மனைக் கடன் வாங்க என்ன செய்ய வேண்டும்?

மனைக் கடன் வாங்க என்ன செய்ய வேண்டும்?

வீடு வாங்க வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கடன்கள் வழங்குகின்றன. வீட்டு மனை வாங்குவதற்கும் வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் கடன் அளிக்குமா? இந்தக் கேள்வி பலருக்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். மனை வாங்குவதற்கும் வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் கடன்கள் வழங்குகின்றன. மனைக் கடனுக்கு என்னென்ன நடைமுறைகள் வங்கிகளில் பின்பற்றப்படுகின்றன?

வில்லங்கம் கூடாது

வங்கிகளில் மனை வாங்குவதற் கென வங்கிகள் சில விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளன. வீட்டுக் கடன் வழங்கப்படுவது போலவேதான் மனை வாங்குவதற்கான கடனுக்கும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமின்றி வெளி நாட்டு வாழ் இந்தியர்களும்கூட மனை வாங்க இந்தக் கடன் கிடைக்கும். வீட்டுக் கடனுக்குப் பார்க்கப்படுவது போலவே கடன் பெற விண்ணப்பிப்பவரின் வருவாய், அவருக்குக் கடனைச் செலுத்துவதற்கான தகுதி ஆகியவை மிக முக்கியமாக ஆராயப்படும். மனைக் கடன் வாங்குவதற்கான தகுதி இருப்பின் விண்ணப்பித்தவரின் மனு வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்தத் தகுதி இருந்தால் மட்டும் யாருக்கும் மனைக் கடன் கிடைத்துவிடாது. வாங்க உத்தேசித்துள்ள மனையில் எந்த விதமான வில்லங்கமும் இருக்கக் கூடாது. முதலில் மனை எந்த நிலத்தில் அமைந்துள்ளது என்பதை வங்கிகள் ஆராயும். வாங்க உத்தேசித்துள்ள மனை, குடியிருப்புப் பகுதியாக அரசால் வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். விவசாய நிலமாகவோ, வணிக ரீதியான நிலமாகவோ நிச்சயம் இருக்கக் கூடாது. குறிப்பிட்ட மாநகராட்சி, நகராட்சி என வரையறுக்கப்பட்ட உள்ளாட்சியின் எல்லைக்குள் மனை நிச்சயம் இருக்க வேண்டும். மனை பற்றிய விவரங்கள் அனைத்தையும் வங்கி தீர விசாரிக்கும். எந்த விதமான வில்லங்கமும் இல்லாமல் விதிமுறைப்படி மனை இருந்தால், மனைக் கடன் கிடைப்பதில் சிக்கல் இல்லை.

கடன் எவ்வளவு?

சரி, மனைக் கடன் எவ்வளவு கிடைக்கும்? பொதுவாக வீட்டுக் கடன் என்றால் 80 சதவீதம் வரை வங்கிகள் வழங்கும்; 20 சதவீதத் தொகையை நம் கையில் இருந்து வழங்குவோம் அல்லவா? அதே நடைமுறைதான் மனைக் கடனுக்கும் பின்பற்றப்படுகிறது. அதோடு மனையின் மதிப்பைப் பொறுத்தும் மனைக் கடன் வழங்கப்படும். அதாவது, மனையின் மதிப்பு பெரு நகரம், சிறு நகரம் என ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு விதமாக இருக்கும் என்பதால் அதற்குத் தகுந்தாற்போல் மனைக் கடன் கிடைக்கும்.

சரி, மனைக் கடன் எவ்வளவு கிடைக்கும்? பொதுவாக வீட்டுக் கடன் என்றால் 80 சதவீதம் வரை வங்கிகள் வழங்கும்; 20 சதவீதத் தொகையை நம் கையில் இருந்து வழங்குவோம் அல்லவா? அதே நடைமுறைதான் மனைக் கடனுக்கும் பின்பற்றப்படுகிறது. அதோடு மனையின் மதிப்பைப் பொறுத்தும் மனைக் கடன் வழங்கப்படும். அதாவது, மனையின் மதிப்பு பெரு நகரம், சிறு நகரம் என ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு விதமாக இருக்கும் என்பதால் அதற்குத் தகுந்தாற்போல் மனைக் கடன் கிடைக்கும்.

சந்தை மதிப்புக்கு ஏற்ப மனைக் கடன் கிடைக்காது. அரசு வழிகாட்டு மதிப்புப்படியே மனைக் கடன் கிடைக்கும். பெரு நகரங்கள் என்றால் அரசு வழிகாட்டு மதிப்பைப் பொறுத்துக் கண்டிப்பாக 70 சதவீதம் வரை மனைக் கடன் கிடைத்துவிடும். சில வங்கிகள் 80 முதல் 85 சதவீதம் வரைகூட மனைக் கடன் வழங்குகின்றன. அதுவே சிறிய நகரங்கள் என்றால், மனையின் மொத்த மதிப்பீட்டில் 50 முதல் 60 சதவீதம் வரை மனைக் கடன் கிடைக்கும்.

ஆவணங்கள்

மனைக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை வங்கிகளே சொல்லிவிடும். அந்த ஆவணங்கள் கண்டிப்பாகக் கையில் இருக்க வேண்டும். வீட்டுக் கடனுக்குரிய அதே ஆவணங்கள் இங்கும் பின்பற்றப்படுகின்றன. விண்ணப்பிப்பவரின் புகைப்படம், அரசு வழங்கிய அடையாள அட்டை, முகவரிச் சான்றிதழ், மாதச் சம்பளச் சான்றிதழ் (வேலை செய்யும் நிறுவனம் வழங்கும் சம்பள ஸ்லிப்), கடன் கேட்கும் தேதியிலிருந்து முந்தைய 6 மாத காலத்துக்கான வங்கிக் கணக்கு அறிக்கையின் நகல் ஆகியவற்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

சான்றிதழ்கள் என்ன?

இது மட்டுமல்ல, இன்னும் சில ஆவணங்கள் கேட்கப்படும். மனையை யார் விற்கிறாரோ அவரது நில உரிமை ஆவணத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். விலைக்கு வாங்கும் மனையில் வில்லங்கம் எதுவும் இல்லை என்பதற்கான சான்றிதழ் (ஈ.சி.), சிட்டா சான்றிதழ், இடத்துக்கான சான்றிதழ் உள்ளிட்டவற்றையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட மனை சி.எம்.டி.ஏ. (சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமம்) மற்றும் டி.டீ.சி.பி. (நகர ஊரமைப்பு இயக்ககம்) ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்ற நிலத்தின் வரைபடம், நிலத்தின் உரிமையாளர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மனை வரி செலுத்திய ரசீது ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு உங்கள் கடன் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கப் பரிசீலனைக் கட்டணமும் செலுத்த வேண்டும். அதைக் காசோலையாக வங்கிகள் பெற்றுக்கொள்ளும்.

வரிச் சலுகை இல்லை

மனைக் கடன் வாங்கும்போது ஒரு விஷயத்தை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அது வரிச் சலுகை. வீட்டுக் கடன் வாங்கும்போது அந்தக் கடனை அடைக்கும் தொகைக்கு வரி விலக்கு நிச்சயம் கிடைத்துவிடும். வீட்டுக் கடனுக்கு வழங்கப்படுவது போல மனைக் கடனை அடைக்கச் செலுத்தப்படும் தவணைத் தொகைக்கு எந்த விதமான வரி விலக்கும் கிடையாது. ஒரு வேளை வாங்கிய மனையில் வீடு கட்டும் பணியைத் தொடங்கினால், அந்தக் கடனின் ஒரு பகுதிக்கு வரி விலக்குகளைப் பெற முடியும். அந்த மனையில் கட்டுமானப் பணிகளை முழுமையாக நிறைவு செய்தால் முழு வரிச் சலுகை கிடைக்கும்.

இப்போது வாங்கலாம்

உயர் பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு இப்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் போட்டிபோட்டுக் கொண்டு குறைத்துள்ளன. எனவே இப்போது குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வாங்குவது நல்லது என்று பொருளாதார நிபுணர்கள் கூறிவருகிறார்கள். இதேபோல மனைக் கடனையும் இப்போது குறைந்த வட்டி விகிதத்தில் பெற முடியும். குறிப்பாகக் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்து வருகின்றன. எனவே இப்போது குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் அல்லது மனைக் கடன் பெறலாம்.

Leave a Reply