மருந்து உற்பத்தி, ராணுவம், விமான போக்குவரத்து துறைகளில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி
மத்திய அரசு முக்கியமான துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை தளர்த்தியுள்ளது. குறிப்பாக மருந்து உற்பத்தி, ராணுவம் மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அந்நிய நேரடி முதலீட்டாளர் களை ஈர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக பதவியில் தொடர விரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்த நிலையில் அந்நிய முதலீடு பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதை சரிகட்டும் விதமாக அந்நிய நேரடி முதலீடுகளில் உள்ள விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்நிய முதலீடு வரும், அத்துடன் வேலை வாய்ப்பும் பெருகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறையின்படி மருந்து உற்பத்தி துறையில் 74 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும். இதன்படி உள்நாட்டு மருந்து நிறுவனங்களில் அந்நிய நிறுவனங்கள் 74 சதவீத அளவுக்கு முதலீடு செய்ய அரசின் அனுமதி பெறத் தேவையில்லை. தற்போது 100% அளவுக்கு மருந்து உற்பத்தி துறையில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.
இதேபோல உள்நாட்டு விமான நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும். ஏற்கெனவே 49 சதவீத அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு அனுமதிக் கப்படுகிறது. அதேசமயம் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான வரம்பு 49 சதவீதமாகத் தொடரும். அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ், இன்டர்குளோப் ஏவியேஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.
மிகவும் முக்கியமான துறையாக விளங்கும் ராணுவத் துறையில் 100 சதவீத முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக இருந்தது.
கடந்த ஆண்டு மத்திய அரசு பல துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பினை தளர்த்தியது. இதன் காரணமாக அந்நிய நேரடி முதலீடு மிக அதிகபட்ச அளவான 5,546 கோடி டாலர் என்ற அளவைத் தொட்டது.
2015-ம் ஆண்டு அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து தற்போது மிகப் பெரு மளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான துறைகளில் நேரடியாக முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் திறந்த பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்துக்கு ஆதாயம்:
ஆப்பிள் இன்க் நிறுவனமானது இந்தியாவில் முதலீடு செய்ய உள்நாட்டிலிருந்து 30% வேலையாட்களை நியமனம் செய்ய வேண்டும் என்ற விதிமுறையில் இருந்து விலக்கு கோரியிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு இந்த கெடுபிடியை 3 ஆண்டுகளுக்கு தளர்த்துவதாக முடிவு செய்துள்ளது.
இத்தகவலை ஆப்பிள் நிறுவனத்துக்கு தெரிவிப்போம். அவர்கள் விருப்பப்பட்டால் இந்தியாவில் முதலீடு செய்யலாம் என தொழில் கொள்கை துறை ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார்
ராஜன் பின்விளைவை தடுப்பதற்காகவா?
இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிக்க விரும்பவில்லை என ரகுராம் ராஜன் கூறியிருக்கும் நிலையில் இந்திய பொருளாதாரத்தின் மீது நேர்மறை பார்வையை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய அறிவிப்பை மத்திய அரசு முன்வைத்துள்ளதா என ரமேஷ் அபிஷேக்கிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அபிஷேக், “நிச்சயமாக இல்லை. இது ஒரு நல்ல நாள். அதனால் இந்த அறிவிப்பை வெளியிட்டோம்” என்றார்..