மாயமான விமானத்திற்கு நாசவேலை காரணமா? பாதுகாப்பு அமைச்சர் பதில்

மாயமான விமானத்திற்கு நாசவேலை காரணமா? பாதுகாப்பு அமைச்சர் பதில்

manohar parikarசென்னை தாம்பரத்தில் இருந்து கிளம்பிய இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் குறித்த தகவல் இன்னும் தெரியாத நிலையில் இந்த விமானம் மாயமானதற்கு நாசவேலை காரணமா? என்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், ‘அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு’ என்று பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. எம்.பி திருச்சி சிவா பேசுகையில், ‘விமானத்துடனான கடைசி தொடர்பு மற்றும் ரேடாரில் இருந்து மறைந்ததற்கு இடைப்பட்ட 30 நிமிடங்களில் நடந்தது என்ன? என்பது குறித்து அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியை பிரான்ஸ் நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளது. அதுபோன்ற நிறுவனங்கள் இப்போது தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதா?’ என்று கேட்டார்.

திருச்சி சிவாவின் இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் கூறுகையில், “விமானம் திடீரென காணாமல் போனதால் நான் குழப்பமடைந்தேன். காணாமல் போன தகவல் இரண்டாம் ரேடாரில் பதிவாகி உள்ளது. முதன்மை ரேடார் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் செல்ல முடியாது. மேகங்கள் அதிகமாக இருந்ததால் வேறு பாதையில் விலகிச் சென்றுகொண்டிருப்பதாக விமானிகள் தெரிவித்தனர்.

விமானம் மாயமானதற்கு நாசவேலை காரணமாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு. விமானத்தில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் கிடையாது. தேடும் பணியை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகின்றேன். விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினரிடம் தேடுதல் பணி குறித்த தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தேடும் பணிக்கு உதவுவதற்காக அமெரிக்காவிடம் இருந்து கடல் இமேஜரியை கேட்டுள்ளோம். காணாமல் போன அந்த விமானம் எத்தனை ஆண்டு பழமையானது என்பது சரியாகத் தெரியவில்லை.” என்று கூறினார்

Leave a Reply