மழையை எதிர்கொள்ள வீடுகள் தயாரா?

மழையை எதிர்கொள்ள வீடுகள் தயாரா?

home_2378432fகடந்த மழைக்காலம் நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுக்கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறது. அதிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொண்டோமா? இந்த மழைக்காலத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதில்தான் அது அடங்கியிருக்கிறது. மழைக்காலம் தீவிரமடைவதற்கு முன்னர், அதற்காக வீட்டைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். மழைக்கால வீட்டுப் பராமரிப்பில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன?

கூரைப் பாதுகாப்பு

வீட்டின் கூரையில் தண்ணீர் கசிந்தபிறகு, அதைச் சீரமைத்துக்கொள்ளலாம் என்று காத்திருக்காமல், ஆண்டுக்கு இரண்டு முறையாவது கூரையின் நிலையைச் சரிபார்த்துக்கொள்வது நல்லது. மாடியின் தரைத்தளத்தில் ஏதாவது விரிசல்கள் ஏற்பட்டிருந்தாலோ, தண்ணீர்க் கசிவுக்கான அறிகுறிகள் சுவரில் தெரிந்தாலோ அதை உடனடியாகச் சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை, வீடு கட்டி இருபது ஆண்டுகளுக்கு மேலாகியிருந்தால், கட்டுமான கலைஞர்களை அழைத்து அதன் தரத்தைப் பரிசோதித்து கொள்ளவேண்டியது அவசியம். கூரைகளில் நீர்ப் புகாமல் (water proofing) இருக்கும் தீர்வுகளை இப்போது பல ‘பெயிண்ட்’ நிறுவனங்கள் வழங்குகின்றன.

வடிகால் சீரமைப்பு

வீட்டின் வடிகால் அமைப்பை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் ஒருமுறை முழுமையாகச் சரிபார்த்துவிடுவது பல பிரச்சினைகளைத் தடுக்கும். வீட்டின் வடிகால் குழாய்கள் சேதமாகியிருந்தால் அதை உடனடியாக மாற்றிவிடுவதும் மழைக்காலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்க உதவும். அத்துடன், வீட்டைச்சுற்றிப்போடப்படும் தேவையில்லாத குப்பைகள் வடிகால் தொட்டிகளில் சென்று சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். வீட்டின் வடிகால் அமைப்பைச் சீராக வைத்துக்கொண்டால் மழைக்காலத்தில் தொற்றுநோய்களின் கவலையில்லாமல் இருக்கலாம்.

வீட்டின் உட்புறம்

வீட்டின் வெளிப்புற வேலைகளை முடித்த பிறகு வீட்டின் உட்கூரை பகுதிகளிலும், சுவர்களிலும் விரிசல்களோ, நீர்க் கசிவுகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பதைப் பரிசோதித்துப்பாருங்கள். அப்படி விரிசல் ஏதும் இருந்தால், அவற்றைச் சீர்செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.

கதவுகளும், ஜன்னல்களும்

கதவுகள், ஜன்னல்களைச் சரியாக மூடமுடிகிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்வதும் நல்லது. ஒருவேளை ஜன்னல்கள், கதவுகளின் தாழ்ப்பாள்கள் சரியாக வேலைப் பார்க்கவில்லையென்றால் அவற்றை மழைக்காலத்துக்கு முன் சரிசெய்துவிடுவது நல்லது. அத்துடன், வெளிப்புற கதவுகளில் நீர் விலக்கிகளை (Rain deflectors) பொருத்துவதும் வீட்டுக்குள் மழைத்தண்ணீர் வருவதைத் தடுக்கும்.

கதவுகள், ஜன்னல்களைச் சரியாக மூடமுடிகிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்வதும் நல்லது. ஒருவேளை ஜன்னல்கள், கதவுகளின் தாழ்ப்பாள்கள் சரியாக வேலைப் பார்க்கவில்லையென்றால் அவற்றை மழைக்காலத்துக்கு முன் சரிசெய்துவிடுவது நல்லது. அத்துடன், வெளிப்புற கதவுகளில் நீர் விலக்கிகளை (Rain deflectors) பொருத்துவதும் வீட்டுக்குள் மழைத்தண்ணீர் வருவதைத் தடுக்கும்.

கிளைகளை அகற்றுங்கள்

உங்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் மரங்களில் இறந்துபோன கிளைகள் இருந்தால், அவற்றை அகற்றிவிடுங்கள். இதனால், மழைக்காற்றின்போது மரக்கிளைகள் விழும் பாதிப்பை ஓரளவு தடுக்கலாம்.

அடித்தள பாதுகாப்பு

உங்கள் வீட்டின் அடித்தளத்தில் ஏதாவது நிலவறைகள் இருந்தால், அவற்றை ஒருமுறை ஆய்வுசெய்துவிடுங்கள். அத்துடன், மழைக்கு முன்னர் இந்த அறைகளைப் பாதுகாப்பாக நீர்புகாதபடி அடைத்துவைப்பது நல்லது.

மணல்முட்டைகள் தேவை

உங்களுடைய வீடு தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் அமைந்திருந்தால், தண்ணீர் வீட்டுக்குள் வருவதைத் தடுக்க மணல்மூட்டைகளை வாங்கிவைத்துக்கொள்வது. இந்த மணல்மூட்டைகளை வைத்து தண்ணீர் ஓரளவு வீட்டுக்குள் வராமல் தடுக்கலாம்.

அறைக்கலன்கள் பாதுகாப்பு

ஒருவேளை, வீட்டின் தரைதளத்தில் ஓரடி தண்ணீராவது நிச்சயமாகத் தேங்கும் என்றால், முக்கியமான அறைக்கலன்களை மேல்தளத்துக்கு மாற்றிவிடுவது நல்லது.

காப்பீடு முக்கியம்

இந்த எல்லா பராமரிப்பு களைவிடவும் முக்கியமானது உங்கள் வீட்டைக் காப்பீடு செய்துவைப்பது. இதனால், மழைச்சேதங்கள் பெரியளவில் நம்மை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். ஏற்கெனவே வீட்டையும், வாகனத்தையும் காப்பீடு செய்திருந்தீர்கள் என்றால், அதைக் காலவதியாகாமல் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

Leave a Reply