மனிதனுக்கு செலவில்லா எளிய மருந்து சிரிப்பு
உங்களுக்கு தெரியுமா? சிரிப்பு ஒரு ஆரோக்கியமான தொற்றும் பரவும் தன்மை கொண்டது. ஒருவர் சிரித்தால் உடன் இருப்பவரும் சிரிப்பார். இந்த சிரிப்பு ஆரோக்கியமான உடலினை தருகிறது அதே சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியினை தந்து உடல் வலியினையும், மன உளைச்சலையும் நீக்குகின்றது.
சும்மாவா சொன்னார்கள் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று. ஆக மனிதனுக்கு செலவில்லா எளிய மருந்து ‘சிரிப்பு’தான் என்பது உண்மையே. இன்று டி.வி. சேனல்கள் பலவற்றில் சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவை என்றே சொல்லலாம்.
கடுமையான, கொடுமையான நிகழ்ச்சிகளை பார்க்கும் மனம் சோகத்திலேயே இருக்கும். அதனையே தொடர்ந்து நினைப்பது ஒரு வழக்கமாகி விடும். அதனால் எவராலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. பிறரையும் மகிழ்ச்சியாக வைக்க முடியாது. முடிவில் சோகத்திலேயே பழகும் ஒரு மனிதன் நிரந்தர நோயாளியாகவே ஆகி விடுகின்றான். சிரிக்கத் தெரிந்த மனிதனுக்கு இயற்கையாகவே ஆரோக்கியம் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்.
மனதிற்கு சோர்வு ஏற்படும் பொழுது ‘சிரிப்பு’ ‘தமாஷ்’ ‘ஜோக்ஸ்’ போன்ற இடங்களில் கண்டிப்பாய் உங்களை நீங்கள் நிலை நிறுத்தி கொள்ளுங்கள். ஒன்றினை நன்கு உணருங்கள், அழுவதற்கும் கவலைப்படுவதற்கும் என நீங்கள் பிறக்கவில்லை. ஒவ்வொரு நொடியும் மகிழ்வோடு வாழ்வதற்கே நாம் பிறந்துள்ளோம் என்பதனை மனதில் நன்கு பதிய வையுங்கள்.
சிரிப்பு
* நன்கு வாய்விட்டு ஒருமுறை சிரித்தால் உடல் டென்ஷன், மனச் சோர்வு நீங்கி, இறுகிய தசைகள் தளர்ந்து விடும். சுமார் ஒரு மணி நேரம் இந்த நல்ல அதிர்வலை இருக்கும்.
* மனம் விட்டு சிரிக்கும் சிரிப்பு உங்கள் ஸ்டிரெஸ் ஹார்மோன்களை குறைக்கும். நோய் எதிர்ப்பு திசுக்களையும், சக்தியினையும் உடலில் உருவாக்கும்.
* சிரிப்பினால் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றத்தினால் உடலில் ஒரு ஆரோக்கிய உணர்வும், உடல்வலி நீக்கமும் ஏற்படு
* சிரிப்பு ரத்தக் குழாய்களை நன்கு இயங்க வைத்து இரத்த ஓட்டத்தினை அதிகரிக்க செய்யும். இதனால் மாரடைப்பு இருதய நோய் பாதிப்புகள் வெகுவாய் குறையும்
சிரிப்பின் நன்மைகள்:
* வாழ்க்கையினை இனிமையாக்கும்
* பயம், படபடப்பு இருக்காது.
* மனநலம், மனநிலை உற்சாகமாய் இருக்கும்.
* உறவுகள் பலப்படும்.
* கூட்டு முயற்சிகள், வெற்றியாய் முடியும்.
* வேற்றுமைகள் நீங்கும்.
* ஆக்கப்பூர்வ சிந்தனைகளும், செயல்களும் ஏற்படும்.
தானே தனியாய் அமர்ந்து சிரிப்பது என்பது சரியாக இருக்காது. சிரிப்பதற்கு உடன் மக்கள் வேண்டும். குடும்பம், உறவினர், நண்பர் என நமக்கு ஒரு சின்ன கூட்டம் தேவை. இவர்களுடன் சிரிப்பதற்கான வாய்ப்புக்களை, சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
இவர்களுடன் சேர்ந்து தமாஷான சினிமா, டி.வி நிகழ்ச்சியினைப் பாருங்கள்.
* நகைச்சுவை கலை இப்பொழுது அநேக இடங்களில் உருவாகியுள்ளது. அங்கு செல்லுங்கள்.
* சிரிப்பான கதை, ஜோக்ஸ் என படியுங்கள்.
* சிலர் தன் பேச்சிலேயே பிறரை நன்கு சிரிக்க வைப்பார்கள். அவர்கள் இருக்கும் இடமே கலகலவென இருக்கும். அவர்களுடன் அடிக்கடி பேசுங்கள்.
* சிரிப்புக்கான ‘யோகா’ வகுப்புகள் கூட இருக்கின்றது. எப்பொழுதும் எந்தகாரணமும் இன்றி ‘உம்’ என்ற முகத்துடன் இருப்பவர்களை இந்த வகுப்பில் சேர்த்து விடுங்கள்
* குழந்தைகளுடன் விளையாடுங்கள்.
* செல்லப் பிராணி ஒன்றினை வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
* புன்னகைக்கு எந்த காரணமும் தேவையில்லை. யாரையும் சந்திக்கும் பொழுது புன்னகைக்க கற்றுக் கொள்ளுங்கள்.
* உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்த நன்மைகளை எண்ணிப் பாருங்கள். இது உங்களை மகிழ்ச்சியானவராக மாற்றி விடும். அதை விட்டு எனக்கு அது இல்லை இது இல்லை’ என புலம்புவதனையே வாழ்க்கையாக்கி விடாதீர்கள்.
* பலரின் பேச்சு கூட கோபத்தால் கொப்பளித்தபடி தான் இருக்கின்றது. சாதாரண வார்த்தைகள் என்பதே காண அரிதாகி விடுமோ என்று அஞ்ச வேண்டி உள்ளது. தமாஷ் செய்கிறேன் என்று சொல்லி அந்த பேச்சாலேயே பிறரை காயப் படுத்துபவர்களும் உண்டு. கீழ்தரமான இந்த குணங்களை விட்டு பேச்சு கூட பிறரை காயப்படுத்தாத நகைச்சுவையுடன் இருக்கட்டும். இப்படி இருப்பவர்களை அனைவரும் விரும்புவர்.
ஏதேனும் ஒரு பிரச்சனை உங்களை வாட்டி வதைக்கிறதா? நீங்களே உங்களை கீழ்கண்ட கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள்.
* இப்பிரச்சனைக்காக இந்த அளவு வருந்துவது தேவைதானா?
* பிறரை மனம் நோகச் செய்வது சரிதானா?
* இது அந்த அளவு முக்கியமானதா?
* இதனை சரி செய்ய முடியுமா?
வாழ்க்கை என்றால் போராட்டம் தான். சோதனை தான். அதற்காக அழுத கண்ணும், சிந்திய மூக்கும், கையில் கைகுட்டையுமாக வாழ வேண்டுமா என்ன?