மழை-வெயில் காலங்களில் வீட்டை பராமரிப்பது எப்படி?
இரு நாட்களுக்கு முன்பு வரை சென்னை குளு குளு ஊட்டிபோல் இருந்தது. இப்போது மீண்டும் வெயில் தன் வேலையைத் தொடங்கிவிட்டது.
சிறிய ஆசுவாசத்திற்கு விடைகொடுத்து நாம் மீண்டும் வெயிலின் பிடிக்குச் செல்ல வேண்டியுள்ளது.
மழையின் குளிர் தாங்காமல் பூட்டியிருந்த ஜன்னல்களைத் திறக்க வேண்டியிருக்கும் பொதுவாகவே வெயில் காலத்தில்
கதவுகளையும் சன்னல்களையும் திறந்தே வைத்திருப்பது நல்லது. திறந்த நிலையில் வைக்கும்போது வீட்டுக்குள் தூசு அதிகமாக வர வாய்ப்புள்ளது. எனவே அடிக்கடி வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும். குளிர் காலத்தைக் காட்டிலும் வெயில் காலத்தைச் சமாளிப்பது மிகக் கடினம்.
பெருமளவில் வீட்டுக்குள் சூரிய ஒளி வருவதால் வீட்டுக்குள் வெப்பம் அதிகம் படரும். எனவே வீட்டின் வெப்ப நிலை அதிகரிக்கும். குளிர்சாதன வசதி கொண்டோர் குளிர்சாதனப் பெட்டியை இந்தக் கோடைக் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்த வேண்டியதிருக்கும் என்பதால் கோடைக்கு முன்னர் அதைத் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
கோடையில் மரத்தாலான நிலைக்கதவுகளும் சன்னல் கதவுகளும் சிறிய அளவில் விரிவடையும். ஆகவே கதவுகளையும் சன்னல்களையும் சரிவர மூட முடியாத நிலை ஏற்படக்கூடும். அப்படி இருக்கும் பட்சத்தில் அதைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். வீடு கட்டும் சமயத்தில் மரத்தைச் சரிவர உலர்த்தாமல் இழைத்துக் கதவுகளை உருவாக்கியிருந்தால் இதைப் போன்ற சிக்கல்கள் வரக்கூடும்.
வீட்டு மேல் பகல் முழுவதும் விழும் சூரியக் கதிர்களால் வீட்டின் வெளியேயும் வீட்டுக்குள்ளேயும் வெப்பம் நிலவும். கான்கிரீட் கட்டிடமாக இருந்தால், பகலில் பெற்றுக்கொண்ட வெப்பத்தை இரவுவரை வெளியிட்டுக்கொண்டே இருக்கும். இதைத் தவிர்ப்பதற்காக வீட்டின் கூரைப் பகுதியில் வெள்ளை வண்ணத்தைப் பூசலாம். வெள்ளை நிறம் தான் பெறும் வெப்பத்தை எல்லாம் உடனே உமிழ்ந்துவிடும். எனவே வெப்பம் கட்டிடத்தில் தங்காது. இதனால்தான் அந்தக் காலத்தில் வீடுகளுக்கு வெறுமனே வெள்ளை மட்டும் அடித்துவந்தார்கள்.
கோடைக் காலத்தில் அதிகமான அளவில் தண்ணீரைக் குடிக்க வேண்டியதிருக்கும். ஆகவே வீட்டுக்கான நீராதாரங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம். வீட்டில் நீர் சுத்திகரிப்பு கருவிகள் போன்றவற்றை வைத்திருந்தால் அது சரியாகச் செயல்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். குளிரான தண்ணீர் குடிக்க விரும்பினால் அதற்குக் குளிர்பதனப்
பெட்டியை நாடாமல் மண் பானையில் நீர் ஊற்றிவைத்துக் குளிர்ச்சியுடன் பருகலாம்.
கோடைக் காலத்தில் குறைந்தது இருமுறையாவது குளிக்க நேரும். அதிக முறை கால், கை முகம் ஆகியவற்றை நீரால் கழுவிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். ஆகவே குளிர்காலத்தைவிட அதிக அளவில் தண்ணீர் செலவுக்கான அவசியம் உள்ளது. ஆகவே குளியலறைக் குழாய்களையும் நீர் தரும் மோட்டரையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அவற்றில் ஏதாவது பழுது இருந்தால் அவற்றை உடனே சரியான நிபுணரைக் கொண்டு சரிசெய்துகொள்ள வேண்டும். மேலும்
வீட்டில் தோட்டம் வைத்துப் பராமரிப்பவர்கள் செடி கொடிகளுக்குத் தேவையான
தண்ணீரை இறைத்துத் தரும் மோட்டார் போன்றவற்றை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். கோடையில் மனிதர்களைப் போல தாவரங்களுக்கும் அதிக அளவில் நீர் தேவைப்படும் என்பதால் நீரின்றி அவை வாடிவிடலாகாது.
கோடைக்குத் தேவையான முன்னேற்பாட்டுடன் வீட்டு விஷயத்தில் நடந்துகொண்டால் பிரச்சினை ஏற்பட்ட பின்னர் தவிக்க வேண்டிய நிலையைத் தவிர்த்துவிடலாம்.