மறப்போம்; மன்னிப்போம் என்பதே அதிமுகவின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்
மறப்போம்; மன்னிப்போம் என்பதே அதிமுகவின் கொள்கை என்றும், ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா உரிய விளக்கம் தந்ததால், மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்
இன்று 14வது சுனாமி நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காசிமேடு கடலுக்கு படகில் சென்ற அமைச்சர் ஜெயக்குமார், நடுக்கடலில் பால் ஊற்றியும், மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சியில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க எந்த கால அளவும் இல்லை என விளக்கம் அளித்தார். மேலும், டிடிவி.தினகரன் விரோதியல்ல, துரோகி என விமர்சித்த அவர், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் உயரழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.