கேரள கடற்பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு இரண்டு மீனவர்களை இத்தாலிய கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்ற வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடற்கொள்ளை தடுப்ப் சட்டத்தின் கீழ் இத்தாலிய வீரர்கள் விசாரிக்கப்பட மாட்டார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளதால், அவர்கள் மரண தண்டனையில் இருந்து தப்பித்துள்ளனர்.
இத்தாலிய கடற்படை வீரர்கள் மாசிமில்லியனோ லாட்டோர் மற்றும் ஸ்லவட்டோர் கிரோன் ஆகிய இரண்டு பேர் மீது மீனவர்களை சுட்டுக்கொலை செய்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை செய்தது.
நேற்று இத்தாலிய தர[ப்பில் இருந்து வாதாடிய வழக்கறிஞர், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்ய அதிகாரம் இல்லை என்றும், சட்டவிரோதம் எதுவும் இந்த வழக்கில் இல்லாத காரணத்தால் உடனே இந்த வழக்கை முடிக்கவேண்டும் என்றும் வாதாடினார்.
மத்திய அரசின் வழக்கறிஞர் வாதாடுகையில் இத்தாலி வீரர்களிடம் கடற்கொள்ளை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பின் வாதங்களையும் கேட்டபின்னர், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்போ அல்லது வேறு ஏஜென்சியோ விசாரணை நடத்தினால் அதனை நீதிமன்றம் ஆய்வு செய்யும் என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டு, மறு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.