மிதியடிகளை மதிப்போம்

மிதியடிகளை மதிப்போம்

வீட்டில் தூசு எப்படிச் சேரும்? வெளியிலுள்ள தூசுகளைக் காற்று வீட்டுக்குள் இழுத்து வரும். ஆனால் காற்றைவிட நாம் வீட்டுக்குள் இழுத்துவரும் தூசுகள்தாம் அதிகம். நாமே எப்படி நம் வீட்டுக்குள் தூசுகளை இழுத்து வருவோம் எனத் தோன்றுகிறதா? காலணிகள் மூலமாகத்தான் வீட்டுக்குள் கூடுதல் தூசுகள் வந்து சேர்கின்றன. இதைத் தவிர்க்கத்தான் மிதியடிகள்.

வெளியில் உள்ள அழுக்கு மற்றும் மண் வீட்டுக்குள் செல்வதைத் தடுப்பதோடு வேறு பல பலன்களும்கூட மிதியடிகளால் உண்டு. மழைக் காலத்தில் நனைந்தபடி வெளியே செல்பவர்கள் நனைந்தபடி வீட்டுக்குள் நுழைந்து வீடு முழுவதும் ஈரமாக்குவதை மிதியடிகள் தடுக்கின்றன. வீட்டுக்குள் மண்ணும் ஈரமும் பரவாமல் தடுப்பதால் மிதியடிகள் பல விபத்துகளையும் தடுக்கின்றன.

மிதியடிகளைப் பயன்படுத்துவது வீட்டை ஆரோக்கியமாக வைக்க அவசியமாகிறது. அதேபோல் சரியான மிதியடிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் வீட்டுக்குள் தூசு கவிவதைத் தடுக்க முடியும். அதேசமயம் பரிமரிப்புக்கு எளிதாக உள்ள மிதியடிகளை வாங்குவதே புத்திசாலித்தனம்.

உங்கள் வீட்டுக்குப் பல வாயில்கள் இருக்கலாம் – முன் வாசல், பின் வாசல், பக்கவாட்டு வாசல் என்பது போல். ஒவ்வொரு வாசலுக்கும் ஒரு மிதியடி இருப்பது அவசியம். சொல்லப்போனால் அதிகம் புழங்கும் ஒவ்வொரு அறைவாசலிலும்கூட மிதியடிகளைப் போட்டு வைப்பது நல்லது.

மிக அதிகமாகப் பயன்படும் நிலைவாயிலினருகே இரண்டு மிதியடிகளை அடுத்தடுத்துப் போட்டு வைப்பது புத்திசாலித்தனம். அப்போதுதான் ஒன்றில் நம் பாதம் படாவிட்டாலும் இன்னொன்றில் நிச்சயம் படும். நடமாடும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த ஏற்பாடு மேலும் அவசியம்.

அழுக்குகள் தஞ்சமடையும் இடம் என்பதால் வெளிறிய நிறம் கொண்ட மிதியடிகளைத் தவிர்ப்பது நல்லது. அழுத்தமான வண்ணம் கொண்ட மிதியடிகளைப் பயன்படுத்துங்கள்.

மிதியடிகள் பொதுவாக அதிகக் காலத்துக்கு உழைக்கும் பொருட்களால்தான் உருவாக்கப்படுகின்றன. தேங்காய் நார், பனைநார், நைலான், ரப்பர், துணி ஆகியவற்றால் தயாரிக்கப்படும் மிதியடிகள் அதிகம்.

நீர் தேங்கக் கூடிய இடத்தில் மிதியடிகளைப் பயன்படுத்துவது நல்லது என்று முடிவெடுத்து ஃப்ரிஜ், குளியலறை, கழிவறை ஆகியவற்றின் அருகே மிதியடிகளைப் போடுவதுண்டு. குளியலறை அருகே போடப்படும் மிதியடி, ஒரு துவாலையைப் போல, ஓரளவு ஈரத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையைக் கொண்டிருக்கும்.

ஆனால் இதில் ஒரு பாதகமான அம்சமும் உண்டு. அதாவது இந்த மிதியடியில் தடுக்கி விழவும் வாய்ப்பு உண்டு. அதுவும் சமையலறையில் மிதியடிகளைப் பயன்படுத்துவதில் பாதகம் அதிகம்கூட. சூடான பொருளைச் சுமந்து செல்லும்போது தடுக்கி விழுந்தால் என்னாவது?

மாடிகள் கொண்ட வீடு என்றால் ஒவ்வொரு தளத்திலும் மிதியடிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மிதியடி நைந்திருந்தால் அதை உடனே மாற்றிவிடுவது நல்லது. இல்லையென்றால் கால் தடுக்கி விழ வாய்ப்பு உண்டு. மெல்லிய மிதியடிகள் வேண்டாம். அவை சட்டென மடிந்து நாம் வழுக்கிவிட வாய்ப்பு உண்டு. தரைகளுக்கேற்ற மிதியடிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஓரளவு வழுக்கும் தரையென்றால், வழுக்கும் தன்மை சிறிதும் இல்லாத இறுக்கமான மிதியடிகளே நல்லது.

சில வீடுகளில் குழந்தைகளைக் காலணிகளோடு வீட்டுக்குள் செல்ல அனுமதிப்பார்கள். இது தவறு. ஏனென்றால் அழுக்குத் தூசியோடு நோய்க் கிருமிகளும் உள்ளே செல்ல வாய்ப்பு மிக அதிகம்.

மிதியடிகளை அவ்வப்போது சுத்தம் செய்யத் தவறக் கூடாது. மிதியடிகளை வீட்டுக்கு வெளியே எடுத்துச் சென்று நன்கு உதறினால்கூடப் போதுமானது. அவ்வப்போது வாக்குவம் க்ளீனர் மூலம் அவற்றிலுள்ள அழுக்குகளை நீக்கலாம். சிலர் திரவ சோப், மற்றும் ப்ரஷ் கொண்டு வெதுவெதுப்பான நீரில் மிதியடிகளை சுத்தம் செய்வதுண்டு. நல்லதுதான். ஆனால் மிதியடிகள் நன்றாக உலர்ந்த பிறகே அவற்றை மீண்டும் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். இல்லையென்றால் வழுக்கும் அபாயம் உண்டு என்பதோடு பூச்சிகள் சேரவும் அது வழிவகுக்கும்.

வாசலில் காணப்படும் மிதியடிகளில் ‘நல்வரவு’ ‘WELCOME’ போன்ற வார்த்தைகள் காணப்படுவதுண்டு. தன்னைத் தோண்டுபவர்களையும் பூமி தாங்குகிறது என்கிறது ஒரு குறள். மிதியடிகளும் கூட ஒரு விதத்தில் அப்படித்தான் என்று தோன்றுகிறது.

Leave a Reply