மணக்கும் மதுரை: கறிதோசை
எட்டுத் திக்கும் மணம் வீசும் மல்லிகை மட்டுமல்ல மதுரையின் அடையாளம். பரந்து விரிந்த மீனாட்சி அம்மன் கோயில், மல்லிகையின் நிறத்தோடு போட்டி போடும் இட்லி, வேறெங்கும் காண முடியாத சுவையோடு விளங்கும் கறிதோசை, பாரம்பரிய அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டு, தன்னிகரில்லா சுங்குடி புடவை போன்றவையும் மதுரையின் அடையாளங்களே. எந்த நேரமும் சாப்பிட ஏதாவது கிடைக்கும் இந்தத் தூங்கா நகரத்தின் உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத் தருகிறார்கள் ‘பெண் இன்று’ வாசகிகள்.
கறிதோசை
என்னென்ன தேவை?
தோசை மாவு – சிறிதளவு
கொத்துக்கறி – கால் கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள், மிளகாய்த் தூள் – தலா 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சட்டியில் எண்ணெய் ஊற்றி, நன்கு சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்குங்கள். அதனுடன் கொத்துக் கறியைச் சேர்த்து வேக வையுங்கள். பின்னர் மல்லித் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறுங்கள். சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிரேவி பதம் வரும்வரை கறியை வேகவிட்டு எடுங்கள்.
தோசைக் கல்லில் மாவை ஊற்றி, வேகவைத்த கறிக்கலவையை தோசையின் மேல் பரப்புங்கள். நான்கு முதல் ஐந்து நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடுங்கள். தோசை மேல் மல்லித்தழை அல்லது வெங்காயத்தைத் தூவுங்கள். நன்றாக வெந்ததும் எடுத்து, சூடாகப் பரிமாறுங்கள். கறிதோசைக்கு எலும்பு, சிக்கன் கிரேவி, குருமா இவற்றில் ஏதாவதொன்றைத் தொட்டுக்கொள்ளலாம்.