மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நாளை (15-ந்தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு
பிரசித்திபெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றான சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் மண்டல பூஜையும் ஒன்றாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நாளை (15-ந்தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

அதை தொடர்ந்து சபரி மலை ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரத்து அம்மன் கோவில் புதிய மேல் சாந்திகள் பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு மூலமந்திரத்தை உபதேசம் செய்வார்.

மறுநாள் (16-ந்தேதி) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 3.30 மணி முதல் காலை 11.30 மணி வரை சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடை பெறும். உச்ச பூஜைக்கு பிறகு பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 3 மணிக்கு திறக்கப்படும். இரவு 11 மணி வரை சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். அதன்பிறகு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும்.

வருகிற 26-ந்தேதி பிரசித்திபெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும். மண்டல பூஜையையொட்டி சபரிமலைக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டு சுமந்து சாமியே சரணம் ஐயப்பா என்ற கோ‌ஷம் முழங்க சபரிமலைக்கு ஐயப்பனை தரிசனம் செய்ய செல்வார்கள்.

இதையொட்டி சபரிமலையில் உள்ள புனித நதியான பம்பை நதி தூய்மைப்படுத்தப்பட்டு படித்துறைகளும் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவம், குடிநீர், மின்விளக்கு போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு மண்டல பூஜைக்கு ஐயப்பன் கோவில் தயார் நிலையில் உள்ளது.

சபரிமலையில் அசம்பா வித சம்பவங்களை தடுப்பதற்காக மூன்று அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளி மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Leave a Reply