மரத்தில் இருந்து வாடிக்கையாளரே பறிக்கலாம்..! இது இயற்கை சூப்பர் மார்க்கெட்

மரத்தில் இருந்து வாடிக்கையாளரே பறிக்கலாம்..! இது இயற்கை சூப்பர் மார்க்கெட்

முன்பெல்லாம் பெரும்பாலும் உள்ளூரில் இருக்கும் அண்ணாச்சி கடையிலோ, பெரிய மளிகைக்கடையிலேயோ பொருள்களை வாங்குவது வழக்கம். அதன்பிறகு சூப்பர் மார்க்கெட்களின் வரவுக்குப் பின்னர், அதில் மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது, இன்றும் அது தொடர்கிறது… இதற்குக் காரணம் கேட்டால், “அண்ணாச்சி கடையில அவர் எடுத்து கொடுக்கிறதை மட்டும்தான் வாங்க முடியும். ஆனா, சூப்பர் மார்க்கெட்டுல நமக்குப் பிடிச்ச பொருள்களை நாமே செலக்ட் பண்ணிக்கலாம்” என்பது உள்ளிட்ட பல காரணங்கள் சொல்வதுண்டு. ஆனால், இவ்வாறு இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு மத்தியில் தனது இயற்கை விவசாய பண்ணையையே சூப்பர் மார்க்கெட்டாக வைத்திருக்கிறார், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி பாரதி.

இன்று மக்கள் ஆர்கானிக் பொருள்களைத் தேடித்தேடி வாங்கிக் கொண்டிருக்கும்போது, 1998 ஆம் ஆண்டிலேயே இயற்கை விவசாய பயணத்தை ஆரம்பித்து இன்றுவரை சிறப்பாக நடத்தி வருகிறார். ஒரு சிறு விவசாய பயிற்சிக்காக அவரது பண்ணைக்குச் சென்றோம். அப்போது பாரதி பண்ணையில் இல்லை. அதனால், அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டு கேட்டபோது, “நான் கொஞ்சம் வெளியில இருக்கேன், நீங்கப் பண்ணையைச் சுத்திப் பாருங்க… மாம்பழங்களை எல்லாம் மரத்துல இருந்து பறிச்சு சாப்பிடுங்க, கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்” என்றார். நாமும் பண்ணையைச் சுற்றிப்பார்க்க ஆரம்பித்தோம். அதற்கு முந்தைய நாள் பெய்திருந்த மழையில் மாம்பழங்கள் அதிகமாக உதிர்ந்திருந்தன. மரத்திலிருந்த செந்தூரா மாம்பழங்களைப் பறித்து சுவைக்க ஆரம்பித்தோம். அனைத்தும் அவ்வளவு சுவை, இயற்கையில் விளைந்தது அப்படித்தானே இருக்கும். இரண்டு நாள்களுக்கு முன்னர் கடையில் வாங்கிய செந்தூரா மாம்பழத்தை நினைத்தபோது, கடைக்காரனிடம் ஏமாந்து விட்டோமே என்ற வருத்தம் ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

மாழ்பழங்கள்

இரண்டு நாள்களுக்கு முன்னர் சுவைத்த செந்தூரா மாம்பழம் ஒரு மாதிரியான மணம் வீசியது. சரி செந்தூரான்னாலே இப்படித்தான் இருக்கும் என்று மனதைத் தேற்றிக்கொண்டு சுவைத்தேன். நம்மில் பெரும்பாலோனோர் இப்படித்தான் சுவைக்கிறோம் என்பது வேறு விஷயம். இப்போது தோட்டத்தில் சுவைக்கும் செந்தூரா மாம்பழம் அந்த நினைப்பையெல்லாம் தவிடு பொடியாக்கியது. தோட்டம் முழுவதும் நடந்து சுற்றிப் பார்க்க இரண்டு நாள் ஆகும். பண்ணை அவ்வளவு பெரியது. இயற்கையான மாம்பழம் என்பதால் இரண்டுக்கு மேல் சுவைக்க முடியவில்லை. ஆனால், கூட வந்திருந்தவர்களில் இரண்டு நண்பர்கள் ‘காஞ்ச மாடு கம்பில் புகுந்த கதைதான்’ மாம்பழம் அவர்களிடம் என்னை விட்டுவிடு என்று கதறுவதுபோல இருந்தது. சிறிது நேரத்துக்குப் பின்னர் பாரதி மற்றும் அவருடன் சில ஆட்களும் தோட்டத்துக்குள் வந்தனர். பாரதி அவர்களைப் பார்த்து “தோட்டத்தை நடந்து சுத்திப் பார்க்க இரண்டு நாள் ஆகும். நீங்க கார்ல போய் சுத்திப் பாருங்க. உங்களுக்கு எந்த மரத்தோட பழம் பிடிச்சிருக்கோ, அதைப் பறிச்சுட்டு வந்துடுங்க எடை போட்டுக்கலாம்” என்றார். அவர் சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது. அதற்கான கேள்வியை அவரிடமே முன்வைத்தோம். சார், எல்லா பண்ணையிலேயும், அவங்க பறிச்சு வச்சதைத்தான் வாங்கிட்டு போவாங்க. ஆனா, நீங்க எப்படிப் பறிக்க அனுமதிக்கிறீங்க” என்றோம்.

பாரதிஅதற்குப் பதிலளித்த பாரதி, “என் பண்ணை மொத்தம் 150 ஏக்கர். இதுல 25 ரகமான மாமரங்கள் இருக்கு. மாமரங்கள் தவிர, சப்போட்டா, சவுக்கு, கொய்யா, தென்னை மரங்கள்னு ஏகப்பட்ட மரங்கள் இருக்கு. நமக்கு எப்பவுமே கலப்பு மரப்பயிர் சாகுபடிதான் பிடிக்கும். அப்போதான் ஒவ்வொரு சீசன்ல ஒவ்வொரு மரம் கைகொடுக்கும். இங்க இருக்குற மரங்கள்ல நானே பறிச்சு, விற்பனை செய்யலாம். ஆனா, வாங்குறவங்களுக்கு ஒரு மனநிறைவு இருக்கணும். அதுக்காகத்தான் அவங்களையே பறிச்சிட்டு வரச் சொல்லிடுறேன். அவங்களுக்கும் பண்ணையை சுத்திப் பார்க்குற ஒரு வாய்ப்பா இருக்கும். அதனால அவங்களுக்கு விவசாய ஆசை வந்தாலும் நல்ல விஷயம்தானே. மக்களுக்குக் கடைகள்ல பெரும்பாலும் ரசாயனக் கல் வச்சிப் பழுத்த பழங்கள்தான் கிடைக்குது. அதனால மக்களுக்கு உடல் ரீதியான பாதிப்பு அதிகம் ஏற்படும். அதுல இருந்தும் மக்களைக் காக்கிறது மனசுக்குத் திருப்தியா இருக்கு. பொதுவா சூப்பர் மார்க்கெட்டுலதான் இப்படி செய்வாங்க. அப்படி பார்த்தா என் பண்ணையும் சூப்பர் மார்க்கெட்தான்” என்றார். அன்றைய பயிற்சியை நிறைவாக முடித்துக் கொண்டு நிறைவாக வீடு திரும்பினோம். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள காவேரி ராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள முன்னோடி இயற்கை விவசாயி பாரதியின் தோட்டம். காவேரி ராஜபுரத்தில் சென்று ஒட்டகம் வைத்திருக்கும் பாரதியின் பண்ணை எங்கே இருக்கிறது எனக் கேட்டால் சொல்லிவிடுவார்கள்.

Leave a Reply