத்தில் மகளிர் தினத்தைக் கடைபிடித்துவந்தனர். அதுபோல ரஷ்யாவில் 1914-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாள் நடத்தத் திட்டமிட்டனர். அதற்கு முன் ஜார் அரசு, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுப் பெண்களில் 30 பேரைக் கைதுசெய்தது. அதை மீறியும் கூட்டம் நடந்தது.
முதல் உலகப் போரினால், ரஷ்யாவில் வேலையின்மை, பசியால் மக்கள் பரிதவித்தார்கள். 17 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். 20 லட்சம் பேர் கைதும், 10 பேர் காணாமலும் ஆக்கப்பட்டனர். அதனால், அவர்களின் தாய்மார்கள், மனைவி, மகள் உள்ளிட்டோரை நோக்கி, “உங்கள் கணவர்கள் எங்கே? உங்கள் மகன்கள் எங்கே?” எனும் கோஷத்தை முன்வைத்தது. சுவிட்சர்லாந்தில் நடந்தது உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு.
அந்தக் குரலை ஒங்கி ஒலிக்க அவர்கள் தேர்ந்தெடுத்த தினம்தான் மார்ச் 8 (1917-ம் ஆண்டு) அன்றையத் தினம் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டமாக மகளிர் தினப் பேரணி நடந்தது.
இன்னும் சில நாட்களில் மகளிர் தினம் வரவிருக்கிறது. அந்த நாளில் மகளிர் தினம் உருவான உண்மையான அர்த்தம் புரிந்து கொண்டாடுவோம். பெண்களின் உரிமைகளுக்கான தினமாக அந்த தினத்தை உணர்வோம்.