மண வாழ்க்கை அருளும் மாடக்கோயில்!
நாளொன்றுக்கு ஐந்துமுறை நிறம் மாறும் சிவலிங்கம்.
நவகிரகம் இல்லாத திருக்கோயில்.
சாந்தசொரூபியாகக் காட்சி தரும் அஷ்டபுஜ காளி.
குந்திதேவிக்கு தோஷ நிவர்த்தி அளித்த ‘சப்த சாகர’ தீர்த்தம்.
யானை நுழையமுடியாத மாடக் கோயில்.
வேறெந்த சிவாலயத்திலும் காண்பதற்கரிய சிறப்பாக… பக்தர்களின் தலையில் திருவடி (சடாரி) வைக்கும் திருத்தலம்.
அப்பப்பா… ஒரு தலத்துக்கு இத்தனைச் சிறப்புகளா? எங்கு உள்ளது இந்த சிவக்ஷேத்திரம்?
உங்களுக்குள் எழும் இதே கேள்விகள், இந்தக் கோயிலைப் பற்றி அறிந்ததும் நமக்குள்ளும் எழுந்தன.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகிலுள்ள நல்லூர் எனும் தலத்துக்குத்தான் இத்தனைச் சிறப்புகளும் என்பதை அறிந்ததும், உடனே கிளம்பிச் சென்றோம், நல்லூர் தலத்தைத் தரிசிக்க!
தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தில் இறங்கி, இடதுபுறம் பிரியும் சாலையின் உள்ளே சென்றால், 3 கி.மீ. தூரத்திலேயே வந்துவிடுகிறது நல்லூர்.
கோயிலை அடைந்ததும் முதலில் நம் கண்களில்படுவது, ராஜ கோபுரத்துக்கு எதிரே உள்ள பெரிய தீர்த்தக்குளம்தான். ஏழு கடல்களும் இதில் வந்து கலப்பதாக ஐதீகம். எனவே ‘சப்த சாகரம்’ என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணம் மகாமகக் குளத்தின் பெருமைக்கு சற்றும் குறைந்ததல்ல, இந்த சப்த சாகரத்தின் கீர்த்தி. மழை பொய்த்ததால், இப்போது நீரின்றி வறண்டு கிடந்தாலும் குளத்தின் பிரமாண்டம் மலைக்கவைக்கிறது!
நான்கு புறங்களிலும் 12 படித்துறைகளுடன் விளங்கும் இந்தத் திருக்குளம், ஆதியில் பிரம்மனால் உருவாக்கப்பட்டது. நான்கு திசைகளிலும் நான்கு வேதங்களையும் நடுவே சப்த கோடி மகா மந்திரங்களையும் வைத்து இந்தக் குளத்தை பிரம்மதேவர் புனிதமாக்கினார் என்கிறது, இவ்வூரின் தலபுராணம். கோயிலுக்குள் நுழைந்து, கோயில் அலுவலகத்தில் இருந்த உள்ளூர் மணியம் நடராஜனிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர், மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றதுடன், நம்முடனேயே வந்து, கோயில் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் விவரமாகக் கூறினார்.
‘‘இந்தக் குளம் சாதாரணமான குளம் இல்லை… மாசி மகத்தன்று, கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளித்தால் என்ன பலன் கிடைக்குமோ, அதே பலன் இதில் நீராடி னால் கிடைக்கும் என்பது நம்பிக்கை’’ என்று தொடங்கிய மணியம், அந்தக் குளத்தின் புராணச் சிறப்பு குறித்து மேலும் விவரித்தார்.
‘‘பாண்டவர்களின் தாய் குந்திதேவி, கர்ணனை ஆற்றில் விட்டதால் தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குமாறு இறைவனிடம் பிரார்த்தித்தாள். அதன் பலனாக, `ஒரேநாளில் ஏழு சமுத்திரங்களில் நீராடினால் தோஷம் நீங்கும்; மன நிம்மதி கிடைக்கும்’ என்று அறிந்தாள். ஆனால், பெண்ணாகிய தனக்கு ஒரே நாளில் ஏழு சமுத்திரங்களில் நீராடுவது சாத்தியமா என்ற கலக்கம் உண்டானது அவளுக்கு.
அவளின் அந்தக் கலக்கத்தைத் தீர்க்கும் பொருட்டு, ஏழு சமுத்திரங்களின் தீர்த்தத் தையும் இந்தக் குளத்துக்கு வரும்படி அருள்பாலித்தார் இறைவன். குந்திதேவியும் இந்தத் தீர்த்தத்தில் நீராடி, நல்லூர் பெரு மானுக்குப் பூஜை செய்து, மன நிம்மதியும் தோஷ நிவர்த்தியும் அடைந்தாள் என்கிறது தலபுராணம். இதை மெய்ப்பிக்கும் வகையில், குந்தி சிவபூஜை செய்யும் சிற்பம் ஒன்றும் இங்கு இருக்கிறது.
குந்திதேவி, இந்தத் தலத்தில் நீராடி தனது தோஷம் நீங்கப்பெற்றது ஒரு மாசிமக நாளாகும். எனவே இந்த சப்தசாகர தீர்த்தத் தில் நீராடுவதால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். அதுமட்டுமல்ல, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு மண்டல காலம் இந்தத் திருக்குளத்தின் பன்னிரண்டு படித்துறைகளிலும் நீராடி, பன்னிரு முறை கோயிலை வலம் வந்து, சிவனாரை வழிபட்டால், அந்த நோய் அகலும் என்பது நம்பிக்கை. அதேபோல், மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கே வந்து நீராடுவது, ரொம்ப விசேஷம்’’ என்றார் நடராஜன்.
ராஜகோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால், விசாலமான முதல் பிராகாரத்தை அடையலாம். அங்கே கொடிமர விநாயகர், கொடிமரம், பலிபீடம், நந்தீஸ்வரரைத் தரிசிக்கலாம். வடக்கில் வசந்த மண்டபமும், தெற்கில் துலா மண்டபமும் உள்ளன. அமர் நீதி நாயனார் தராசுத் தட்டில் ஏறி அமர்ந்த கதை நிகழ்ந்தது இந்த துலா மண்டபத்தில் தான். அடுத்ததாக ஒரு சிறு கோபுரத்துடன் ஒரு வாயில். அதில் நுழைந்தால், நேர் எதிரில் காசி பிள்ளையாரைத் தரிசிக்க முடியும். அவரை வணங்கிவிட்டு இடதுபுறம் திரும்பி, படிக்கட்டுகளில் ஏறிச்சென்றுதான் ஸ்வாமி சந்நிதியை அடைய முடியும்.
‘‘மற்ற கோயில்களைப் போல, இங்கே ராஜ கோபுரத்திலிருந்து நேரே கருவறைக்குப் போக முடியாது. ஏனெனில், இது மாடக்கோயில்; கோச்செங்கட்சோழன் கட்டியது’’ என்கிறார் மணியம். ‘மாடக்கோயில்’ என்பது, யானை ஏறிப் புக முடியாதவாறு அமைந்தது. பிரதான வாயிலும் அடுத்தடுத்த வாயில்களும் நேர்க்கோட்டில் அமைந்திருக்காது. உள் பிராகாரத்தில் நுழைந்து, சில படிக்கட்டுகள் ஏறிச்செல்வதுபோன்று மூலவர் சந்நிதி அமைக்கப்பட்டிருக்கும்.
திருவானைக்கா திருத்தலத்தின் தலப் புராணம் தெரியும்தானே. சிவபக்தியில் சிறந்த சிலந்தியும் யானையும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதையும், இறுதியில் யானைக்கும் சிலந்திக்கும் எம்பெருமான் மோட்சம் அளித்த திருக்கதையையும் மிக அழகாக விவரிக்கும் திருவானைக்கா தலத்தின் புராணம். சிவபுண்ணியம் காரணமாக மறுபிறவியில் கோச்செங்கட்சோழனாகப் பிறந்த சிலந்தி, பூர்வஜன்ம பயனால், யானைகள் நுழையமுடியாத மாடக் கோயில்களாக பல சிவாலயங்கள் எழுப்பியதாக வரலாறு. அவற்றில் இந்த நல்லூர் திருக்கோயிலும் ஒன்று. இந்த மாடக்கோயிலைமலை மல்கு கோயில், வானமருங் கோயில், மல்லார்ந்த கோயில் என்றெல்லாம் போற்றுகிறார் திருஞானசம்பந்தர்.
புராணப் பின்னணியை அறிந்தபடியே உள் பிராகாரத்தை வலம் வருகிறோம். அப்பர், சம்பந்தர், சுந்தரர், குந்திதேவி சிவனைப் பூஜிக்கும் திருக்கோலம், இத்தலத்துக்கு வந்து முக்தி பெற்ற அமர்நீதி நாயனார், சண்டேசுவரர், துர்கை, நடராசர் நர்த்தனமாடும் திருச்சிற்றம்பலம், சனீஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் மற்றும் அம்பிகையுடன் இரு சிவலிங்கத் திருமேனிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இவர்கள் அனைவரையும் வணங்கி வலம் வந்தபிறகே, மாடத்தில் ஏற வேண்டும். இந்தப் பிராகாரத்தின் மத்தியில் சுமார் 14 அடி உயர மாடத்தில் இருக்கின்றன, ஸ்வாமி மற்றும் அம்பாள் சந்நிதிகள்.
தென்புறமாக இருக்கும் படிகளில் ஏறி உள்ளே நுழைந்தால், முதலில் கண்களில் படுவது அம்பாள் சந்நிதி. அழகே உருவாக, ஆஜானுபாகுவாகக் காட்சி தருகிறாள் கிரிசுந்தரி. தமிழில் ‘மலையழகி’ என்று திருப்பெயர். பெயருக்கேற்ப அழகிய உருவம் கொண்டு, மடிசார் புடவையும், மந்தகாசப் புன்னகையுமாக நம்மை ஆட்கொள்கிறாள். அன்னையை வணங்கிவிட்டு, ஸ்வாமி சந்நிதிக்குள் நுழைகிறோம்.
கிழக்கு நோக்கி அருளும் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரரின் திருமேனி, ஆன்மிக அற்புதங்களில் ஒன்று. ஆம்! தினமும் ஆறு நாழிகைக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது இந்த சுயம்பு லிங்கம். முதல் ஆறு நாழிகையில் தாமிர நிறத்தில் காட்சி தரும் இந்தச் சிவனாரின் லிங்கத் திருமேனி, அடுத்தடுத்து முறையே இளஞ்சிவப்பு, உருக்கிய தங்கம், நவரத்தினப் பச்சை ஆகிய வண்ணங்களில் காட்சி தரும். கடைசி ஆறு நாழிகைகளில், இன்ன நிறம் என்று இனம்காண இயலாத ஒரு நிறத்தில் காட்சியளிப்பாராம் இந்த சிவனார்.
இப்படி ஐந்து நிறங்களில் காட்சி தருவதால், ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் என்றும், இந்தத் தலத்தில் அமர்நீதி நாயனார், அப்பர் ஆகியோரை ஆட்கொண்டதால் ஸ்ரீஆண்டார் என்றும், அகத்தியருக்குத் திருமணக் கோலத்தைக் காட்டியமையால் ஸ்ரீகல்யாணசுந்தரர் என்றும், மிகக் பேரழகுடன் திகழ்வதால் சுந்தரநாதன், சவுந்தரநாயகர் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறார் இந்தச் சிவனார்.
சதுர வடிவ ஆவுடையாருடன் கிழக்கு நோக்கி காட்சி தரும் இந்த லிங்கத் திருவுருவில் துளைகள் இருப்பதைக் காணலாம். `பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை வழிபட்டதைக் குறிக்கும் துளைகள் இவை’ என்கிறார்கள். அகத்தியருக்குக் காட்டியருளிய அம்மையப்பரின் திருமணக்கோலம், சுதை வடிவில் திகழ்கிறது.
அவர்களுக்கு இருபுறமும் திருமாலும், பிரம்மாவும் காட்சி தர, அகத்தியர் வழிபடும் நிலையில் நிற்கிறார். மூலவருக்குப் பக்கத்தில் ஒரு சிறிய லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இது அகத்திய லிங்கம் எனப்படுகிறது. ஒரே ஆவுடையார் மீது இரண்டு லிங்கங்கள் இருப்பது ஒரு சிறப்பம்சம். இப்படி ஓர் அமைப்பு தமிழகத்தில் வேறு எந்தக் கோயி லிலும் இல்லை. இதன் புராணப் பின்னணி சுவாரஸ்யமானது.
சிவ-பார்வதி திருமணத்தைக் காண உலகின் அனைத்து ஜீவ கோடிகளும் கயிலையில் குவிந்ததால், உலகம் சமநிலை இழந்தது. வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்தது.
ஆகவே, உலகைச் சமன் செய்ய தெற்கு நோக்கிச் செல்லும்படி அகத்தியரைப் பணித்ததுடன், அவர் விரும்பும் தலங்களில் தமது திருமணக்கோலத் தரிசனம் கிடைக்கும் என்றும் அருள்புரிந்தார் சிவபெருமான்.
அதன்படியே, தெற்குநோக்கி நகர்ந்த அகத்தியர், தாம் விரும்பிய இடங்களில் எல்லாம் சிவனாரின் திருமணக்கோலத்தைக் கண்டு இன்புற்றார். அப்படியான தலங்களில் இதுவும் ஒன்று. அவர் இங்கு வழிபட்டபோது, இங்குள்ள லிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு லிங்கத்தை வைத்து பூஜித்து பேறு பெற்றாராம். ஆக, இரண்டு லிங்கங்களையும் ஒருங்கே தரிசிக்கும் பாக்கியம் நமக்கு!
அகத்தியருக்கு இறைவன் கல்யாணக் கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால், ஆதி காலம் தொட்டே நல்லூர்தான், திருமணப் பரிகாரத் தலமாக விளங்கிவருகிறது.
‘‘இந்த விஷயம் பல பேருக்குத் தெரியல. இங்கே வந்து சங்கல்பம் பண்ணி, கல்யாண சுந்தரரை வணங்கி வழிபட்டு, மாலை வாங்கிச் சென்றால், 90 நாட்களுக்குள் திருமணம் கைகூடும். இது, பலரும் கண்கூடாகக் கண்ட உண்மை’’ என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார் மணியம்.
மூலவரை நாள்முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்; அவ்வளவு அழகு. மற்ற சிவலிங்க ரூபங்கள் போல இல்லாமல் மெலிந்து, நீண்டு காட்சி தருகிறது. நாம் போன காலை நேரத்தில் தாமிர நிறத்திலும் பிறகு உருக்கிய தங்க நிறத்திலும் காட்சி தந்தார் கல்யாணசுந்தரேஸ்வரர். ஸ்வாமியின் இந்த லிங்கத் திருமேனி எதனால் ஆனது? செம்பா… கல்லா… உலோகமா… இதுவரை, எவருக்கும் புலப்படாத அற்புதம் அது! சுயம்புவாகத் தோன்றிய இந்த லிங்க மூர்த்தியின் பாணம், பூமிக்கடியில் வெகுதூரம் நீண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆரத்தி காண்பித்த பின் அர்ச்சகர் அனைவரின் தலையிலும் திருவடியை (சடாரி போன்றது) வைத்து எடுத்தார். வேறு எந்த சிவாலயத்திலும் இப்படியான வழக்கம் கிடையாது. இங்கு மட்டும் எப்படி?
திருச்சத்திமுற்றம் தலத்தைத் தரிசித்த அப்பர் பெருமான், `இறைவனின் திருவடிகளை தன் சிரசில் வைத்து அருள வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டாராம்.
அவரது விண்ணப்பம், இந்த நல்லூர் திருத்தலத்தில் நிறைவேறியது. இந்தத் தலத்துக்கு வந்த அப்பரின் தலைமீது தன் திருவடிகளைச் சூட்டி அருளினாராம் இறைவன்.
‘நினைந்துருகும் அடியாரை’ என்று தொடங்கி, ‘நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம்பெருமானார் நல்லவாறே’ என்று முடியும் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும், தம் தலையில் இறைவன் தன் திருவடியைச் சூட்டி அருளி யதைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார் அப்பர்.
இதையொட்டியே, இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் திருவடி சுமக்கும் பாக்கியம் கிடைக்கும் வகையில், சிவன் பாதம் பொறித்த சடாரியைத் தலையில் வைத்து எடுக்கிறார்கள்.
இறைவனின் திருவடிகளைத் தலையில் சூடி, மனமுருகிப் பிரார்த்தனை செய்தபின், அங்கேயே வலம்வந்து, அம்பிகையைத் தொழுது, மீண்டும் படிகளில் இறங்கி உள் பிராகாரத்தை வலம் வருகிறோம். இறங்கும் போது இடப்பக்கச் சுவரில் அமர்நீதி நாயனாரை, சிவன் ஆட்கொண்ட கதை ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. மாடக்கோயிலை விட்டு வெளிப்பிராகாரம் வந்தால் தென்திசையில் அமைந்திருக்கிறது, அஷ்டபுஜ காளி சந்நிதி. வேறெங்கிலும் காண்பதற்கரிய திருக்கோலத் தில், திருமுகத்தில் சிறிதும் உக்கிரம் இல்லாமல் சாந்த சொரூபியாக அருள்பாலிக்கிறாள், சூலாயுதபாணியான இந்தக் காளிதேவி.
‘‘பெருமானின் கல்யாண கோலத்தை இங்கே கண்டதால், காளியின் முகத்தில் கோபத்துக்குப் பதில் சாந்தம் நிலவுகிறது’’ என்கிறார் அங்கிருந்த அர்ச்சகர். கருவைக் காக்கும் காளிதேவி இவள். இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் கருவுற்றால், நல்லமுறையில் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டிக்கொண்டு, இந்தக் காளியின் சந்நிதியில் வளைகாப்பு வைபவத்தை நடத்துகின்றனர். மேலும் சந்தனக்காப்பு, முடிக் காணிக்கை ஆகிய பிரார்த்தனைகளும் நடை பெறுகின்றன. இக்கோயிலில் நவகிரகங்கள் கிடையாது. “இறைவனே அனைத்துமாய் திகழ்கிறார் என்பதால், இந்தக் கோயிலில் நவகிரகங்கள் அமைக்கப்படவில்லை” என்கிறார்கள், உள்ளூர் பக்தர்கள்.
ஐந்தைந்து (கூட்டு) இலைகளுடன் திகழும் வில்வ மரமே இக்கோயிலின் ஸ்தல விருட்சம். பழைமையான இந்த மரத்தை ‘ஆதிமரம்’ என அழைக்கின்றனர். அப்படியே வெளியே வந்து கொடிமரத்தின் முன்பாக வணங்கி எழுந்து, சில நிமிடங்கள் அமர்ந்து தியானித்த பிறகு, கோயிலில் இருந்து விடைபெற்றோம்.
‘‘வடபாற் கயிலையும் தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே’’ என்று இத்தலத்தை கயிலைக்கு ஒப்பாக வைத்துப் போற்றியுள்ளார் அப்பர். இறைவனின் திருமேனி இயற்கையிலேயே நிறம் மாறும் அதிசயத்தைக் கண்டு உருகி, உவகை பெறுவதுடன், கயிலாய தரிசன புண்ணியத்தை யும் பெற்றுச் சிறந்திட, நீங்களும் ஒருமுறை திருநல்லூருக்குச் சென்று வாருங்களேன்.