மருத்துவ மாணவர் சேர்க்கை வழக்கு: மே 9-க்கு ஒத்திவைப்பு
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. எனினும், இது தொடர்பாக விசாரிக்க ஏதுவாக மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கை மே 9ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு மூலம்தான் மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும், இரண்டு கட்டங்களாக இதற்கான தேர்வை நடத்தலாம் என்றும், அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு அவசியம் எனவும் உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இருப்பினும், இந்த உத்தரவால் மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, நிகழ் கல்வியாண்டில் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவை சார்ந்த மாநில அரசுகள் நடத்தும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரம், கர்நாடகம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநில அரசுகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுகுறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை அறிந்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று புதன்கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனில் ஆர். தவே தலைமையிலான அமர்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் விகாஸ் சிங், நீதிபதிகளிடம் கூறியதாவது:
“சில மாநில அரசுகள் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை நடத்தி வருகின்றன. அவை நிகழ் கல்வியாண்டில் நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்கலாம். தேர்வு நடைமுறை இல்லாத மாநிலங்கள் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவதை அனுமதிக்கலாம். ஆனால், தனியார் மருத்துவம், பல் மருத்துவமனை கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் போன்றவை தனியாக தேர்வு நடத்த அனுமதிக்கக் கூடாது. அவை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு முறைக்கு கட்டுப்பட வேண்டும்.
முதல் கட்டமாக கடந்த 1ஆம் தேதி தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் அதில் சரியாக செயல்படாவிட்டால் அவர்களுக்கு இரண்டாம் கட்ட வாய்ப்பாக, வரும் ஜூலை 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தேர்வை எழுத அனுமதிக்கலாம் என்ற யோசனை ஏற்புடையதாக இல்லை. அந்த யோசனை ஏற்கப்பட்டால் ஒரு பிரிவு மாணவர்களுக்கு மட்டும் கூடுதல் சலுகை காட்டுவதாக அமையலாம் என்று மருத்துவக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது’ என்றார் விகாஸ் சிங்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை வரும் மே 9ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், தமிழகத்தில் நுழைவுத் தேர்வு நடைமுறையின்றி பழையபடியே கலந்தாய்வு மூலம் மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இதை உச்ச நீதிமன்ற உத்தரவே உறுதிப்படுத்த முடியும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.