மகளிர் மட்டும் ஜிம்!
பெருநகரங்களில் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடங்கள், உள்ளரங்க விளையாட்டுக் களங்களைக் காண்பது அதிசயமல்ல. ஆனால் பலரும் ஆரம்பிக்கத் தயங்கும் திருநெல்வேலியில் பெண்களுக்கென்று உடற்பயிற்சிக் கூடம் அமைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் பத்மா.
இளம் வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டாலும் அதற்குப் பிறகு எம்பிஏ, எம்ஃபில் படித்த பத்மா, யோகாவிலும் உடற்பயிற்சிகளிலும் பட்டயப் படிப்புகளை முடித்திருக்கிறார். முறையான பயிற்சிகளையும் பெற்றிருக்கிறார். கணவர் யுனைடெட் ஜிம் தொடங்கியபோது அதில் தன்னை இணைத்துக்கொண்டு பயிற்சிகளை அளித்துவந்தார். தனது பத்து ஆண்டு அனுபவங்களை வைத்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடத்தைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்திவருகிறார்.
திருநெல்வேலி டவுன் ஆர்ச் அருகில் இருக்கும் ஜிம்மில் பெண்களுக்கு ஏற்ற நவீன உடற்பயிற்சிக் கருவிகளை வைத்திருக்கிறார். உடற்பயிற்சிக்காக வரும் பெண்களின் உடல் ரீதியான பிரச்சினைகளை எழுதி வாங்கிக்கொள்கிறார். பிறகு அவர்களுக்கான உடற்பயிற்சிகளைத் திட்டமிட்டு, ஆலோசனைகள் வழங்குகிறார். எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், எப்படியெல்லாம் மனதளவில் பயிற்சிகளுக்குத் தயாராக வேண்டும் கூறுகிறார். பிசியோதெரபிஸ்ட், டயட்டீஷியன் போன்றோரை அவ்வப்போது வரவழைத்து அவர்களின் ஆலோசனைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறார்.
“திருநெல்வேலி போன்ற நகரங்களில் பெண்களுக்குத் தனியாக உடற்பயிற்சிக் கூடம் அமைத்தால் வரவேற்பு இருக்குமா என்ற தயக்கம் ஆரம்பத்தில் இருந்தது.
இப்போது அப்படியில்லை. பெண்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து உடற்பயிற்சி செய்கிறார்கள். காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணிவரை வேலைக்குச் செல்லும் பெண்கள், வேலைக்குச் செல்லாத பெண்கள் என்று பல தரப்பினரும் வருகிறார்கள். பெண்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தகுதியானவர்களாக உருவாக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதிரடியாக உடல் எடையைக் குறைக்கக் கூடாது. பெண்களுக்குத் தேவையான பயிற்சிகள், கவுன்சலிங், உணவு முறை போன்றவற்றைப் பரிந்துரைத்து, யோகாவும் கற்றுத் தருவதுதான் எங்கள் ஜிம்மின் சிறப்பு” என்கிறார் பத்மா.