மல்டிவைட்டமின் என்றால் என்ன?

மல்டிவைட்டமின் என்றால் என்ன?

டூப்பைவிட ரியல் சாகசங்கள்தான் கண்களைக் கவரும். அதுபோல, மல்டிவைட்டமின் சத்துகளைக் கொட்டித் தயாரிக்கும் மாத்திரைகளைவிட உணவு மூலம் பெறும் சத்துகளே அற்புதமானவை; நிரந்தரமான வையும்கூட. `ஒரு வாரமாக வெளியூர் போயிருந்தேன். சரியாகச் சாப்பிடவில்லை. அதனால், நானே மல்டிவைட்டமின் மாத்திரையைப் போட்டுகொண்டேன்’ எனச் சிலர் அறிவுஜீவித்தனமாகச் சொல்லிக் கேட்டிருப்போம். உணவைச் சரியாகச் சாப்பிடவில்லை என்றால், சத்துத் தேவைக்குத் தீர்வாகுமா இந்த மல்டிவைட்டமின் மாத்திரைகள், இவற்றின் தேவைதான் என்ன, யாருக்கு இந்த மாத்திரைகள் அவசியம் என்பதையெல்லாம் பார்க்கலாம்.

மல்டிவைட்டமின் என்றால்…?

வைட்டமின்களும் தாதுக்களும் உடலுக்கு அத்தியாவசியம். இவை நாம் சாப்பிடும் உணவுகள் மூலமாகவே கிடைக்கின்றன. சரியான, ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடாதவர்களுக்கு சத்துக் குறைபாடு இருக்கும். அவர்களுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டதுதான் இந்த மல்டிவைட்டமின் மாத்திரை. அதாவது, தாதுக்களும் வைட்டமின்களும் கலந்த ஒரு மாத்திரையைச் சாப்பிட்டால், அந்த வேளைக்குத் தேவையான சத்துகள் கிடைத்துவிடும்.

என்னென்ன சத்துகள்?

மல்டி-வைட்டமின் மாத்திரைகளில் இரு வகையான வைட்டமின் சத்துகள் இருக்கும்.கொழுப்பில் கரையக்கூடியவை மற்றும் நீரில் கரையக்கூடியவை.

வைட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை கொழுப்பில் கரையக்கூடியவை. இவை தேவைக்கு அதிகமாக இருந்தால், உடலுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, பி9, பி12, வைட்டமின் சி ஆகியவை நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள். இந்தச் சத்துகள் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் நிறைந்திருக்கும். இவை தேவைக்கு அதிகமாக உடலில் தங்கி விடுமோ என அஞ்ச வேண்டியதில்லை. உடலில் கூடுதலாகச் சேரும் சத்துகள், சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.

வைட்டமின் சத்துக் குறைபாட்டைக் கண்டுபிடிப்பது எப்படி?

* ரத்தப் பரிசோதனை

* சத்துக் குறைபாட்டைக் கண்டறிவதற்கான டெஸ்ட்

* அனுபவம்மிக்க மருத்துவர், நோயாளி கூறும் அறிகுறிகளை வைத்தும் கண்டுபிடிப்பார்.

சுயமாக மாத்திரை எடுப்பவர்கள் கவனிக்க!

கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்வது, அதிகமான உடல் பாதிப்புகளையும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.

நீரில் கரையக்கூடிய வைட்டமின் மாத்திரைகளில், பி-காம்ப்ளெக்ஸ் சத்துகள் இருக்கும். இதை அதிக அளவில் உட்கொள்வது, பாதிப்பை ஏற்படுத்தும்.

மருத்துவரின் பரிசோதனைக்குப் பிறகு மல்டிவைட்டமின் மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.

வைட்டமின் மாத்திரைகளில் சிலர் சாப்பிடலாம், சிலர் சாப்பிடக் கூடாது போன்ற வகைகளும் உள்ளன. வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் உட்கொள்ளும் மாத்திரைகள் ஒருவகை. அதிக வைட்டமின் சத்துகள் உள்ளவர்கள் உட்கொள்ளும் மாத்திரைகள் இன்னொரு வகை. எனவே, மாத்திரைகளை உட்கொள்ள நினைப்பவர்கள், தங்களது உடலில் வைட்டமின் குறைபாடு இருக்கிறதா அல்லது அதிக வைட்டமின் சத்துகள் இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளில், கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் அதிக அளவில் இருக்கும். எனவே, இதுபோன்ற உணவுகளைச் சாப்பிடும் பழக்கத்தை முழுமையாகத் தவிர்த்துவிட வேண்டும்.
சுயமாக மாத்திரை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள்…

* முகம், உதடு, நாக்கு, தொண்டை ஆகியவை வீக்கம் அடையலாம்.

* வயிற்றுப் பிரச்னை.

* தலைவலி.

* விரும்பத்தகாத சுவை உணர்வு நாக்கில் ஏற்படலாம்.

* சிறுநீர் அதிகமாக வெளியேறுதல்.

உணவு மூலம் கிடைக்கும் மல்டிவைட்டமின் சத்துகள்…

* அனைத்துக் காய்கறிகளிலும் கீரைகளிலும் வைட்டமின் சத்துகள் அதிக அளவில் இருக்கின்றன.

* நட்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் வைட்டமின் சத்து அதிகமாக இருப்பதால், அவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

* ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி ஆகிய பழவகைகளை உணவுப் பழக்கத்தோடு சேர்த்துக்கொள்ளலாம்.

* முட்டை மற்றும் இறைச்சிகளை வாரம் ஓரிரு முறை சாப்பிடுவது நல்லது.

* சூரிய ஒளியிலிருந்து, வைட்டமின் டி சத்தைப் பெறலாம். நாள்தோறும் 20 நிமிடங்கள் சூரிய ஒளி படும்படி இளம்வெயிலில் நிற்கலாம்.

Leave a Reply