சுய ஜாதகத்தில் லக்னத்திற்கு 2,7-ம் மிடம் சுப வலுப் பெற்று தசா புத்திகள் ஒரளவேனும் சாதகமாக இருந்தால் கோட்ச்சார குரு 2, 7, 11-ம் பாவகம் அல்லது அதன் அதிபதிகளுடன் தொடர்பு பெறும் காலத்திலும், ஆணின் ஜனன ஜாதக சுக்கிரனுக்கு கோச்சார குரு சம்பந்தம் பெறும் காலங்களிலும், பெண்னின் ஜனன செவ்வாய்க்கு கோட்சார குரு சம்பந்தம் பெறும் காலத்திலும் திருமணம் நடைபெறும். இதை சிலர் “குரு பலம்” என்றும் “வியாழ நோக்கு” என்றும் ” கங்கண பொருத்தம் ” என்றும் கூறுவார்கள். 2,7,11-ம் பாவக அதிபதிகளின் தசா புத்தி காலங்களிலும் அதன் அதிபதிகளின் நட்சத்திர தசா, புத்தி, அந்தர காலங்களில் கோட்சார குரு பலம் இல்லாவிட்டாலும் திருமணம் நடைபெறும். பொதுவாக சுக்கிர தசா,புத்தி அந்தரகாலங்களிலும் 2,7,8,12-ம் பாவகங்கள் சுப வலிமையுடன் இயங்கும் காலங்களிலும் திருமணம் நடைபெறும்.
பரிகாரம் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைவது மிகப் பெரிய வரப்பிரசாதம். பூர்வ புண்ணிய பலம் பெற்றால் ஒருவனுக்கு ஒருத்தியாய், ஒருத்திக்கு ஒருவனாய் நல் இன்பத்துடன் சுற்றமும் நட்பும் நிரம்ப பெற்று மகிழ்வான திருமண வாழ்வு அமையப் பெறுவார்கள்.ஒரு சில காரணங்களால் திருமணம் கால தாமதமாகும் போதோ , நடக்காமல் இருக்கும் போதோ நமது பிராரப்த கர்மா என்பதை ஏற்று பிரபஞ்சத்திடம் கோரிக்கை வைத்து விட்டு காலம் கனியும் வரை பொறுமை காக்க வேண்டும். அதை விடுத்து ஜாதகத்தை தனக்கு சாதகமாக மாற்றி எழுதி வினைப் பதிவை அதிகரிக்க கூடாது. மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் தசா புத்தியே நிர்ணயம் செய்கின்றன.
தசை நடத்தும் கிரகம் சுப வலுப்பெறும் காலங்களில் இயல்பாகவே சிறப்பான பலன்கள் நடந்துவிடும். கெடு பலன்கள் ஏற்படும் தசாபுத்தி காலங்களில் செய்யப்படும் வழிபாடுகள் தசா புத்தி அமைப்பையும் மீறி சுப பலன்களை வழங்கும். எனவே தசா புத்தி சாதகமாக இல்லாத காலங்களில் குல, இஷ்ட தெய்வங்களை ஆத்மார்த்தமாக சரணாகதியடைந்து வழிபட வேண்டும். தசை நடத்தும் கிரகத்திற்குரிய அதிதேவதைகளை உரிய முறையில் வணங்க வேண்டும். சரபேஸ்வரர், பைரவர், நரசிம்மர், ஆஞ்சநேயர் வழிபாட்டிற்கு அனைத்து விதமான கிரக தோஷங்களின் பாதிப்பையும் குறைக்கும் வல்லமை உண்டு.