மிக விலை உயர்ந்த அலுவலக இடம் 9-வது இடத்தில் டெல்லி கன்னாட் பிளேஸ்
சர்வதேச அளவில் மிக விலையுயர்ந்த அலுவலக இடங்களில் டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் 9-வது இடத்தை பிடித்துள்ளது. கன்னாட் பிளேஸில் ஒரு ஆண்டுக்கு ஒரு சதுர அடிக்கு 105.71 டாலர் வாடகையாக உள்ளது என பிராப்பர்டி ஆலோசனை நிறுவனமான சிபிஆர்இ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சிபிஆர்இ நிறுவனம் சர்வதேச அளவில் மிகவும் விலை உயர்ந்த அலுவலக இடங்களை ஆய்வு செய்துள்ளது. இதுதொடர்பாக `குளோபல் பிரைம் ஆபிஸ் ரெண்ட்ஸ்’ என்ற பெயரில் அதிக விலையுயர்ந்த இடங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்பளக்ஸ் 19-வது இடத்தில் உள்ளது. மும்பையின் முக்கிய வணிக இடமான நாரிமன் பாயிண்ட் 30-வது இடத்தில் உள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் விலையுயர்ந்த அலுவலக இடங்களில் ஹாங்காங் சென்ட்ரல் முதலிடத்தை பெற்றுள்ளது. இங்கு ஆண்டுக்கு 264.27 டாலர் (ஒரு சதுர அடிக்கு) வாடகையாக உள்ளது. பெய்ஜிங்கில் உள்ள பைனான்ஸ் ஸ்ட்ரீட் மற்றும் ஹாங்காங்கில் உள்ள கவ்லூன் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுள்ளன.
பெய்ஜிங்கில் உள்ள சிபிடி 4-வது இடத்தை பிடித்துள்ளது. லண்டனில் உள்ள வெஸ்ட் எண்ட் 5-வது இடத்தையும் நியூயார்க் நகரத்தில் உள்ள மிட்டவுன் மன்ஹாட்டன் 6-வது இடத்தையும் டோக்கியோ நகரத்தில் உள்ள மருனொச்சி 7-வது இடத்தையும் ஷாங்காய் நகரத்தில் உள்ள புடாங் 8-வது இடத்தையும் பிடித்துள்ளன.
“கடந்த இரண்டு வருடங்களாக வணிக மையங்களுக்கான ரியல் எஸ்டேட் நேர்மறையாக இருந்து வருகிறது. பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் இது போன்ற விலையுயர்ந்த அலுவலக இடங்களை விரும்புகின்றனர்’’ என்று சிபிஆர்இ இந்திய தலைவர் அன்ஜூமன் மேகசைன் தெரிவித்துள்ளார். மேலும் கன்னாட் பிளேஸ் இந்தியாவின் தலைநகரத்தின் மையப்பகுதியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிறப்பான உள்கட்டமைப்பு வசதியும் மற்ற இடங்களுக்கான இணைப்பும் சிறப்பாக அமைந்துள்ளதால் எந்த தொழிலுக்கும் ஏற்ற அலுவலகமாக கன்னாட் பிளேஸ் இருக்கிறது என்று தெரிவித்தார்.