மகள்களால் சூழப்பட்டது உலகு!’
ஒவ்வொரு ஆணுடைய வாழ்விலும், ஒவ்வொரு கட்டத்திலும் எத்தனையோ பெண்கள் கடந்து சென்றிருப்பார்கள். அம்மாவாக, காதலியாக, தோழியாக, மனைவியாக, உறவினராக இந்தப் பட்டியல் முடிவில்லாத ஒரு ஆழி சூழ் ’உறவு’.
ஆனால், இத்தனை பெண்களையும் தாண்டி ஒருவனுக்கு எல்லா விதமான மகிழ்ச்சியையும், வாழ்க்கை மீதான பிடிப்பினையும் பெற்றுத் தருகின்ற ‘தனியொருத்தி’ இருக்கின்றாள். அவள் பெயரால் வேறுபட்டிருந்தாலும், ஒரு புள்ளியில் அவளை ஆணுடன் இணைக்கும் அடைமொழி, ‘மகள்’. இங்கு எல்லா ஆண்களுக்குமே ‘மகள்களால் சூழப்பட்டது உலகு’.
இந்த மகள் என்னும் சொல்லின் கீழ், மேலே சொல்லப்பட்ட எல்லாப் பெண்களும் கண்டிப்பாக அடங்கி விடுவார்கள். ஏனெனில், வாழ்வின் தொடக்கத்தில் எல்லாப் பெண்களுமே ‘மகள்’தான்.
‘அதென்ன மகள் என்றால் மட்டும் அவ்வளவு முக்கியத்துவம்? மகன்களும்தான் வாழ்க்கைப் பாதையில் இருக்காங்க’ என்று யாரும் கேட்கலாம்.
ஆனால், அந்த மகனுக்கே ஒரு சின்ன மனக்குழப்பமோ அல்லது ஏதோ ஒரு தலை வெடிக்கும் பிரச்னையோ ஆனாலும், ஆலோசனை சொல்லவும், அணைத்து ஆறுதல் சொல்லவும் ஒரு பெண் வேண்டும். பெண்களே ஸ்பெஷல்தான். அதிலும், அவர்களே மகள்களாக இருக்கும்போது…? கேட்கவே வேண்டாம்.
அவர்கள் ஏன் அவ்வளவு ஸ்பெஷல்? ஏனெனில், பல ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய சகோதரனுக்காக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட அக்காக்கள் வயிற்றில் சிசுவாக இருக்கும்போதே தங்களுடைய வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர். பெண் சிசுக்கொலை கொடிகட்டிப் பறந்த காலகட்டமது.
அதிலிருந்து ஏதோ கொஞ்சம் மீண்டு வந்தவர்களுக்கு, பூதாகரமான வாழ்வியல் பிரச்னையாக உருவெடுத்து நின்றது ‘வரதட்சணை’. பொட்டு நகைக்காகவும், கற்றைப் பணத்திற்காகவும் ‘ஸ்டவ்வை தாமாகவே பற்றவைத்து’ உயிரிழந்த மகள்களுக்காக எத்தனை, எத்தனையோ பெற்றோர் கதறியிருக்கின்றனர்.
இரண்டுமே இன்றும் கண்ணுக்குத் தெரியாத தூசி போல நம்மிடையே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும், இதற்கெல்லாம் சிகரம் வைத்து நடந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்னை, ‘பாலியல் பலாத்கார கொலைகள்’.
ஒவ்வொரு நாளும், இந்தியாவில் 22 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன்முறை வழக்கு பதிவாகின்றதாம். ஒவ்வொரு 5 நிமிடங்களிலும், யாரோ ஒரு முகம் தெரியாத மகளொருத்திக்கு ஏதோ ஒரு சமுதாயக் கொடுமை நிகழ்த்தப்படுகின்றதாம்.
இதையெல்லாம் நிகழ்த்துபவர்களுக்கும் இன்றோ, நாளையோ ஒரு மகள் பிறப்பாள். இல்லை ஏறக்குறைய ஒரு மகள் இருப்பாள். அவர்களும் கூட, மகள்களின் மீது அதீத பாசம் வைத்திருந்தவர்களாக, வைத்திருப்பவர்களாக இருக்கலாம். ஏதோ, ஒரு சூழ்நிலையில் நிலைதடுமாறிப் போய் மற்ற பெண்களும், யாரோ ஒருவனுக்கு மகள்தான் என்பதை நினைக்கத் தவறியவர்கள்தான் அவர்கள்.
’மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்… முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்று’ அருமையான வரிகளைப் படைத்த கவிஞர் முத்துக்குமார் ஒரு மகன். ஆனாலும், ஒரு தந்தை – மகளின் பாசத்தை அவரால் அழகாக எழுத்தில் வடிக்க முடிந்ததற்கு காரணம் அவர் வாழ்க்கையில் கடந்து வந்த யாரோ ஒருவரின் ‘மகள்கள்’.
அப்பா – மகன் இருவருமே ஒரு வீட்டில் விருந்தாளிகள் போல் பேசிக்கொண்டு திரியும்போது அசால்ட்டாக அப்பாவின் பாக்கெட்டில் கைவிட்டு பாக்கெட் மணியை எடுத்துக் கொண்டு செல்ல மகள்களால் முடியும்.
சமையலே தெரியாத நிலையில், ‘நீயெல்லாம் போற இடத்தில் என்ன கஷ்டப்பட போறியோ’ என்று அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டே அவர் ஆசையாக அள்ளி வைத்த அரை பிளேட் பிரியாணியை சாப்பிட நீங்கள் கண்டிப்பாக மகளாக இருந்தாக வேண்டும்.
ஒற்றைப் பிள்ளைகளே போதும் என்று இந்தியாவே கதறிக் கொண்டிருந்தாலும், இரண்டு பெண் குழந்தைகளுடன் சகோதரனாக பிறந்தவன் கண்டிப்பாக பாக்கியம் செய்தவன். அதுவும் அண்ணாவும், தங்கையுமாக பிறந்தவர்கள் வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருக்க முடியவில்லையே என்ற குறையே தெரியாது.
அண்ணனை மாட்டி விடுவதில் இருந்து, ‘அவனுக்கு அரியர் இருக்கு…’ என்று சொல்லி ஆப்பு வைப்பது வரை, தங்கைகளுக்கு தினமும் கொண்டாட்டம்தான். ஆனாலும், இத்தனை அலப்பறைகள் செய்தாலும் தங்கையையும் ஒரு கட்டத்தில் மகள்களாகத்தான் காண்பார்கள் அன்புள்ள அண்ணன்கள்…
பெற்றோரின் நல்வாழ்விற்காக உலகின் ஏதோ ஓர் மூலையில் தனியாளாக ஒரு மகள் உழைத்துக் களைத்துப் போயிருக்கலாம். தனக்கு பின்பு பிறந்தவர்களின் திருமணத்திற்காக அவசர அவசரமாக பார்க்கப்பட்ட முகம் தெரியாத ஒருவனை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டிருக்கலாம்.
எத்தனையோ ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் கடந்து முன்பொருநாள் ஒருவன் மகளாக இருந்தவள், இன்று தன்னுடைய மகளுக்காக போராடிக் கொண்டிருக்கலாம். ஏதோ ஒரு சூழலில் பாலியல் வன்முறைக்கு உள்ளான ஒருத்தி, அதை சற்றே துடைத்தெறிந்துவிட்டு, உடைந்து போன தந்தைக்காக மகிழ்ச்சியை முகத்தில் வரவழைத்துக் கொண்டிருக்கலாம்.
சமூக வலைதளம் மட்டுமே உலகமென்றும், கேலி, கிண்டல்களே வாழ்க்கையென்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எல்லோருடைய வாழ்விலும் ஒரு மகள் கண்டிப்பாக இருந்தே தீருவாள். நிழலுலகம் தாண்டி நிஜ உலகில், பெண்கள் அனைவரையுமே மகள்களாக பார்க்கத் தொடங்கும் ஒவ்வொருவனுக்கும் அவள் ‘தாயுமானவள்’!