மதிமுக வேட்பாளரை மிரட்டி விரட்டிய பாமக தொண்டர்கள். அன்புமணிக்கு வைகோ எச்சரிக்கை
மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ இந்த தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்காக புயல் வேகத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் திருப்போரூர் தொகுதி மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா அந்த தொகுதிக்கு உட்பட்ட கீரப்பாக்கம் பகுதியில் பிரசாரத்துக்காக சென்றபோது, அவரையும், மக்கள் நல கூட்டணியின் தொண்டர்களையும், பா.ம.க.வினர் ஆயுதங்களை காட்டி உள்ளே வரக்கூடாது என்று மிரட்டி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து வைகோ கருத்து தெரிவிக்கையில், “இதுபோன்ற செயல்கள் நாட்டுக்கு நல்லதல்ல என்று ராமதாசுக்கும், அன்புமணிக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். யார் கலவரத்தில் ஈடுபட்டாலும் ம.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அமைதி காக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
மேலும், “இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாயும், தி.மு.க. ஆயிரம் ரூபாயும் கொடுக்க முடிவு செய்துள்ளன. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையத்தால் தடுக்கவே முடியாது. மக்களாக பார்த்து ஓட்டு போட்டால் தான் தமிழகம் தப்பிக்கும். இந்த தேர்தலில், ஒரு கோடியே 45 லட்சம் புதிய வாக்காளர்கள் மக்கள் நலக்கூட்டணிக்கு தான் வாக்களிப்பார்கள். மேலும், இந்த தேர்தல் சரித்திரம் பேசும் வகையில் 150 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.