மவுசு கூடும் சென்னை
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் கோல்ட்வெல் பேங்கர் (Coldwell Banker). இந்நிறுவனம் ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் காலடி பதித்தது. தனது முக்கிய முகமைக் கிளையை (franchisees) பெங்களூருவில் கொண்டிருக்கும் இந்நிறுவனம் இந்தியா முழுவதிலும் இதுவரை ஒன்பது முகமைக் கிளைகளைத் தொடங்கி நடத்திவருகிறது.
2015-ம் ஆண்டுக்குள் மேலும் முப்பது முகமைக் கிளைகளைத் தொடங்கவும் 2018-ம் ஆண்டுக்குள் சுமார் நூறு முகமைக் கிளைகளை ஏற்படுத்தவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அதன் மேலதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்திய கோல்ட்வெல் பேங்கர் நிறுவனத்தின் செயல்கள் & கொள்கைகளுக்கான துணைத் தலைவர் மோனா ஜலோட்டா தெரிவித்த தகவலின் அடிப்படையில், சென்னையில் குடியிருப்புத் திட்டங்களைச் செயல்படுத்த அதிக வாய்ப்புள்ளதாகவும் ஆகவே வரும் செப்டம்பர் மாதத்துக்குள் சென்னையில் இதன் முகமைக் கிளைகள் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
பொதுவாகச் சென்னைக்குப் புதிதாக வரும் பெரும்பான்மையான சர்வதேச நிறுவனங்கள் வணிக வளாகம் தொடர்பான ரியல் எஸ்டேட் வர்த்தகங்களில் ஈடுபடுவதையே விரும்பும், பெரும்பாலானவை அடுக்குமாடி வீடுகளை உருவாக்கும் குடியிருப்புத் திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என மோனா கூறுகிறார்.
ஆனால் கோல்ட்வெல் நிறுவனம் இந்த விஷயத்தில் மாறுபடப் போகிறது என்கிறார் அவர். அதிக அளவில் குடியிருப்புத் திட்டங்களை உருவாக்கப்போகிறது என்று சொல்கிறார் மோனா. சென்னை ரியல் எஸ்டேட் துறை உள்ளூர் வாசிகளுக்கும், உள்ளூர் முதலீட்டாளர்களுக்கும், தேசிய அளவிலான முதலீட்டாளர்களுக்கும்
அதைப் போல் சர்வதேச முதலீட்டாளர் களுக்கும் வாய்ப்பளிக்கும் எனத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
சென்னையின் குடியிருப்புத் திட்டங்களுக்கான விலை பெருமளவில் மாறுபடாமல் நிலையாக இருப்பதாகவும், ஆனாலும் இரண்டு முதல் ஐந்து சதவீதம் விலை உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். சென்னை ரியல் எஸ்டேட் துறை 2015-ல் நிதானமான வளர்ச்சியை வெளிப்படுத்திவருகிறது என்றும், மேலும் இந்த ஆண்டு முழுவதும் பெரிய ஏற்ற இறக்கங்கள் அற்ற நிலையான சந்தையாகவே சென்னை ரியல் எஸ்டேட் இருக்கும் என்றும் உள்ளூர் தகவல்களைச் சுட்டிக்காட்டி தெரிவிக்கிறார்.
நேரடியாக வீடுகளை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோரே சென்னையில் 75-80 சதவீதமானோர் எனவும் அவர்களே ரியல் எஸ்டேட் வளர்ச்சியை முடுக்குபவர்கள் எனவும் கருத்து தெரிவிக்கிறார். ஆகவே நீண்ட கால முதலீட்டுக்கான அடித்தளத்தை இது அமைத்து தரும் என்றும் சந்தை தடுமாற்றம் காணும் வாய்ப்பை இது குறைத்துவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
2014-ம் ஆண்டில் கடைசி நான்கு மாதங்களில் சென்னையில் அதற்கு முந்தைய நான்கு மாதங்களில் விற்பனைக்குத் தயாரான வீடுகளைவிட அதிக வீடுகள் விற்பனைக்குத் தயாராக இருந்தன. அப்போது காலியாக இருந்த வீடுகளைவிடக் கடைசி நான்கு மாதங்களில் காலியாக இருந்த வீடுகளின் எண்ணிக்கை குறைவு என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். ஆகவே சென்னை ரியல் எஸ்டேட் இந்த ஆண்டில் முதலீட்டாளர்களுக்கு அனுகூலமானதாகவே இருக்கும் என்று நம்ப முடிகிறது.