மாத்திரை சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

மாத்திரை சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

மாத்திரையை தண்ணீர் அல்லது டீயில் சாப்பிட வேண்டியதானே, இதில் என்ன கவனிக்க வேண்டிய விஷயம் என்று நினைப்பவர்களுக்கு இந்த செய்தி பயனாக இருக்கும்

மாத்திரைகளைச் சிலர் வாயில் போட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். சிலர், வாயில் தண்ணீரை விட்டுக்கொண்டு மாத்திரை போடுவார்கள். அப்படியே வெறும் வாயில் விழுங்கிவிடுபவர்கள்கூட உண்டு. மேலும், காபி, டீ, குளூக்கோஸ் கரைசல், ஜூஸ், குளிர்ந்த நீர், வெந்நீர் என எந்தத் திரவப் பொருள் கிடைத்தாலும் அதனோடு சேர்த்து விழுங்குபவர்களும் உண்டு. இப்படி மாத்திரையை எதனோடு சேர்த்தும் எடுத்துக்கொள்ளலாமா… மாத்திரை எடுத்துக் கொள்ளும் சரியான முறைகள் என்னென்ன? பார்க்கலாம்.

மாத்திரைகள், வயிற்றில் உள்ள அமிலத் தன்மையைப் பொறுத்துச் செயல்படுகின்றன. பொதுவாக, உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர், உணவு உண்ட 20 நிமிடங்களுக்குப் பின்னர் என இரண்டு முறைகளில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவு உண்பதற்கு முன்னதாக எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளின் செயல்பாடு மிதமானதாக இருக்கும். உணவு உண்ட பின்னர் எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகளின் செயல்பாடு தீவிரமாக இருக்கும்.

நோய் தீர்க்கும் மாத்திரைகள், வைட்டமின், இரும்புச்சத்து மாத்திரைகள் போன்றவை பெரும்பாலும் உணவுக்கு பின்னர்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அசிடிட்டி மாத்திரை, வாந்தி நிற்கும் மாத்திரை போன்றவை உணவுக்கு முன்னர் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றன.

வாய்கொள்ளும் அளவுக்குச் சிறிது நீரைப் பருகி, அதில் மாத்திரையைப் போட்டு விழுங்குவதுதான் சரியான முறை. இதனால், விழுங்கும் மாத்திரை உணவுக்குழாயில் தடைபடாமல் செல்லும். நீரால் மாத்திரைக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. மாத்திரையை விழுங்கியப் பின்னர் நான்கு முதல் ஐந்து மடக்கு நீர் பருக வேண்டும். வெதுவெதுப்பான நீரில் மாத்திரையை விழுங்குவது நல்லது.

மாத்திரையை நீரில் கரைத்துக் குடிப்பதும் சரியான முறையே. இதனால், மாத்திரையை எடுத்துக்கொள்ளும் முறை எளிதாகிறது. பெரும்பாலும், ‘குழந்தைகளுக்கு மாத்திரையை நீரில் கரைத்துக் கொடுங்கள்’ என்பதே மருத்துவரின் பரிந்துரையாக இருக்கிறது.

பாலுடன் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை எடுக்கும்போது, கால்சியத்துடன் ஆன்டிபயாட்டிக் வினைபுரிந்து நீரில் கரையாத கால்சியம் உப்பை உருவாக்கிவிடும். மாத்திரையின் பலனும் வீணாக, முற்றிலுமாகக்கூட வெளியேறலாம். இதனால், மாத்திரை சாப்பிடுவதால், எந்தப் பலனும் கிடைக்காத நிலை உருவாகும். நோயில் இருந்து குணமாதல் தாமதமாகும். மாத்திரை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது பிறகு பால் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.

மாத்திரைகளைப் பொடித்தோ, கேப்ஸ்யூல் மாத்திரைகளை திறந்து, நேரடியாக எடுத்துக்கொள்வதோ தவறு. சில மாத்திரைகள் எந்த நேரத்தில் செயல்பட வேண்டும் என்பதைப் பொறுத்து தயாரிக்கப்பட்டிருக்கும். இதை பொடித்துச் சாப்பிடும்போது, மாத்திரையின் செயல்திறன் குறையலாம். சில மாத்திரைகளில், வெளிப்புறம் உடனடியாக கரைந்து பலன் அளிக்கும் வகையிலும், உள்புறம் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து பிறகு கரையும் வகையிலும் இருக்கும். இதைப் பொடித்து சாப்பிடும்போது பலனளிக்காமல் போய்விடலாம். டாக்டர் பரிந்துரைத்தால் தவிர, பொடித்துச் சாப்பிடக் கூடாது.

தவறான முறைகள்

ஐஸ் வாட்டர் உடன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, மிகவும் தவறான முறை. பொதுவாக, உணவு உண்ட பின்னர் ஐஸ் வாட்டர் குடித்தாலே, உணவு செரிமானம் தாமதமாகிவிடும். மாத்திரையையைக் குளிர்ந்த நீரில் எடுக்கும்போது, மருந்து செயல்படும் நேரத்தைத் தாமதப்படுத்தி விடும்.

நீரானது உணவுடன் சேர்த்து வயிற்றிலேயே நீண்ட நேரம் தங்கிவிடும். அவ்வாறு, நீண்ட நேரம் வயிற்றில் தங்குவதால், கொழுப்புக்கட்டிகள் உருவாகும். மேலும், வயிற்றில் உள்ள கொழுப்புக் கட்டிகள் கரையாமல் உடல்பருமனை அதிகரிக்கச் செய்யும். ஐஸ் வாட்டருடன் மாத்திரையைச் சேர்த்துச் சாப்பிடும்போது, தொண்டைவலி ஏற்படும். சளி பிடிக்கக்கூடும்.

காபி, டீயோடு சேர்த்து மாத்திரையை எடுத்துக்கொள்வது மிகவும் தவறான முறை. இவற்றில் உள்ள காஃபின், மாத்திரையில் உள்ள வேதிப்பொருட்களுடன் வினைபுரியக்கூடும். உதாரணமாக, காபியுடன் சேர்த்து இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், காபியில் உள்ள காஃபின், மாத்திரையில் உள்ள இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைத் தவிர்த்துவிடும். எனவே, மாத்திரை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது ஒரு மணி நேரம் கழித்து காபி, டீ அருந்தலாம்.

மாத்திரைகளை நீர் இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு எடுத்துக்கொண்டால், தொண்டையில் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்படலாம். சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தலாம். தொண்டை வறட்சியை ஏற்படுத்தும். உணவுக்குழாயில் மாட்டிக்கொண்டால், அசெளகரியமான உணர்வு ஏற்படும். சில மாத்திரைகளின் சுவை நாவுக்கு ஒவ்வாதபோது குமட்டல் உணர்வு, வாந்தி ஏற்படும்.

Leave a Reply