மருத்துவமனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்… – இரு மருத்துவர்களின் ஆய்வறிக்கை…!

மருத்துவமனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்… – இரு மருத்துவர்களின் ஆய்வறிக்கை…!

6அந்த அறுவை சிகிச்சை நிபுணருக்கு, ஒரு ஆயுர்வேத மருத்துவர் நெருங்கிய நண்பராக இருந்தார். ஒரு நாள், அந்த ஆயுர்வேத மருத்துவர், தனது காரில் செல்லும் போது, அந்த வாகனம் விபத்திற்குள்ளாகிறது. சிறு விபத்துதான். அவருக்கு முதல் நாள் எந்த வலியும் இல்லை; சாதாரணமாகத்தான் இருந்தார். ஆனால், இரண்டாவது நாள் அவர் வயிற்றுப் பகுதியிலும், மார்பிலும் கடுமையான வலி எடுக்க துவங்குகிறது.

அவரை அந்த நகரத்தில் உள்ள அதி நவீன மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். முதலில் அங்கு ஆஞ்சியோகிராபி எடுக்கப்பட்டு, பின் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்படுகிறது. ஆனாலும், வலி நிற்பதாய் இல்லை. அடுத்த நாள் அவர், கடுமையாக வயிறு வலிப்பதாக மருத்துவர்களிடம் சொல்கிறார். ஆனால், ஐ.சி.யூ வில் இருந்த மருத்துவர்கள் யாரும் இதை கண்டு கொள்ளவில்லை. பின் இந்த விஷயத்தை, அந்த ஆயுர்வேத மருத்துவரின் நெருங்கிய நண்பரான, அறுவை சிகிச்சை நிபுணருக்கு தெரிவிக்கிறார்கள். அவர் உடனடியாக அந்த மருத்துவமனைக்கு விரைகிறார். அங்கு இருந்த மருத்துவர்களிடம், அடிவயிற்றில் சோனாகிராஃபி சோதனைச் செய்து, அதை உடனடியாக, அவர்களின் மூத்த மருத்துவர்களிடம் காட்ட சொல்கிறார். அதை வைத்துதான் அடுத்தகட்ட சிகிச்சை அளிக்க முடியும்.

மூன்று நாட்கள் செல்கிறது. மீண்டும் அந்த ஆயுர்வேத மருத்துவரின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அழைப்பு வருகிறது. அந்த ஆயுர்வேத மருத்துவரின் நிலை மிக மோசமாக இருக்கிறது. ‘அவரது ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. அடிவயிறு உப்பி இருக்கிறது. உடனடியாக வாருங்கள்’ என்கிறது அழைப்பு. இவரும் விரைந்து செல்கிறார். அங்கிருந்த மருத்துவர்களிடம் சோனோகிராபி அறிக்கையை கேட்கிறார். ஆனால், அவர்கள் சர்வ சாதாரணமாக, ‘சோனோகிராபி எடுக்கவில்லை’ என்று அலட்சியமாக சொல்கிறார்கள்.

ஆயுர்வேத நண்பர் இறக்கிறார். ஒரு வேளை அந்த டெஸ்ட் ஏற்கெனவே எடுக்கப்பட்டு இருந்தால், அவர் அடிவயிற்றுப் பகுதியில் விபத்தினால் ரத்தம் உறைந்து போயிருந்தது தெரிந்திருக்கும், அவரும் காப்பற்றப்பட்டு இருப்பார். ஆனால், அந்த மருத்துவமனையின் அலட்சியத்தால் அவர் இறந்து போனார். ஆனால், அதன் பின்னும் மருத்துவமனை அவர்களை விடுவதாக இல்லை… ஆம், ‘எட்டு லட்சம் ரூபாய் கட்டணத்தை செலுத்தினால், இறந்தபின் சவத்தை தருவோம்’ என்று மிரட்டி இருக்கிறது. ஒரு நீண்ட பேச்சுவர்த்தைக்கு பின், நான்கு லட்ச ரூபாய்க்கு இறங்கி வந்து இருக்கிறது.

இது ஏதோ, புனைவு அல்ல. உண்மை சம்பவம். அதுவும் அந்த அறுவை சிகிச்சை மருத்துவர், ‘மருத்துவர்களுக்கே இந்த நவீன மருத்துவமனைகள் இழைத்த துரோகம்’ என்று வருத்தத்துடன் பகிர்ந்த சம்பவம்.

ஆம், இவர் மட்டும் அல்ல, 78 நேர்மையான மருத்துவர்கள் இப்போது இந்திய மருத்துவத் துறையில் நடக்கும் அவலங்கள் குறித்து தங்கள் வருத்தங்களையும், இயலாமையும் பகிர்ந்திருக்கிறார்கள். இதை மருத்துவர் அருண் காட்ரேவும், மருத்துவர் அபய் சுக்லாவும் பதிந்து ‘Dissenting Diagnosis’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். (இது குறித்து முன்பே விகடன் தளத்தில் சுருக்கமாக பதிந்து இருக்கிறோம்.). மருத்துவத் துறையில் நடக்கும் தகிடுதத்தங்கள் குறித்து நமக்கு முன்பே ஓரளவு தெரியும் என்றாலும், ஏன் நமக்கே மோசமான அனுபவங்கள் இருந்தாலும் கூட, இவர்கள் பகிர்ந்திருக்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மையில் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன.

மருந்து நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் மருத்துவர்கள்:

மருத்துவர் சுசித்ரா, சென்னையை சேர்ந்த பொது மருத்துவர். மருந்து நிறுவனங்களின் நலன்களுக்காக அல்லாமல், நேர்மையாக நோயாளிகளின் நலனுக்காக, நேர்மையாக மருத்துவத் தொழிலை பார்த்து வருபவர். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்தின் விலை அதிகரித்துவிட்டது என்பதற்காக, அந்த மருந்தை பரிந்துரைப்பதை நிறுத்திவிட்டு, விலை குறைவாக உள்ள வேறொரு நிறுவனத்தின் மருந்தை பரிந்துரைக்க துவங்கி இருக்கிறார். உடனடியாக, அந்த மருந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் அவரை சந்திக்க வந்திருக்கிறார்கள். மீண்டும் தங்கள் நிறுவனத்தின் மருந்தை பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு இந்த மருத்துவர், “இல்லை… உங்கள் நிறுவனத்தின் மருந்தின் விலை அதிகமாக இருக்கிறது.” என சொல்லி இருக்கிறார். ஆனால், அந்த மருந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் விடுவதாக இல்லை. ஏறத்தாழ ஒரு மணிநேரம் அவருடன் விவாதித்து இருக்கிறார்கள். ” நாங்கள் பல ஆய்வுகளில் ஈடுபடுகிறோம். அதனால்தான் மருந்தின் விலை எங்களிடம் அதிகமாக இருக்கிறது” என்று தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி இருக்க்கிறார்கள்.

உடனடியாக இந்த மருத்துவர், தன் பர்சிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டி இருக்கிறார். “நீங்கள் மனித குலத்திற்காக உன்னத ஆய்வில் ஈடுப்படுகிறீர்கள். அதற்கான எனது சிறு பங்களிப்பு… உங்கள் ஆய்விற்காக நான் உதவி செய்ய முடியும். னால், உங்கள் சுமையை எப்படி நான் அப்பாவி நோயாளிகளின் தோளில் இறக்கி வைக்க முடியும்…?” என்று வினவி உள்ளார்.

இது போல இன்னொரு சம்பவம் மிக வித்தியாசமானது. ஒரு மருந்து நிறுவனத்தின் மூத்த பிரதிநிதிகளின் படை, கும்பலாக சென்று ஒரு மாநகரத்தை சேர்ந்த, ஒரு மகப்பேறு மருத்துவரை சந்திக்கிறது. அந்த மருந்து பிரதிநிதிகளுக்கு,’ ஏன் அந்த மருத்துவர் நம் நிறுவன மருந்துகளை பரிந்துரைக்கிறார்’ என்பது குறித்து ஐயம். அவர்கள் அதனை நேரடியாக அந்த மருத்துவரிடமே கேட்டு இருக்கிறார்கள், “நாங்கள் உங்களுக்கு எந்த கமிஷனும், பரிசுப் பொருட்களும் தருவது இல்லை… பின் ஏன் நீங்கள் எங்கள் நிறுவன மருந்துகளை பரிந்துரைக்கிறீர்கள்…?”

அந்த மருத்துவர், மிக பொறுமையாக, “உங்கள் நிறுவன மருந்துகள்தான் விலை குறைவாக இருக்கிறது… அதனால்தான்” என்று பதிலளித்துள்ளார்.

ஆனால், அதை அந்த மருத்து பிரதிநிதிகள் நம்பவே இல்லை, “அது எப்படி மேம் முடியும்… ப்ளீஸ் சொல்லுங்க… ஏன் எங்களது நிறுவன மருந்துகளை பரிந்துரைக்கிறீர்கள் …” என்று தொடர்ந்து கேட்டு இருக்கிறார்கள்.

இதுதான் மருத்துவத் துறையின் இன்றைய உண்மை நிலை. பெரும்பாலான மருத்துவர்களுக்கு, நோயாளிகளின் நலனை விட, மருந்து நிறுவனங்கள் தங்களுக்கு தரும் பரிசுப் பொருட்கள்தான் பிரதானமாக இருக்கிறது. இந்த பரிசுகள், மருத்துவர்கள் அணியும் உள்ளாடை முதல், அமெரிக்க பயணம் வரை நீள்கிறது… யார் அதிகம் பரிசுப் பொருட்கள் தருகிறார்களோ, அவர்கள் சொல்லும் மருந்துதான் நோயாளியின் உடலுக்குள் செல்லும். அது உண்மையாக அந்த நோயாளிக்கு தேவை இருக்கிறதோ… இல்லையோ…?

“நாம் பல ஆண்டுகள் மருத்துவம் படிக்கிறோம். ஆயிரக்கணக்கான நோயாளிகளை சந்திக்கிறோம். ஆனால், துரதிருஷ்டமாக, நாம் இந்த அனுபவங்களை எல்லாம், பரிசுப் பொருட்களுக்காக, ஒரு மருத்துவ பிரதிநிதிகளின் கால்களில் வைக்கிறோம்… இது வெட்கக்கேடானது..” என்கிறார் ஒரு மூத்த மருத்துவர் மிக கவலையாக.

கொல்கத்தாவை சேர்ந்த இதய நோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் கெளதம் மிஸ்ட்ரி, “கெடுவாய்ப்பாக , மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு ஆசிரியராக ஆகிவிட்டன” என்கிறார்.

மருத்துவ பரிசோதனைகள்:

இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயத்தையும் இந்த புத்தகத்தில் அருணும், அபயும் பதிவு செய்து இருக்கிறார்கள். அதாவது, மருந்து நிறுவனங்கள், சில மருத்துவர்கள் மூலம், நோயாளிகளுக்கே தெரியாமல், அவர்கள் மீது மருத்துவ பரிசோதனையை மேற்கொள்கிறது.

ஒரு பெரு நகரத்தை சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணர், “மருந்து நிறுவனங்கள், தங்களது மருந்துகளை நோயாளிகள் மீது பரிசோதித்து பார்க்க, மருத்துவர்களுக்கு பணம் தருகிறது. ஒரு மருத்துவர் தன் நோயாளியிடம், ‘இந்த மருந்து வெளிநாட்டில் இருந்து வந்து இருக்கிறது. மிகவும் சிறப்பான மருந்து. இதை நான் உங்களுக்கு இலவசமாக தருகிறேன். இந்த படிவத்தில் கையெழுத்து மட்டும் போட்டு மருந்தை பெற்றுக் கொள்ளுங்கள்’ என்கிறார். எந்த விளைவுகளும் தெரியாமல் அந்த நோயாளியும் மருந்தை பெற்று செல்கிறார். இந்த மருத்துவர் அந்த படிவங்களை காண்பித்து மருத்துவ நிறுவனங்களிலிருந்து பணம் பெற்றுக் கொள்கிறார்..”

இது, நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இழைக்கும் துரோகம் என்பதையெல்லாம் கடந்து, எவ்வளவு தூரம் அபாயகரமானது…?

ஆட்டோக்காரர்கள் வரை நீளும் கமிஷன்:

இந்த புத்தகத்தில் பல மருத்துவர்கள் பதிந்திருக்கும் இன்னொரு முக்கியமான விஷயம், கார்ப்பரேட் மருத்துவமனைகளின் வருகை தொடர்பானது. பெரும்பாலான மருத்துவர்கள், “கார்ப்பரேட் மருத்துவமனைகளின் வருகைக்கு பின்புதான், மருத்துவ தொழிலின் அறம் செத்துவிட்டது.” என்று பதிவு செய்து இருக்கிறாகள்.

இந்த பெரும் மருத்துவமனைகள், தங்கள் மருத்துவமனையை பரிந்துரைக்க மருத்துவர்கள் மற்றும் ஆய்வகங்களுக்கு பணம் தருகிறது. இவர்களுக்கு மட்டுமல்ல, தங்களது மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டுமென, ஆட்டோ டிரைவர்களுக்கு கூட இந்த மருத்துவமனைகள் பணம் தருவதாக சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

சென்னையை சேர்ந்த மருத்துவர் அர்ஜூன் ராஜகோபலன், “கார்ப்பரேட் மருத்துவமனைகளின் வருகைக்கு பின், பாவப்பட்ட நோயாளிகளின் நலனை விட, அந்த மருத்துவமனையின் பங்குதாரர்கள் நலம் பிரதானமாகிவிட்டது.” என்று இந்த புத்தகத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

இன்னும் அறத்தை நம்பும் மருத்துவர்கள் கவலையுடன், “நோயாளி, உண்மையாக அக்கறை உள்ள நேர்மையான மருத்துவரின் கையில் இருக்கிறாரா அல்லது ஒரு வணிகரின் கையில் இருக்கிறாரா என்பதை அந்த நோயாளியின் விதிதான் தீர்மானிக்கிறது..,” என்கிறார்கள் தங்கள் துறையில் நடக்கும் அவலங்களுடன் போராடிக் கொண்டு.

உரையாடல்களை வளர்த்தெடுங்கள்:

மருத்துவத்துறை சீரழிந்து போனதற்கு, மருத்துவர்கள், மருந்து நிறுவனங்கள் மட்டும் காரணம் அல்ல. பிழை, ஒவ்வொரு தனி மனிதன் மீதும் இருக்கிறது. ஆம், இப்போது யார் வெற்றிகரமான மருத்துவர்களாக பார்க்கப்படுகிறார்கள் என்றால், ஆடம்பர பங்களா, விலை உயர்ந்த கார் வைத்திருப்பவர்கள்தான். இது உண்மையில் சரியானதா…? ‘நேர்மையாக ஒரு மருத்துவர், தன் தொழிலை பார்த்தால் அவரை பொது சமூகமே கண்டுகொள்வது இல்லை’ என்று, இந்த புத்தகத்தில் பல மருத்துவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர். மருத்துவர்கள் யாரும் தேவ தூதர்கள் அல்ல… அவர்களும் நம்மைப் போல் ரத்தமும், சதையுமான சக மனிதர்கள்தான். அவர்களுக்கு நாம்தான் ஆசைகளை வளர்க்கிறோம்… பின் அவர்களை தூற்றுகிறோம்… இது எப்படி சரியாக இருக்க முடியும்…?

ஒரு மருத்துவர், ‘நான் நேர்மையாகதான் மருத்துவ தொழிலை பார்ப்பேன்’ என்று இருந்து இருக்கிறார். அதனால், அவர் மருந்து நிறுவனங்கள் தரும் பரிசு பொருட்களை புறக்கணித்து இருக்கிறார். ஆய்வகங்களுக்கு கமிஷன் தராமல் இருந்து இருக்கிறார். ஆனால், அவருக்கு மக்கள் ஆதரவும் இல்லாமல் போய் இருக்கிறது. பின் அனைத்தையும் விட்டு விட்டு, கனடாவிற்கு சென்று விட்டார். அவர் குறித்த குறிப்பு இந்த புத்தகத்தில் இருக்கிறது. இவர் விஷயத்தில் யார் மீது பிழை…?

சமூகத்தில் அறம் சார்ந்த மதிப்பீடுகள் எல்லாம் மாறிவிட்டன. பணம்தான் பிரதானம் என்று ஆகிவிட்டது. இந்த சமூகத்தின் அங்கம்தான், நீங்களும், நானும், பின் மருத்துவர்களும்… நாம் மாறமாட்டோம்… ஆனால், மருத்துவர்கள் மீது மட்டும் குற்றம் சுமத்துவோம் என்பது நியாயமாகாது…

முதலில் நாம் மாறுவோம்…. பின் நியாயமான மருத்துவர்களுடன் உரையாடல்களை வளர்த்தெடுப்போம். அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம். நமக்குள் ஒரு உணர்வுபூர்வமான பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வோம். இதுதான் உன்னதமான வழி… இதை நாம் மறுத்தலித்தால், கையில் இருக்கும் ஒரே தீப்பந்தத்தையும் அணைத்துவிட்டு, தெரிந்தே அடர் இருட்டில் கால் எடுத்து வைப்பதற்கு ஒப்பானதாகும்.

Leave a Reply