மசூத் அசார் பாகிஸ்தானில்தான் உள்ளார். அமைச்சர் ஷா மசூத் குரேஷி
புல்வாமா பகுதியில் தீவிரவாதிகல் நடத்திய தாக்குதலில் சிஆர்பி.எப் வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு ஜெயிஷ்-இ-முகம்மது அமைப்பு தான் காரணம் என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து இந்தியாவின் அந்த அமைப்பின் முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை எடுத்ததால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை இன்று விடுவிப்பதாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெயிஷ்-இ-முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மசூத் குரேஷி உறுதி செய்துள்ளார். மசூத் அசாரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அதனால் அவர் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மசூத் அசாரின் குற்றங்களுக்கு எதிராக இந்திய இராணுவம் ஆதாரங்களை அளித்தால், அதை ஆராய்ந்து, உண்மை இருக்கும் பட்சத்தில் அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டு, இரு நாடுகளையும் பேச்சுவார்த்தை நடத்தக் கூறியது வரவேற்கத்தக்க ஒன்று என்று பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் -அமெரிக்கா இடையே சுமூகமான உறவு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.