மின்னஞ்சல் முகவரி வேலைவாய்ப்பைப் பறிக்குமா?
இன்றைய இளைஞர்கள் எதைப் படித்தால் ஜெயிக்கலாம் என்று திட்டமிட்டுத்தான் படிப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், படிப்பு முடிந்ததும் வேலைக்கான நேர்காணலில் பலர் சறுக்குகிறார்கள். “என்னைவிட குறைவான மதிப்பெண்தான் பெற்றிருக்கிறான். ஆனால், அவனுக்கு வளாகத் தேர்விலேயே இடம் கிடைத்துவிட்டதே? என்னிடம் என்ன குறை? ஏன் எனக்கு அந்த வேலை கிடைக்கவில்லை?” – இப்படிப்பட்ட கேள்விகள் வேலை தேடும் பலருக்கும் இருக்கும்.
இன்று வேலைவாய்ப்புக்குப் பல்முனைப் போட்டி நிலவுகிறது. படிப்பை முடித்ததுமே வேலை தேடும் புதியவர்கள், கடந்த ஆண்டு படிப்பை முடித்துவிட்டு இன்றுவரை வேலை கிடைக்காமல் தேடும் ஒரு குழுவினர், வேலையை இழந்துவிட்டுப் புதிய வேலை தேடும் சிலர், வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு வேலை தேடுகிறவர்கள் எனப் பலதரப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களும் வேலை தேடுகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டுமா?
நேர்த்தி அவசியம்
வேறு எதையும்விட தேர்வுக்கு முன்னர் உங்களைத் தயார் செய்துகொள்வது முக்கியம்.
உங்கள் ரெஸ்யூமைப் புதுப்பித்து, புது அச்சு எடுத்து, தேதி போட்டு, மறக்காமல் கையொப்பம் இட்டு, சீராக அடுக்கி ஒரு கோப்பில் வைத்துக்கொள்ளுங்கள். தேர்வு நடத்துகிறவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஒரு தொகுப்பைத் தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
எக்காரணம் கொண்டும் ஜெராக்ஸ் காப்பியை எடுத்துச் செல்ல வேண்டாம். நூறாவது முறை தேடியும் வேலை கிடைக்காதவர் என்ற தவறான அபிப்பிராயத்தை அது ஏற்படுத்தலாம்.
எட்டாக மடித்து பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வந்து ரெஸ்யூமைக் கொடுப்பது, வேறு நிறுவனத்தின் பெயர் எழுதிய, தேதியை மாற்றாத பழைய ரெஸ்யூமைச் சமர்ப்பிப்பது, இவையெல்லாம் தவறான அணுகுமுறை.
மறக்காமல் உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிடுங்கள். 007, ஸ்வீட்டி, பேபி, ராக் ஸ்டார் , ட்ரீம் பாய் என்று விளையாட்டுத்தனமான மின்னஞ்சல்களைக் கொடுக்க வேண்டாம். அது உங்கள் மீதான மதிப்பைக் குறைத்துவிடும்.
நிரந்தரமான கைபேசி எண்ணைக் கொடுங்கள். சில நேரம் சில மாதங்களுக்குப் பின்னர் நீங்கள் அழைக்கப்படும் வாய்ப்பு உருவாகலாம். அப்போது உங்கள் பழைய எண் மாறியிருந்தால் வாய்ப்பை இழக்கக்கூடும்.
எந்த நிறுவனத்துக்கு தேர்வுக்குப் போகிறீர்களோ அந்நிறுவனம் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்துகொள்ளுங்கள். இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் தனியாக இணையதளம் வைத்திருப்பதால் தகவல்களைத் திரட்டுவது எளிது.
இயல்பாக இருங்கள்
நிறுவனத்துக்குள் அடி எடுத்துவைப்பது முதல் தேர்வு முடியும்வரை பல இடங்களில் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.
நகம் கடிப்பது, மூக்கு நோண்டுவது, தலை முடியில் சதா கை வைத்தபடி இருப்பது, கைபேசியைச் சதா பார்த்துக்கொண்டே இருப்பது, கோணல்மாணலாக அமர்வது, இருக்கையை மாற்றிக்கொண்டே இருப்பது போன்றவை நீங்கள் பதற்றமாக இருப்பதைக் காட்டிக் கொடுத்துவிடும்.
அக்கம் பக்கம் அதிகம் பேசுவது, மிக ரகசியமாக பேசுவதாய் நினைத்துக்கொண்டு முகத்தில் நவரசம் காட்டுவது, தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பியபடி இருப்பது, மிக இறுக்கமான முகத்தோடு இருப்பது போன்றவை அனைத்துமே கண்காணிக்கப்படும்.
அலுவலகத்துக்குள் நுழைந்தது முதல் ஒரு சிறிய புன்னகையோடு நிமிர்ந்து மிகச் சரியாக அமர்ந்து, சூழலை உள்வாங்கிக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மட்டுமே மிக மெதுவாக, முக பாவம் மாறாமல் மென்மையாக அடுத்தவரிடம் பேசுங்கள்.
ஆடைகளில் கவனம் தேவை
ஆள் பாதி ஆடை பாதி என்பதால் உடைகளில் கவனம் தேவை. ஆண்கள் தங்கள் நிறத்துக்கும் உருவத்துக்கும் பொருத்தமான ஒரு ஃபார்மல் உடுப்பை மிகச் சுத்தமாக அணிய வேண்டும். காலணிகளைப் பளிச்சென்று சுத்தம்செய்து, துவைக்கப்பட்ட காலுறை அணிந்து செல்லுங்கள்.
ஒரு முறை மிகத் தகுதியான நபர் ஒருவரின் ரெஸ்யூம் எங்கள் கையில் கொடுக்கப்பட்டது. வந்தவரை எங்கள் முன் அமரச் சொன்னோம். சில நொடிகளில் அந்தக் குளிர்சாத அறையில் துர்நாற்றம் வீசியது. என்னுடன் இருந்த சக தேர்வு அதிகாரி அந்த நபரிடம், “நீங்கள் போகலாம், நாங்கள் மின்னஞ்சல் அனுப்புகிறோம்” என்று கூறி அனுப்பிவிட்டார். காலுறைகளில் சேரும் வியர்வை, துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மிகக் கவனமாக இருங்கள். உங்கள் மீதும் வியர்வை வாடை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் .
பெண்கள் தங்களின் முகம் மிகத் தெளிவாக,நேர்த்தியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். நெற்றியில் பொட்டு அதன் மீது கொஞ்சம் விபூதி, அதன் மேல் குங்குமம், மேலே கொஞ்சம் செந்தூரம் என்று நெற்றியை மதச் சின்னமாக்க வேண்டாம். பக்தி மனதில் இருந்தால் போதும்.
உடை கண்ணை உறுத்தாமல், உங்களுக்குப் பாந்தமாய் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். தலையில் பூ வேண்டாம். தலைமுடி சீராக இருக்கட்டும். உதடுகளில் வெறும் லிப் பாம் அல்லது மெல்லிய நிறம் கொண்ட லிப்கிளாஸ் போதும். நகங்களைச் சுத்தமாக வெட்டுங்கள் அல்லது நகப்பூச்சு புதிதாக இருக்கட்டும். அரைகுறையாய் பத்து நாள் முன்னர் பூசிய நகப்பூச்சைச் சுத்தம் செய்யாமல் போக வேண்டாம். கைகுலுக்கும்போதோ நீங்கள் உங்கள் ஃபைலைக் கொடுக்கும்போதோ உங்கள் கைகள் சுத்தமாய் இருக்க வேண்டியது மிக முக்கியம்.
விசாலப் பார்வை வேண்டும்
நீங்கள் படித்தவை மட்டுமே கேட்கப்படும் என்று நினைத்தால் மிகத் தவறு. எந்தத் துறை எடுத்திருந்தாலும் அந்தத் துறை சம்பந்தப்பட்ட மிக முக்கியமான செய்திகளைத் தெரிந்துகொள்ளுதல் மிக அவசியம். அது குறித்து இன்று உலக அரங்கில் என்ன நடக்கிறது என்பதும் தெரிந்திருக்க வேண்டும். அதை மேலும் விரிவுபடுத்துதல், மேன்மை அடையச் செய்தல் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படலாம். இவை தவிர உங்கள் மனப்பான்மை, ஆளுமை, பகுத்து ஆராயும் திறன் போன்றவையும் சோதிக்கப்படும். அதனால் எதற்கும் தயாராகச் செல்லுங்கள். கேள்விகளுக்குத் தயக்கம் இன்றித் தெளிவாகவும் உறுதியுடனும் பதில் சொல்லுங்கள். இதுவே உங்களை எடுத்துக்காட்டும்.