மறக்கடிக்கப்பட்ட சாதனை மனுஷி!

வானவில் பெண்கள் : மறக்கடிக்கப்பட்ட சாதனை மனுஷி!

5“கணவன், குடும்பம், குழந்தை என்று பெண்ணின் உலகம் குறுகியே இருக்க வேண்டும்” என்று திருவாய் மலர்ந்தவர் ஹிட்லர். ஆனால் தன்னை உலகம் முழுக்க பிரஸ்தாபிக்கும் பொறுப்பை ஒரு பெண் திரைப்பட இயக்குநரிடம் அவர் ஒப்படைக்க வேண்டியிருந்தது.

சாகசப் பெண் லெனி

பெர்லினில் 1902-ல் பிறந்தவர் லேனி ரீஃபென்ஸ்டால். இளம் வயதில் ஓவியம் அவரது படிப்பாக இருந்தாலும், அதன் வழியே நடனக் கலை மீது ஆர்வம் பிறந்தது. அந்தக் காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் பிரபல மேடைகளில் தனது நடனத் திறமையை நிரூபித்துவந்தவரை, கால் காயமும் அறுவை சிகிச்சையும் முடக்கிப்போட்டன. இருந்தாலும் தனது தனித்துவமான உடல் மொழியின் வழியே நடனத்திலிருந்து நடிப்புலகுக்கு மடைமாறினார். அப்படியே திரைப்படத் துறையில் ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் என சகல துறைகளிலும் வியாபித்தார். இப்படித்தான் தனது 30 வயதிற்குள் 20-ம் நூற்றாண்டு திரையுலகின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவராக லேனி ரீஃபென்ஸ்டால் உருவெடுத்தார்.

லெனிக்கு மலையேற்றம் பிடிக்கும். பனிச் சறுக்கு, ஆபத்தான நீச்சல் என சாகச விரும்பி அவர். அதே சாகச ஆர்வத்தோடு திரையுலகின் அனைத்து அம்சங்களையும் சவாலாகக் கற்றுக்கொண்டார். அடுத்த தலைமுறை சினிமா மேதைகள் லெனியைக் கொண்டாட அவரது ஆர்வமும், கடுமையான உழைப்புமே காரணம்.

ஹிட்லரும் ஒலிம்பிக்கும்

ஜெர்மனியின் ஹிட்லர், நாட்டு மக்களிடமும் உலகப் பார்வையிலும் தனது மீட்பர் பிம்பத்தை பிரபலப்படுத்த விரும்பினார். ஹிட்லரின் ஊதுகுழலான கெப்பல்ஸ், அப்போது வித்தியாசமான இயக்குநராக வளர்ந்துவந்த லேனியை ஹிட்லரிடம் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நாஜி கட்சியின் பிரச்சார பேரணி, கூட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்தினார் லேனி. அந்த வகையில் உருவான Triumph of the Will என்ற 2-வது நாஜி பிரச்சாரத் திரைப்படம் ஹிட்லருக்கு மகிழ்ச்சியையும், லேனிக்குப் பெயரையும் வாரித்தந்தது. தொடர்ந்து பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஆவண திரைப்படமாக்கும் வாய்ப்பு லேனிக்கு வந்தது. சாகச விரும்பியான லேனி, அதுவரையிலான திரைப்பட மரபுகளை உடைத்துப்போட்டு, காட்டாறாய் பல காட்சிகளை சுட்டுத்தள்ளினார். உயிரோட்டமான விளையாட்டுகளையும், வீரர்களின் உணர்ச்சிப் பெருக்கையும் பார்வையாளர்களுக்குப் பாய்ச்சும் வகையில் படமாக்கினார். ஒலிம்பியா (1938) என்ற பெயரில் இரண்டு பாகங்களில் அடுத்தடுத்து வெளியான ஆவணத் திரைப்படங்களும், தொடர்ந்து லேனி உருவாக்கிய தனித்துவமான திரைப்படங்களும் அதன் பின்னரான திரையுலக மொழியின் போக்கில் புதிய அத்தியாயங்களை எழுதின.

வெட்ட வெட்ட கிளைத்த லேனி

இரண்டாம் உலகப் போரின் முடிவு நாஜி ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்டியது. நாஜி ஆதரவாளர்களில் ஒருவராகப் பல வருட சிறையும், தீவிர தொடர் விசாரணையும் மனநல சிகிச்சை பெறுமளவுக்கு லேனியை நெட்டித்தள்ளின. குற்றச்சாட்டுகள் மழுங்கியதில் லேனி விடுவிக்கப்பட்டபோது, அவரது படைப்புகள் பலவும் காணமல் போயிருந்தன. சில சிதைக்கப்பட்டிருந்தன. பறிமுதலான கேமரா மற்றும் உடமைகள் திரும்பக் கிடைத்தும் பின்லாந்து ஒலிம்பிக்கை ஆவணப்படுத்தும் அழைப்பை நிராகரித்தார்.

ஒரு வழியாகத் தன்னைத் தேற்றிக்கொண்டு திரைப்பட உலகுக்குத் திரும்பியபோது, நாஜிகளால் பாதிக்கப்பட்ட யூதர்கள் ஒருங்கிணைத்த லாபி ஒன்று லேனியைச் சுழற்றியடித்தது. லேனியும் அவரது படைப்புகளும் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் புகைப்பட கேமராவோடு ஆப்பிரிக்க நாடுகளில் ஆசுவாசமானார் லேனி. சூடானின் நூபா பழங்குடியினர் குறித்த தனது புகைப்படப் புத்தகம் மூலம் படைப்புலகை அதன் வேறொரு மூலையிலிருந்து அசைத்துப் பார்த்தார். ஆனால் கென்யாவில் கார் மற்றும் சூடானில் ஹெலிகாப்டர் என லேனி இடறிய விபத்துகள் அவரை தீவிர ஓய்வுக்குத் தள்ளின.

71 வயதில் ஆழ்கடல் சாகசம்

ஆனாலும் சாகசப் பெண்மணியான லேனி சளைக்கவில்லை. பசிபிக் கடலில் ஆழ்கடல் உயிரினங்கள் ஆராய்ச்சி தொடர்பான ஆவணப் படத்துக்காகச் சிறப்பு அனுமதியுடன் லேனி தனது கேமராவோடு மூழ்கித் திளைத்தபோது அவருக்கு வயது 71. தனது பாதையில் விழுந்த தடைகளை மீறி அடுத்த ஆவணப் படத்தை வெளியிட அவருக்கு 41 வருடங்கள் பிடித்தன. அதேபோல நாஜி முகாம் தொடர்பான விசாரணை வளையத்தை தனது 100-வது வயதில் மீண்டும் லேனி எதிர்கொண்டு மீண்டார். இரண்டு வருடங்கள்கூட நீடிக்காத திருமண வாழ்க்கை வாய்த்த லேனி, ‘ஹிட்லரின் விருப்பப் பெண்களில் ஒருவரா?’ என்ற கேள்விக்கு தன் வாழ்நாள் முழுவதும் மறுப்பு தெரிவித்துவந்தார். ஹிட்லரைச் சந்தித்தது, அவரை முழுமையாக அவதானிக்காதது ஆகியவற்றுக்காக வருத்தம் தெரிவித்தபோதும், ஒரு படைப்பாளியாகத் தனது திரை ஆக்கங்களுக்காக லேனி கடைசிவரை வருத்தம் தெரிவிக்க மறுத்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லேனி தனது 101-வது பிறந்தநாளைக் கொண்டாடிய திருப்தியோடு இறந்தார்.

வாழ்நாள் முழுவதும் விருது, விமர்சனம், புகழ், புறக்கணிப்பு என எதையும் பொருட்படுத்தாது தனது இதயத்துக்கு நெருக்கமான படைப்புகளுக்காக, தான் வகுத்துக்கொண்ட தெளிவோடும் நியாயங்களோடும் வாழ்ந்திருக்கிறார் லேனி ரீஃபென்ஸ்டால்.

Leave a Reply